ஓட்டல்களைக் குறிவைக்கும் மோசடி நெட்வொர்க்!
வங்கி விவரங்களை செல்போனில் கேட்டு பணம் திருடும் வடமாநில கும்பல் இப்போது ராணுவத்தின் பெயரில் கைவரிசை காட்டுகிறது.
கும்பகோணத்தில் இருக்கும் பிரபல ஓட்டலுக்கு இரவு 8 மணிக்கு செல்போனில் அழைப்புவந்தது. லைனில் வந்தவர் தன்னை ராணுவவீரர் என்று அறிமுகம் செய்துகொண்டு, "ஆர்டர் எடுத்துக்கோங்க.. அரை மணி நேரத்துல வந்து வாங்கிப்பாங்க' என்று இந்தியில் சொல்லியிருக்கிறார்.
இந்தி பேசும் ஊழியர் ஒருவரே ஆர்டரை எடுத்துக்கொள்ள, 20 பேருக்கான உணவு தயாரானது. அரைமணி நேரம் ஆகியும் ஆர்டரை வாங்க யாரும் வராததால், அழைப்பு வந்த அதே நம்பரை அழைத்து, “"ஆர்டர் வாங்க ஆள் வரவில்லை. உணவுக்கான பணமும் கிடைக்க வில்லை. மொத்த பில் ரூ.8 ஆயிரம் ஆச்சு' என்றுள்ளனர். "ரயிலில் வந்துகொண்டிருக்கிறோம்... அதனால் நேரடியாக பணம் தரமுடியாது. ஏ.டி.எம். கார்டு நம்பர் சொல் லுங்க. உடனே அனுப்பிடுறோம்' என்றிருக்கிறார் எதிர்முனையில் இருந்தவர்.
உரிமையாளர் இல்லாததால், தன்னுடைய ஏ.டி.எம். கார்டு விவரங்களை தயக்கத்துடன் தருவதற்கு முன்வந்த சப்ளையரிடம், நம்பும்படி பேசி விவரங்களை வாங்கியதோடு, ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை கடவு எண்ணையும் வாங்கி, அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரத்தை அமுக்கிவிட்டனர். பணம் எடுத்ததாக மெசேஜ் வந்ததும்தான், விஷயமே புரிந்திருக்கிறது. அதற்குள் அந்த எண்ணும் சுவிட்ச் ஆஃப் மோடுக்கு சென்றுவிட்டது.
""இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மோசடிக்காரர்களின் உரையாடல் ஆடியோ, புகைப்படம் வரை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஏமாறுபவர்களுக்கு பஞ்சமில்லை. “நாள் முழுவதும் வசூலான பணம் அக்கவுண்டில்தான் இருக்கும் என்பதை அறிந்தே இந்தக் கும்பல் ஓட்டல்களைக் குறிவைக்கிறது. ஆனால், பணத்தைத் தொலைத்தவர்கள் எல்லாம் ஊழியர்கள் மட்டுமே. விரைவில் பிடித்துவிடுவோம்'' என்கிறது காவல்துறை.
-க.செல்வகுமார்
ஓ.பி.எஸ். தொகுதியில் செக்ஸ் டார்ச்சர்!
போடி நகராட்சி யில் 22 பணியாளர்களு டன் இயங்கிவருகிறது போடி கூட்டுறவு பண்டகசாலை. இவர் களில் 12 பேர் பெண்கள். இவர்களுக்கு பண்டக சாலை செயலாளர் பாபு, கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது.
