வேலூர் தி.மு.க.வில் பிளவு! தவிக்கும் துரைமுருகன்!
எந்த மாவட்டமாக இருந்தாலும் உட்கட்சி மோதல்களில் தலையிட்டு தீர்த்து வைக்கும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், சொந்த மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறார்.
"வேலூர் மத்திய மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ. தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வலதுகரமாக இருந்தவர். வேலூர் மாவட்டம் கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டபோது மத்திய மா.செ.வாக கதிர்ஆனந்தை ஆக்க நினைத்து, ஸ்டாலின் விரும்பாததால் நந்தகுமாரைக் கை காட்டி னார் துரைமுருகன். மத்திய மா.செ.வாக ஆனதும் நிர்வாகிகள் மத்தியில் தனக்கான அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக அமைத்தார் நந்தகுமார்.
2016 சட்டமன்றத் தேர்தலில், அணைக்கட்டு தொகுதி சீட்டை நந்தகுமாருக்கு தந்தபோது, துரைமுருகனின் ஆதரவாளர் பாபுவால் தாக்கப்பட்டார். இதற்கு முழுக்காரணமும் துரைமுருகன்தான் என நந்தகுமார் நம்பிய நிலையில்தான் விரிசல் உருவானது. தற்போது வேலூர் எம்.பி.யாக கதிர்ஆனந்த் ஆனபிறகு, மா.செ. நந்தகுமாரை மதிப்பதே இல்லை. தன்னை முன்னிறுத்து வதிலேயே மும்முரமாக இருக்கிறார்' என்கிறது வேலூர் தி.மு.க.வின் களநிலவரம்.
மா.செ. நந்தகுமாரின் ஆதரவாளர்கள் நம்மிடம், ""எம்.பி. சீட் வாங்குறதுக்கு முன்பிருந்தே மா.செ. நந்தகுமாரை கதிர்ஆனந்த் மதிக்கிறது கிடையாது. தேர்தலின்போதும், வெற்றிக்குப் பின்னுமே அது பளிச்சுன்னு தெரிஞ்சது. கட்சியில் தன்மூலமாக இணையுறவங்களை மா.செ.கிட்டக்கூட அறிமுகம் செய்யுற தில்லை. தி.மு.க.வைப் பொறுத்தவரை மாவட்டத்தில் மா.செ.தான் பெரிய பதவி. ஆனால், எந்த நிகழ்ச்சியானாலும் என் பெயரை பெருசா போடணும்ங்கிறார் கதிர்ஆனந்த்' என்றனர்.
வேலூர் எம்.பி. கதிர்ஆனந்தின் ஆதரவாளர்களோ, ""மா.செ. ஆனதும் துரைமுருகனுக்கு எதிராகவே செயல்படத் தொடங்கினார். நந்தகுமார் எம்.எல்.ஏ.வாக உள்ள அணைக்கட்டு தொகுதியில் கதிர் ஆனந்துக்கு ஓட்டு குறைவாகக் கிடைக்க, நந்தகுமார் உள்ளடி வேலைகள் பார்த்ததே காரணம்'' என்றார்கள்.
இதுபற்றி விசாரித்தால், ""நாங்க இருவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். யாரோ எதெதுவோ பேசுகிறார்கள். அதையெல்லாம் கேட்பதா?'' என்கிறார்கள் மா.செ. நந்தகுமாரும், எம்.பி. கதிர்ஆனந்தும்.
-து.ராஜா
கண்ணைக் கட்டி காலில் சுட்டார்கள்! கதறும் ரவுடி!
தூத்துக்குடி மாவட் டத்தில் நாளுக்குநாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கண்ட்ரோல் செய்ய, பழைய ரவுடிகளைக் கண்காணிக்க உத்தர விட்டார் எஸ்.பி. அருண் பாலகோபாலன்.
