தோழமைக்கட்சி பெண்ணிடம் இப்படியா நடப்பது?

நாங்குநேரியில் நாராயணன் வெற்றியை இனிப்பு கொடுத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர் அ.தி.மு.க.வினர். அதேவேளையில், கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பும் வேலையில் ஜரூராக இறங்கியிருந்தனர் அவர்களில் வேறுசிலர்.

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர்தான் அதிக அளவில் நாங்குநேரியில் முகாமிட்டு இடைத்தேர்தல் வேலைகளை கவனித்தனர். அவர்களில் ஒருவரான இளைஞருக்கு சீக்கிரமே கட்சியில் மாவட்டப் பொறுப்பு கிடைக்கும் என்கிற பேச்சு. அது நடக்கக்கூடாது என்பதில் தீவிரம்காட்டும் சிலர்தான், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஆளும்கட்சிக்கு ஆதரவுதந்த கட்சிகளில் அதுவும் ஒன்று. அதில் ஒரு டம்மி பொறுப்பில் இருக்கிறார் அந்த அம்மணி. தனது மகளையும் கூட்டிவந்து நாங்குநேரியில் ஆளும்கட்சியினரோடு உழைத்தார். வாழ்க்கைத்துணை இல்லாத அந்த மகளிடம், விருதுநகர் இளைஞர் ஜொள்ளுவிட்டு, “"நீ இப்ப இருக்கிறதெல்லாம் ஒரு கட்சியே இல்ல. எனக்கு பெரிய பெரிய அமைச்சர்களெல்லாம் பழக்கம். ஈஸியா உனக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தர முடியும்' என்று ‘அழைப்பு’ விடுத்திருக்கிறார். அந்த மகள் விலகிச்சென்றும் விரட்டியிருக்கிறார் அந்த இளைஞர்.

Advertisment

இருவருமே ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், பொருட்படுத்தாமல் தேர்தல் பொறுப்பைக் கவனித்துவந்த நிர்வாகியிடம், மகளுக்கு நடந்ததை சொல்லி அழுதிருக்கிறார் அவருடைய அம்மா. இந்த விவகாரம் நாங்குநேரியில் தேர்தல் பொறுப்பாள ராக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது.

"தேர்தல் வேலைக்கு வந்த தோழமைக்கட்சி பெண்ணிடமா இப்படி நடப்பது? விஷயம் வெளியே தெரிந்தால் மாவட்டப் பெயரே நாறிடுமே' என்று அந்த இளைஞரைக் கண்டித்திருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர். துணிந்து அரசியலுக்கு வரும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மலிந்து கிடக்கின்றனர்.

-ராம்கி

Advertisment

மனநல மருத்துவரின் மனிதநேயம்!

ss

"ஊரெல்லாம் சுத்தம் செய்றோம். உறங்கக்கூட நேரமில்லை. செப்டிக் டேங்குகளை க்ளீன் செய்யணும். இப்படி வேலைசெய்தே நம்மாளுங்க சிலர் மனஉளைச்சல்ல தற்கொலைக்கு முயற்சிக்கிறாங்க'– புதுக்கோட்டையில் துப்புரவுப் பணியாளர்கள் சிலரின் இந்தப்பேச்சு மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்தின் மனதைத் தைத்தது. மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் கர்ப்பிணியாக திரியும் இளம்பெண்களை மீட்டு, அவர்களுக்கு பிரசவம் பார்ப்பது, மனநல வியாழன் என்ற திட்டத்தைத் தொடங்கி, அரசு மருத்துவமனைகளில் ஆலோசனை வழங்குவது, சுகாதாரத் துறையின் உதவியோடு 104 என்ற எண்ணில் அவசர அழைப்பை உருவாக்கியது என மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்தின் பணிகள் ஏராளம்.

இத்தனை செய்தும், துப்புரவுப் பணியாளர்களை மறந்துவிட்டோமே என எண்ணி வருந்தியிருக்கிறார். அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் யோசனையை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனிடம் சொல்ல, அவரும் முகாம் நடத்த அனுமதிதந்தார். மாநிலத்திலேயே முதல்முறையாக 18-ந் தேதி பழைய மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சந்திரசேகரன் தலைமையில் துப்புரவுப் பணியாளர்க்கென பிரத்யேக மனநல முகாம் நடந்தது. அதில் கலந்துகொண்ட 103 பேரும் தனித்தனியாக பரிசோதிக்கப் பட்டனர். தங்களை சமூகம் இழிவாகப் பார்க்கிறது. சாக்கடை களில் புரண்டாலும், தங்கள் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்கிற ஏக்கம் அவர்களுக்கு இருப்பதும், அவர்களில் 32 பேர் மனஅழுத்தப் பிரச்சனைக்கு ஆளாகியிருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

"அனைவரும் மாதந்தோறும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளுங்கள். எந்தப் பிரச்சினையும் வராது' என மருத்துவக் குழுவினர் சொன்னபோது, "எங்களையும் மனுஷங்களா மதிச்சு சிகிச்சை கொடுத்தீங்களே...' என்று நெகிழ்ந்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள் துப்புரவுப் பணியாளர்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற முகாம்கள் நடந்தால், சிறப்பாக இருக்கும்!

-இரா.பகத்சிங்

விடுதலைக்குப் பின்னும் சிறை! அலட்சியத்தால் நேர்ந்த மரணம்!

dd

1991-ல் கோவை சுக்கிரவார்பேட்டை அருகே இந்து முன்னணியைச் சேர்ந்த சிவா என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தவழக்கில் அப்போது கைதானவர் அப்துல் ஹமீத் என்கிற பிலால் ஹாஜியா.

28 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார். தண்டனைக்காலம் முடிந்து, நீதிமன்றமே உத்தரவிட்டும், விடுதலை செய்யாத நிலையில் அக்.23 ந்தேதி காலை சிறையிலேயே உயிரைவிட்டார்.

நடந்தவற்றை விவரிக்கும் எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் ராஜா உசைன், ""எஸ்.டி.பி.ஐ. மாவட்ட துணைச்செயலாளராக இருந்தவர் பிலால் ஹாஜியா. வயதுமுதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட ஹாஜியா, தனது மகன்களை வைத்து ஹைகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கலெக்டர், சிறை மருத்துவர், சிறை அலுவலர்களிடம் ஒப்புதல்கடிதம் கேட்டார். அவர்களும் ஹாஜியாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக ஒப்புதல் தந்ததையடுத்து, "அவரை விடுதலை செய்வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆகஸ்ட் 19-ந் தேதி விடுதலை செய்யவேண்டும்' என உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆனால், ஹாஜியா விடுதலையில் அலட்சியம் காட்டினார்கள் அதிகாரிகள். கலெக்டர் வரை மனுசெய்தும் கண்டு கொள்ளவில்லை. இன்று ஹாஜியா உயிரோடில்லை. இது கொலைக்குச் சமம்'' என்றார் கோபமாக.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு.ராமகிருட்டிணன், ""86 வயதில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முதியவரை மனிதாபிமான அடிப்படையிலாவது விடுதலை செய்திருக்கவேண்டும்.

பஞ்சாபில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட 20 பேரை, அம்மாநில அரசு காந்தி ஜெயந்தியன்று விடுவித்தது. அந்தப் பண்பில் பாதியளவுகூட இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வெட்கக்கேடு'' என்றார்.

-அருள்குமார்