ஏன் ஆதரவு? அ.தி.மு.க. அமைச்சரின் விளக்கம்!
அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர் கள் என நாடு முழுவதும், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இந்த சட்டத்திற்கான மசோதா நிறைவேறுமா இல்லையா என்பதை, அ.தி.மு.க. எம்.பி.க்களின் வாக்குகளே தீர்மானிக்கக்கூடிய நிலை உருவானது. அவர்களோ ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்களின் உரிமைகள் இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலமாக பறிக்கப்பட, அ.தி.மு.க. காரணமாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதற்கிடையே தமிழகத்தில் ஊரக, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை என பரபரப்புக்கிடையே, திருவாரூர் வந்திருந்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.
அவரிடம் மத்திய அரசின் குடியுரிமைத் சட்டத் திருத்தத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பது தொடர்பாக கேட்டபோது, “""அ.தி.மு.க.வின் நிலைப் பாட்டை எதிர்க்கட்சிகள் ஒவ்வொருவிதமாக பேசி வருவதை ஏற்கமுடியாது. அவர்கள் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கி றார்கள். இந்த சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களை ஆதரிக்க வேண்டும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் குறித்து அ.தி.மு.க. எம்.பி.க் கள் நாடாளு மன்றத்தின் இருஅவை களிலும் பேசியுள்ளனர். அதன் பிறகுதான் ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள்.
தற்போது பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருப்பதால், வேறு வழியில்லாமல் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கிறோம். அதேவேளையில், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டத்தை மிகவும் நல்லது என்று நாங்கள் கூற முடியாவிட்டாலும், கூட்டணி தர்மத்திற்காக ஆதரவளிக்கும் நிலையே எங்களுக்கு இருக்கிறது.
இந்த மசோதாவிற்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மேல்சபையில் பா.ம.க. தனது ஆதரவினை தெரிவித்ததுகூட கூட்டணி தர்மத்துக்காகவே'' என விளக்கமாகப் பேசிவிட்டுக் கிளம்பினார்.
-க.செல்வகுமார்
சட்டமும், நீதியும் சாமான்யர்களுக்கு உதவுமா?
பெரிய பெரிய நகைக்கடைகளில் கைவரிசை காட்டும் கொள்ளையர்களை, தனிப்படை அமைத்து விரட்டிப் பிடிக்கும் காவல்துறை, சிறிய நகைக்கடைகளில் நடக்கும் கொள்ளைச் சம்பவங்களைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, சாயல்குடி -அருப்புக்கோட்டை சாலையில், "ஸ்ரீ ஜானகி ஜுவல்லர்ஸ்' என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. கடந்த 2011, பிப். 02-ந் தேதி நள்ளிரவில், இந்தக் கடையின் இரண்டு ஷட்டர்களை உடைத்து 4 கிலோ 300 கிராம் தங்க நகையையும், ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் கொள்ளையர்கள்.
இதுதொடர்பாக, கடை உரிமையாளர் ஆனந்தகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாயல்குடி காவல்நிலையத்தில் இருந்துவந்து பார்வையிட்ட காவல்துறையினர் 475, 380 ஆகிய பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை தனிப்படை அமைத்துப் பிடித்த திருச்சி சரக ஐ.ஜி. அமல்ராஜ், ராமநாதபுரம் டி.ஐ.ஜி.யாக இருந்தபோது இந்தப் புகார் அவர் கவனத்துக்கு சென்றுள்ளது. அதோடு காவல்துறை உயரதிகாரிகள் பலரிடமும் முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லையாம். இதற்கிடையே, கடன்பெற்று அதனை நகைக்கடையில் முதலீடு செய்ததால், அதைத் திரும்பச் செலுத்துவதற்காக சொத்துகளை எல்லாம் விற்ற ஆனந்தகிருஷ்ணன், ஒருகட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தேபோனார். இன்று பொருளாதாரச் சூழலில் மிகவும் பின்தங்கி இருக்கும் அவரது குடும்பத்தினர், கொள்ளைபோன நகைகள் மீட்கப்பட்டால், வாழ்வாதாரத்துக்கு உதவும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.
இந்தச் செய்தியின் தலைப்புதான் நம் கேள்வியும்.
-பரமேஷ்
நக்கீரன் செய்தி எதிரொலி! இழப்பீடு கிடைத்தது!
2017, டிசம்பர் 15-ந் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் கடை களுக்கு தண்ணீர் கேன் போடுவதற்காக சுரேஷ், கார்த்திகேயன் ஆகிய இருவரும் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கடலூரில் ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு, அதே சாலையில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் கான்வாய், புதிய கல்பாக்கம் அருகே சுரேஷின் டூவீலர் மற்றும் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த கவுசல்யா ஆகியோரின் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இதில் மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோரவிபத்து நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காமல் அரசு இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் குறிப்பிட்டு, "கவர்னர் உதவுவாரா? நிர்க்கதி யாய் நிற்கும் குடும்பங்கள்!' என்ற தலைப்பில் நக்கீரன் 2019, டிசம்பர் 07-10 தேதியிட்ட இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதோடு, இந்த விவகாரத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, விசாரித்து நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி, கவுசல்யா, சுரேஷ், கார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் கலெக்டர் பொன்னையா.
இந்த நிவாரண உதவியைப் பெற்ற கையோடு நக்கீரனைத் தொடர்புகொண்ட கார்த்திகேயனின் தந்தை நரேஷ்குமார், “""பிள்ளைகளை இழந்து தவித்துவந்த எங்களுக்கு, இந்த இழப்பீட்டுத்தொகை மிகப்பெரிய ஆறுதல். அதைப் பெற்றுத்தந்த பெருமை அனைத்தும் நக்கீரனையே சேரும். எங்கள் குறையைப் பொறுமையாகக் கேட்டறிந்து, அதனை உடனடியாக செய்தி யாக்கி உதவிய நக்கீர னுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள் ளோம்'' என்றார் உணர்ச்சி பொங்க.
-அ.அருண்பாண்டியன்