அதன்படி, கோவில் பட்டி கிழக்கு காவல் நிலைய எஸ்.ஐ. இசக்கி ராஜா டீம், ரவுடி மாணிக்கராஜாவை, கார்த்திகைப்பட்டியில் அவரது தோட்டத்தில் வைத்து சுற்றிவளைத் தது. அப்போது மாணிக்கராஜா தான் வைத் திருந்த கத்தியால் காவலர்கள் செல்வகுமார், முகம்மது மைதீன் ஆகியோரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றிருக்கிறார். உடனே எஸ்.ஐ. இசக்கிராஜா தனது துப்பாக்கியால் மாணிக்க ராஜாவின் வலதுகாலில் சுட்டுள்ளார்.
காயமடைந்த காவலர்கள் கோவில்பட்டி அரசு மருத் துவமனையிலும், மாணிக்க ராஜா பாளை அரசு மருத் துவமனையிலும் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மனம்திருந்தி வாழ்ந்த மாணிக்கராஜாவைத்தான் சுட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
""ஒருகாலத்தில் கோவில் பட்டியில் ரவுடியாக கொடி கட்டிப் பறந்தவர் மாணிக்க ராஜா. அவர்மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை யில் உள்ளன. மனைவி, குழந்தைகள் என்றானபின் மனம்திருந்தி பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். பிரச்சினை களில் ஈடுபடுவது இல்லை யென்றாலும், பழைய வழக்கு களைக் காட்டி அவ்வப்போது போலீசார் மாணிக்கராஜாவை தொந்தரவு செய்வது வழக்கம். சம்பவத்தன்று கோவில்பட்டி பஸ்ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த மாணிக்க ராஜாவை குண்டுக்கட்டாக வேனில் ஏற்றிக் கொண்டு போய், அவரது தோட் டத்தில் வைத்தே காலில் சுட்டிருக்கிறார்கள்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
""நான் யாரையும் வெட்டலை. ஒழுங்கா எல்லா கேசுலேயும் ஆஜர் ஆவுதேன். என்னைப் பிடிச்சுக் கொண்டுபோய் சுட்டுட்டாங்களே. எல்லாத் துக்கும் என்கிட்ட ஆதார மிருக்கு. நான் லேசுல விட மாட்டேன்'' என கதறியழு கிறார் மாணிக்கராஜா.
-பரமசிவன்
காவல்துறையின் துரித நடவடிக்கை!
மும்பை கோரேகான் பகுதியில் இயங்கி வரும் தமிழர்நலக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் குமரேசன். சொந்தமாக தொழில் நடத்திவரும் இவர், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் சென்னை மாங்காட்டில் உள்ள கெருகம்பாக்கத்தில், தொழில் நிமித்தமாக 7,200 சதுரஅடி நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார் குமரேசன். இந்த நிலத்தை விற்பனைசெய்த சிவா மற்றும் அவரது தந்தை சுந்தரராஜன் ஆகியோரிடம் நிலத்திற்கான தொகையாக ரூ.50 லட்சம் கொடுத்த பின்புதான், அரசுநிலத்தை ஏமாற்றி தன்னிடம் விற்றிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதுதொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் முறையிட்டி ருக்கிறார் குமரேசன். ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், மாங்காடு காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சிட்டிபாபு, சிவா மற்றும் சுந்தரராஜன் மீதான நடவடிக்கையில் வேகத்தைக் கூட்டினார். இதேபாணியில் ஏமாற்றப்பட்டதாக பாலசேகர், சார்லஸ், அருள்செல்வம், ஏழுமலை ஆகியோர் புகார் கொடுத்தநிலையில், அவர்களது மனுக்கள் மீதும் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் ஆய்வாளர் சிட்டிபாபு.
இதுபற்றி நம்மிடம் பேசிய குமரேசன், ""பெரும்பாடு பட்டு சேர்த்த பணத்தை ஏமாந்துவிட்டோம் என்றதும் அதிர்ந்துபோனேன். காவல் ஆணையரின் அறிவுறுத்தலும், ஆய்வாளரின் துரித நடவடிக்கையும் எனது பணம் திரும் பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது'' என்றார் அவர்.
-கீரன்