இதுமட்டுமின்றி, ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர்களை யும் பழிவாங்கும் நோக்கில் பாபு செயல்பட்டு வந்துள்ளார். சமீபத்தில் முத்துப்பாண்டி என்ற ஊழியர் மெடிக்கல் லீவ் முடிந்து பணிக்குத் திரும்பியபோது, வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதுதொடர்பாக, கூட்டுறவு அதிகாரிகள், காவல்துறை வரை புகார் கொடுத்தும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்கள் நம்மிடம், ""துணை முதல்வரின் தொகுதி என்பதை மனசில் வச்சுக்கிட்டு பொறுப்பா வேலைசெய்றோம். ஆனால், எங்க செயலாளர் பாபு ஒருமாதிரி ஆளு. திடீர்னு கடையில வந்து உட்கார்ந்துகிட்டு ஒருமாதிரி பார்த்துக்கிட்டே இருப்பாரு. பின்ன கடைக்குள்ள நின்னுக்கிட்டு எங்களைக் கூப்பிட்டு ஸ்டாக் எத்தனை மூடைகள் இருக்குதுன்னு எண்ணச் சொல்லுவாரு. தப்பித்தவறி போயிட்டா மாட்டிக்குவோம், டார்ச்சர் பண்ணுவாரு. ஆசைக்கு இணங்கலைன்னா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன்னு மிரட்டுவாரு. கலெக்டர், ஜெ.ஆர். கிட்ட புகார் கொடுத்திருக்கோம்'' என்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து செயலாளர் பாபுவிடம் கேட்டோம்.…""சில ஊழியர்கள் வேண்டுமென்றே என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார்கள்'' என்றார். மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் விளக்கம் கேட்க முயற்சித்தோம்...… லைனில் பிடிக்க முடியவில்லை.
துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
-சக்தி
தோள்கொடுக்கும் முயற்சி!
அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறுக்காக, சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கிருந்து வெளியே வந்தாலும், சமூகத்தின் புறக்கணிப்புகள் காரணமாக, அவர்கள் மீண்டும் தவறான பாதைக்குத் திரும்பிய கதைகளே அதிகம். இதைமாற்றி அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் முயற்சியில் இறங்கி, வெற்றியும் கண்டிருக்கிறது ‘"நமது தோள்கள்'’ அமைப்பு.
கேன்சருக்கு தனது சகோதரியைப் பறிகொடுத்த சோகத்தில், சில சமூகநலன் சார்ந்த செயல்பாடுகளில் இறங்கி, நமது தோள்கள் என்ற அமைப்பை உருவாக்கியவர் மாணிக்கபாரதி. செய்கிற காரியம் நல்லதாக இருந்தாலும், யாரும் செய்யாத ஒன்றாக இருக்கவேண்டும் என்ற உந்துதலில், கூர்நோக்கு இல்லம் செல்லும் சிறார்களுக்கு உதவ முடிவுசெய்தார்.
மாணிக்கபாரதியிடம் இதுபற்றி பேசினோம்... ""தோற்றுப்போவீர்கள் என்றார்கள். துணிந்து இறங்கினோம். முறையான அனுமதியுடன் கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் சிறார்களுக்கு, கேக், பிஸ்கட், பன் போன்ற பேக்கரி பொருட்கள் செய்ய இலவச பயிற்சி கொடுத்தோம். என்னதான் வேலை கற்றுக்கொண்டாலும், அந்த சிறுவர்கள் மீண்டும் கூர்நோக்கு இல்லத்திற்கே திரும்பியது தெரிய வந்தது. இந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்துதான், நாங்களே அவர்களுக்கான வேலை ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தோம்.
இதுவரை 120-க்கும் மேற்பட்ட சிறார்கள் எங்களிடம் பயிற்சி பெற்றுள்ளனர். ஐந்து நட்சத்திரத் தரத்திலான அடுமனைப் பொருட்களை அவர்களால் இப்போது செய்யமுடியும். முதற்கட்டமாக ஐந்து சிறார்களை மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன், வேலையில் அமர்த்தி இருக்கிறோம். புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லம் எதிரில் பேக்கரி ஸ்டால் அமைத்துள்ளோம். இதனை மேலும் விரிவுபடுத்த நினைக்கும் எங்கள் முயற்சிக்கு, பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம்'' என்றார்.
-அரவிந்த்