மாணவிகள் எதிர்காலத்தைப் பாழாக்கியது யார்?

சீருடையில் இருக்கும் நான்கு மாணவிகளும், சில இளைஞர்களும் ஒன்றாக அமர்ந்து மதுஅருந்தும் வீடியோகாட்சிகள், சமீபத்தில் வைரலாகின. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவிகள்தான் மதுபோதையில் இருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது.

ss

இதையடுத்து, கல்லூரியின் ஒழுங்குக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, நான்கு மாணவிகளையும் கல்லூரியை விட்டு நீக்குவதாக உத்தரவிட்டது நிர்வாகம். அந்த உத்தரவு நகலும் வைரலானது. இதைக்கண்ட மாணவிகளின் பெற்றோர் நிலைகுலைந்து போனார்கள். சம்பந்தப்பட்ட மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், மாணவிகளை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியதோடு, அதை வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்டு மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடியது யார் என்பதை அறிய சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த ஆறுமாதங்களில் பதினைந்துக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாகை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளன. அதுதொடர்பாக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆர்.டி.ஓ.விடம் மனுகொடுத்திருக்கிறார் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சங்கமித்திரன்.

அவரிடம் பேசியபோது ""மாணவ, மாணவிகள் செய்யும் தவறுகளைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது காவல்துறை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும். மாணவிகள் கல்லூரிக்கு வெளியில் தவறு செய்ததால் அதில் தங்களுக்குப் பொறுப்பில்லை என்று நிர்வாகம் கழன்று கொண்டதும், மாணவிகளை கல்லூரியை விட்டு நீக்கியதும் தவறான உதாரணம். மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்கு குடும்பமும், கல்லூரியும், சமூக அமைப்புகளும் ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.

-க.செல்வகுமார்

Advertisment

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர்?

இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 30-ந் தேதி நடந்தது. ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சோப்புநுரை பேமஸ் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன், வேலம்பாளை யத்தில் தனது வாக்கினைப் பதிவுசெய்ய வந்திருந்தார்.

ஓட்டுப்போட வரிசை யில் நின்ற கருப்பணன், ஓட்டுப்போட்டவர்கள், ஆங்காங்கே நின்றவர்கள் அனைவரையும் தனக்குப் பின்னால் நிறுத்தி போட்டோவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார்.

s

வாக்களித்துவிட்டுத் திரும்பியவர் பத்திரிகையாளரிடம் பேசத் தொடங்கினார். ""இப்போ தமிழ்நாட்டுல நம்ம கட்சியின் நல்லாட்சி நடக்குது. அதனால, அ.தி.மு.க.வுக்கு உள்ளாட்சித் தேர்தல்ல 90 சதவீதம் வெற்றி உறுதி. ஸ்டாலின்தான் மூணு வருஷமா தேர்தல் நடக்காததற்குக் காரணம். அவரு எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிட்டே இருக்காரு. நீங்க வேணும்னா பாருங்க. வர்ற 2021 சட்டசபைத் தேர்தலையும் நாமதான் வெற்றிபெறுவோம். எடப்பாடியார்தான் முதலமைச்சர்'' என்றார்.

"அப்போ சட்டசபை தேர்தல்ல முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிங்களாண்ணா?' என நிருபர் ஒருவர் கேட்க, “""இனி எப்பவுமே எடப்பாடியார்தான் முதல்வர்'' எனக் கூறிவிட்டுக் கிளம்பினார் கருப்பணன். ""பார்த்தீங்களா? தென்மாவட்ட அமைச்சர் யாராச்சும் இப்படிப் பேச முடியுங்களா? இன்னார்தான் முதல்வர் வேட்பாளர்னு யாருமே சொல்லலை. ஆனா, கொங்குனா என்னன்னு தைரியத்தை நிரூபிச்சாரு கருப்பணன்'' என சிலர் பேசிக்கொண்டனர்.

