கலப்படச் சாராயம் விற்று கைதான கஞ்சா வியாபாரி!
"பள்ளிக்குள் கஞ்சா விற்கும் மாணவர்கள்! தமிழக அபாயம்!' என்ற தலைப்பில், வடமாநிலங் களில் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டுவந்த ராம்ஜிநகர் கமல் மற்றும் மதன், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற் பனை செய்துவருவதாக நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம்.
இந்த செய்தி வெளியான சில நாட்களில், கஞ்சா வியாபாரி கமல் சார்பில், வழக்கறிஞர் அலெக்ஸ் என்பவர், ""கமல் மற்றும் மதன் மீது காவல்நிலை யத்தில் எந்த வழக்கும் இல்லை. குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததிலும் தொடர்பில்லை'' என மறுப்பு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திருச்சி தி.மு.க. இளைஞரணி சார்பில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 15 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கமலும் பங்கேற்றிருந்தது அதிர வைத்தது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும், காவல்துறையால் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி கமலை திருச்சி கண்டோன் மெண்ட் ஏ.சி. மணிகண்டன் தலைமையிலான தனிப்படை கைதுசெய்தது.
இதுகுறித்து ஏ.சி. மணிகண்டனிடம் கேட்ட போது, “""தீரன்நகர் அருகே நடத்திவரும் பாரில் பாண்டிச்சேரி சரக்கைக் கலந்து விற்பதாக கமல்மீது புகார் எழுந்தது. அதைவைத்து கைதுசெய்திருக் கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
ராம்ஜிநகர் கமல், தி.மு.க. இளைஞரணியில் இணைந்து, நிறையவே செலவு செய்திருக்கிறார். கமல் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ராம்ஜிநகரில் பெரிய பங்களா கட்டியிருக்கிறார். தனது செல்வாக் கைப் பயன்படுத்தி, கட்சியிலும் அரசியலிலும் ஒரு ரவுண்டு வர நினைத்திருந்த வேளையில்தான், கஞ்சா வியாபாரியான கமலை, கலப்படச் சாராய விவகாரத் தில் கைதுசெய்திருக்கிறது காவல்துறை.
-ஜீ.தாவீதுராஜா
மூதாட்டி கொலை! வாழ்க்கையைத் தொலைத்த சிறுவன்!
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகேயுள்ள மேலக்கல்பூண்டியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். 65 வயது மூதாட்டியான இவர், கடந்த 01-ந்தேதி தலையில் பலத்த காயத்துடன் தனது வீட்டில் மயங்கிக் கிடந்துள் ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்ட நிலையில், 04-ந் தேதி பொன்னம்மாளின் உயிர் பிரிந்தது.
இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதற் கிடையே, வடகராம்பூண்டி கிராமநிர்வாக அலுவலர் சத்யராஜிடம், பொன்னம் மாளைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு 15 வயது சிறுவன் சரணடைந்தான். தகவலறிந்த போலீசார் சிறுவனைக் கைதுசெய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தனது தோட்டத்தில் விளையும் பழங்களை, பொன்னம்மாள் கீழக்கல் பூண்டி அரசுப்பள்ளியில் விற்றுவந்தார். அதேபள்ளியில் படித்துவந்த சிறு வன், பொன்னம் மாளிடம் வெளி நாட்டு கரன்சியைக் கொடுத்து ஏமாற்றி பழம் வாங்கியிருக்கிறான். இதையறிந்து ஆத்திரமடைந்த பொன்னம்மாள், சக மாணவர்கள் மத்தியில் சிறுவனை கண்டித்திருக் கிறார்.
இதில் கடுப்பான சிறுவன், பொன்னம்மாளைப் பழிவாங்கும் நோக்கில் அவரது வீட்டில் 01-ந்தேதி இரவு திருடச் சென்றுள்ளான். அப்போது பொன்னம்மாள் சிறு வனை கையும்களவுமாக பிடித்திருக் கிறார். எங்கே தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று பயந்துபோன சிறுவன், அருகிலிருந்த டார்ச் லைட்டைக் கொண்டு பொன்னம்மாளின் தலையில் கடுமை யாகத் தாக்கிவிட்டு பணம் மற்றும் செல்போனுடன் தப்பியோடியது தெரியவந்துள்ளது.
"பொன்னம்மாளின் வீட்டில் திருடிய செல்போனை, சிறுவனின் தாயார் பயன்படுத்தியுள்ளார். அதன் சிக்னலை வைத்து சுலபமாக நெருங்கி விட்டோம். இந்தத் தகவலை அறிந்துதான் கிராம நிர்வாக அலுவல ரிடம் சிறுவன் சரணடைந் திருக்கிறான்' என்கிறது போலீஸ் தரப்பு.
-எஸ்.பி.சேகர்
அ.தி.மு.க. எம்.பி. – பா.ஜ.க. அமைச்சர்கள் கூட்டணி?
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளு மன்றக் கூட்டத் தொடரில், நிதித்துறை மீது பேசிய கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமார், ""அமெரிக்கா வுக்கும் சீனாவுக்கும் இடையி லான வர்த்தகப்போர் காரண மாக, சீனாவை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறுகின் றன. ஒவ்வொன்றும் 10 ஆயிரம் கோடிவரை முதலீடுசெய்கிற நிறுவனங்கள். அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவந்தால் ஜி.டி.பி. பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என சொல்ல, "நல்ல யோசனை, செயலாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம்' என உறுதியளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதேபோல், தமிழகம் 950 கி.மீ. நீளமுள்ள கடற் கரை கொண்டது. ஆனால், கடல்சார் தொழில்திட் டங்களில் தவிர்க்கப்பட்டே வருகிறது. அதனால், சென்னை அல்லது தூத்துக்குடியில் கப்பல் உடைக் கும் தொழிலை கொண்டுவரவேண்டும்'' என விஜய குமார் சொல்ல, அவசியம் நிறைவேற்றித் தருவதாக ஒப்புதல் தந்திருக்கிறார் அமைச்சர் நிதின் கட்கரி.
மேலும், ""கருவில் இருக்கும் குழந்தைகளைத் தாக்கும் தொற்றுநோய்களைக் கண்டறியும் நவீன கருவிகளை தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறுவவேண்டும். கருவியின் விலையும் ரூ.1 கோடிதான். இந்தக் கருவியின் மூலம் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய முடியும்'' என்றார். இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், ""தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுக்கவே இதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறோம்'' என்றிருக்கிறார்.
விஜயகுமாருக்கு பா.ஜ.க. அமைச்சர்கள் கொடுக்கும் இந்த முக்கியத்துவத்தை அறிந்த முதல் வர் எடப்பாடி, ஏக டென்ஷனில் இருக்கிறாராம். விஜயகுமாருக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள உறவுபற்றி டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகளை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
-இளையர்