அதிகாரிகளின் கொள்ளை!

திருச்சி-புதுக்கோட்டை புறவழிச் சாலையோரம் உள்ளது குண்டூர் பெரியகுளம் ஏரி. 38 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி நிரம்பினால் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

signal

மேடுதட்டிப்போன பெரியகுளத்தை தூர்வாரி சீர்செய்தால் முப்போகம் விளையும் நிலத்தடி நீர் வளம்பெறும். கால்நடைகளுக்கும் பொதுமக்களுக்கும் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று பெரியகுளம் காப்புக்குழு உருவாக்கப்பட்டது. விவசாயிகளும் பொதுமக்களும் காப்புக்குழுவுடன் இணைந்தார்கள். தண்ணீர் என்கிற அமைப்பும் தனது பங்களிப்பைத் தந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தூர்வாரும் பணி தொடங்கி ஒருமாதம் நடந்தது. மழை குறுக்கிட்டதால் வேலை அப்படியே நின்றுவிட்டது. அதன்பிறகு அந்த வேலை தொடரவில்லை.

Advertisment

இந்நிலையில்... குண்டூர் ஊராட்சி சார்பில், பெரியகுளம் ஏரிக்கரையில் ""தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 19 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரியில் இக்குளம் தூர்வாரப்பட்டது'' என்று ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த விவசாயிகளும் காப்புக்குழுவினரும் கடுமையான அதிர்ச்சியடைந்தனர்.

""என்ன அநியாயம் பாருங்கள், கடந்த ஆண்டு பொதுமக்களும், விவசாயிகளும் தண்ணீர் அமைப்பும் இணைந்து தூர்வாரும் பணியைச் செய்தார்கள். அதைத் தொடங்கி வைத்ததே மாவட்ட ஆட்சியர் ராஜாமணிதான். அபோது குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தபோது "உடனடியாக எடுக்கிறேன், அதோடு சாலையோரப் பூங்காவும் அமைக்கப்படும்' என்றார் மாவட்ட ஆட்சியர். எதையும் செய்யவில்லை. ஆனால் பொதுமக்களும் தொண்டு நிறுவனமும் செய்த வேலையை தாங்கள் செய்ததாக 19 லட்சத்திற்கு பில் போட தயாராகிவிட்டது ஊராட்சி நிர்வாகமும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்'' என்று காறித் துப்புகிறார்கள் பெரியகுளம் ஏரி விவசாயிகள்.

-ஜெ.டி.ஆர்.

Advertisment

காக்கிகளின் வள்ளல்!

கடலூர், விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரிடம் "வாரித்தரும் வள்ளல்' என பெயரெடுத்தவர் மண்மணல் மன்னர் கூத்தக்குடி மணிசேகர்.

manysekar

கோமுகி ஆறு, மணிமுத்தாறு, வெள்ளாறு, காட்டு ஓடைகள், வனத்துறைக் காடுகள் எல்லாமே இவருடைய குவாரிகள்தான். இவர் நினைத்த இடங்களில் மண் அள்ளுவார், மணல் அள்ளுவார்... அதற்காக யாரிடமும் இவர் லைசென்ஸ் வாங்கியதில்லை.

இவருடைய லோடு லாரிகளை எந்த அதிகாரி மடக்கினாலும் அந்த ஸ்பாட்டிலேயே பட்டுவாடா செய்துவிடுவாராம். அதற்காக இவருடைய காரில் எப்போதும் ஐந்து லட்சத்திற்கும் குறையாமல் இருக்குமாம். இவருடைய லோடு லாரிகளுக்கு வி.ஐ.பி. அந்தஸ்து கொடுப்பார்களாம் போலீசார். எத்தனைப் புகார்கள் யார், யாருக்குச் சென்றாலும் உடனே மணிசேகருக்குத் தகவல் போய்விடுமாம்.

இவற்றையெல்லாம் தொடர்ந்து கண்காணித்த கடலூர் எஸ்.பி. விஜயகுமார், மாவட்ட டெல்டா தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு கடுமையான உத்தரவிட்டார். விளைவு? வேப்பூர் அருகே மண் தோண்டிக்கொண்டிருந்த மணிசேகரையும் அவருடைய ஆட்கள் ஆறுபேரையும் பொக்லைனையும் ஆறு லாரிகளையும் 4-7-18 அன்று டெல்டா போலீஸ் மடக்கியது. வாகனங்கள் வேப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. எஸ்.பி. கடுமையாகச் சொன்ன பிறகுதான் மணிசேகரை சிறைக்கு அனுப்பியது வேப்பூர் போலீஸ்.

பல ஆண்டுகளாக மண்மணல் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்த மணிசேகரை குண்டர் சட்டத்தில் போடவேண்டும் என்று எஸ்.பி.விஜயகுமார் மாவட்ட ஆட்சியர் தண்டபாணிக்கு பரிந்துரை செய்ய, அவரும் அதற்கான வேலைகளைச் செய்ய... இதையறிந்த அமைச்சர்கள் சிலர் இடையில் புகுந்திருக்கிறார்கள். குண்டாஸில் போகவேண்டிய மண்மணல் மன்னன் இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

""இத்தனைக்கும் அந்த மணிசேகர் தி.மு.க.வைச் சேர்ந்தவர். அவருக்கு ஏன் அமைச்சர்கள் இவ்வளவு சப்போர்ட் செய்தார்களோ?'' வியக்கிறார்கள் இரட்டை இலை தொண்டர்கள்.

-கீரன்

எம்.எல்.ஏ.க்களின் ஆக்டிங்!

admk-mlas

புதுச்சேரி சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜூலை 2-ல் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், ""மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை'' எனக்கூறி முதல் மூன்று நாட்கள் புறக்கணிப்பு, வெளிநடப்பெனச் செய்தது. அவ்வளவுதான்.

ஆனால் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவான அ.தி.மு.க.வோ, வெளிநடப்பு, புறக்கணிப்பு, கறுப்புச்சட்டை, ஸ்மார்ட் மீட்டர் உடைப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அதிரடி ஆக்டிங் காட்சிகளை அரங்கேற்றின.

அவற்றின் உச்சமாக, 12-07-18 அன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் அசனா பாஸ்கர், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர் போதைப்பொருட்களான ஹன்ஸ், குட்கா, கஞ்சா, பான்மசாலா ஆகியவற்றை சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்தனர். ""புதுச்சேரியில் பஸ், ரயில் நிலையங்களில் இவை தங்குதடையின்றி விற்பனையாகின்றன. அரசியல்வாதிகளின் ஆதரவோடுதான் இந்த வியாபாரம் நடக்கிறது'' என்று குற்றம்சாட்டினர்.

பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, ""திருட்டு லாட்டரியைத் தடுத்தோம். கஞ்சா விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன்'' என பதிலளித்து விவாதத்தை முடித்தார்.

ஆனால், சட்டமன்றத்திற்கு வெளியிலோ அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஆதாரம் காட்டுவதற்காக குட்கா பாக்கெட்டை சட்டமன்றத்திற்குள் கொண்டு சென்று, அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவோடு குட்கா வியாபாரம் தாராளமாக நடக்கிறது எனச் சொல்லி, குட்கா பாக்கெட்டை காட்டியதற்காக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினர். ஆனால் அதே அ.தி.மு.க.வினர் இங்கே குட்கா பாக்கெட், கஞ்சா பாக்கெட்களோடு வந்தார்கள். ஆளும்கட்சி வேடிக்கைப் பார்க்கிறது'' என்று விவாதம் செய்கிறார்கள் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள்.

-சுந்தரபாண்டியன்