"சரி, சி.எம். எடப்பாடிக்கும், அமைச்சர் கருப்பணனுக்கும் என்ன உறவு' என விசாரித்தபோது, “""ரொம்ப நெருக்கமுங்க. ரெண்டுபேரும் சம்பந்தி. எடப்பாடியின் கொளுந்தியா மகளைத்தான் கருப்பணன் தன்னோட மகனுக்கு பெண்ணெடுத்திருக்கிறார். அதான் இன்னும் அவர் அமைச்சராவே இருக்கிறார்'' என்றனர்.

சம்பந்திகளின் ஆட்சியில் சாமான்யர்களுக்காக தியாகம் செய்தவர்கள் எந்த மூலையிலோ!

-ஜீவாதங்கவேல்

கமிஷனர் அலுவலகத்தில் போலிகள்!

சென்னை வேப்பேரியில் இருக்கும் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு, தினந்தோறும் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்திக்க வேண்டுமென்றால், அப்பாயின்ட்மெண்ட் பெற்றிருக்க வேண்டும். அப்படிவரும் சாமான்ய மக்களை கமிஷனரிடம் அறிமுகப் படுத்துவதாக போலி ஆசாமிகள் ஏமாற்றுவது வாடிக்கையாகி வரு கிறது.

ss

டிசம்பர் கடைசிவாரம் பரபரப்பாக இருந்த கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார் டிப்டாப் ஆசாமி. அவருடன் பெண் ஒருவரும் வந்திருந்தார். அவர்களை வழிமறித்த எஸ்.சி.பி. காவலர்களிடம், ""நான் ரோடு இன்ஸ்பெக்டர். எக்ஸ். டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு ரொம்ப நெருக்கம் எனக்கூறி, ஒரு ஐ.டி.கார்டைக் காட்டினார். அதில், தமிழக அரசின் கோபுரம் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. காவல்துறை ஐ.டி. கார்டு போலவே, சிவப்பு நீல நிறத்தில் "ரோடு சேஃப்டி போலீஸ் டாக்டர் சாம் ஜெபராஜ்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்களை எட்டாவது மாடிக்கு அனுப்பிவைத்தனர். அப்போது கமிஷனர் மீட்டிங்கில் இருந்ததால், கூடுதல் கமிஷனர் அருணிடம் அனுப்பினர். ஐ.பி.எஸ். ஆபீஸரான அருண் ரொம்பவே ஸ்டிரிக்ட்டானவர். அவரோ, சாம் ஜெபராஜின் ஐ.டி. கார்டைப் பார்த்த மாத்திரத்தில், அது போலியானது என்றும், ரோடு சேஃப்டி இன்ஸ்பெக்டர் என்ற பதவியே காவல்துறையில் கிடையாது என்பதையும் கண்டுபிடித்தார்.

சாம் ஜெபராஜை விசாரித்த போது, "நான் நெற்குன்றம் பகுதியில் பாதிரியாராக இருக்கிறேன். போலி ஐ.டி. கார்டு வைத்துக்கொண்டு உயரதிகாரிகளோடு புகைப்படம் எடுத்து தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவேன்' என்று ஒத்துக்கொண் டார். உடன் வந்திருந்த பெண், ஒரு கல்வி நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பவர். கமிஷனரை கல்லூரி விழாவுக்கு அழைக்க வந்திருந்தது தெரியவந்தது. வேப்பேரி ஆய்வாளர் குணவர்மன் சாம் ஜெபராஜ் மீது வழக்குப் பதிந்து, பின் எச்சரித்து ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தார்.

"ரோடு சேஃப்டி இன்ஸ்பெக்டர்' என்றொரு பதவியே காவல்துறையில் இல்லையென்பது தெரியாத எஸ்.சி.பி. காவலர்கள்தான் கமிஷனர் அலுவலகத்தைப் பாதுகாக்கிறார்கள்.

-அரவிந்த்