Skip to main content

சிக்னல்

நிர்வாண சாமியார் எஸ்கேப்!

signal

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திருநேர் அண்ணாமலை என்ற இடத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில், ஆந்திர சாமியார் கூட்டம் ஒன்று ஆபாச யாகம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. உடனே சென்றோம்.

அங்கே, பத்துக்கும் மேற்பட்ட சாமியார்கள் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவில் யாக குண்டத்தின் எதிரில், கழுத்தில் சிறிய மாலையோடு, நிர்வாணமாக அமர்ந்து யாகபூசை செய்து கொண்டிருந்தார் ஒரு சாமியார்.

சுற்றியமர்ந்திருந்த சாமியார்களில் ஒருவரை வெளியே அழைத்து வந்து விபரம் கேட்டோம். ""ஆந்திர மாநிலம் பொக்குல கொண்ட கைலாச ஆசிரமத்தின் பீடாதிபதி சூரியப்பிரகாச ஆனந்த சுவாமிகள் உலக நன்மைக்காக சோம உத்ரா யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார். 37 வருடமாக மௌனமாக இருக்கிறார். யாரிடமும் பேச மாட்டார். தினமும் காலை 2 மணி நேரம், சாயந்திரம் 2 மணி நேரம்; 61 நாட்கள் இந்த யாகம் நடக்கப் போகிறது'' என்றார் நிர்வாணத்தின் சிஷ்யன்.

""ஆபாச யாகம் நடந்து கொண்டிருக்கிறதே தெரியுமா?'' காவல்துறையினரிடம் சொன்னோம். ""அப்படியா தெரியாதே!'' என்றனர். அதன்பிறகே நக்கீரன் இணையதளத்தில் இச்செய்தியை வெளியிட்டோம். பொதுமக்கள் சட்டப் பணிகள் ஆணையத்திற்கு புகார் செய்தனர்.

ஆபாச யாகத்திற்கு தடைவிதித்து மாவட்ட நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். உத்தரவிட்ட அன்று மாலையே நேரடியாகவும் சென்றார் நீதிபதி. நீதிபதி வருகிறார் என்ற தகவலைத் தெரிந்து கொண்ட நிர்வாணசாமி, எஸ்கேப் ஆகிவிட்டார்.

""யாகசாலையை கலைத்துவிட்டுக் கிளம்புங்கள்'' நீதிபதி சொன்னதும் கலைத்து விட்டுக் கிளம்பியது சிஷ்யர் கூட்டம்.

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் நிர்வாணபூசை நடந்து கொண்டிருப்பது தெரிந்தும், வனத்துறையும் அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதுதான் வியப்பாயுள்ளது.

-து.ராஜா

ஆதீனத்துக்கு பிடிவாரண்ட்!

signalநாகப்பட்டினம் மாவட்டம் -திருவாலங்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவாவடுதுறை ஆதீன மடம். இதன் 23-வது மடாதிபதி சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். இவர் உயிருடன் இருந்தபோது, ராஜபாளையம் சைவ வேளாளர் சங்கத்தினர் ஒரு கோரிக்கை வைத்தனர்.

ராஜபாளையம் அருகிலுள்ள மடத்துப்பட்டியில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் 40 ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இங்கு நூலகம் கட்டுவதற்கு அனுமதி கேட்டனர். இச்சங்கத்தினரிடம் அவர், "நிலத்தை சட்டப்படி மீட்டுத் தாருங்கள். நூலகம் கட்டுவதற்கு அனுமதி தருகிறேன்' என்றிருக்கிறார். சங்கமும் முயற்சி எடுத்து, ரூ.20 லட்சம்வரை செலவழித்து, சட்ட பிரகாரம் அந்த நிலத்தை மீட்டது. இந்த நேரத்தில், சிவப்பிரகாச சுவாமிகள் இறந்துவிட, 24-வது மடாதிபதியாக அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் பொறுப்புக்கு வந்தார். இவரிடம் நூலகம் கட்டுவதற்கு சங்கம் அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார். மேலும், மீட்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை, "பாத காணிக்கை' என்ற பெயரில் ரூ.1 கோடி பெற்றுக்கொண்டு, ஆக்கிரமித்தவருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

அதனால், ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சைவ வேளாளர் சமுதாய தலைவர் சேதுராமலிங்கம் பிள்ளை. வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்பலவாணருக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அவர் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அம்பலவாண சுவாமிகளுக்கே பிடிவாரண்டா? என்று திருவாவடுதுறை ஆதீன வட்டாரத்தினர் அதிர்ந்துபோய் உள்ளனர்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

"புதுமை பள்ளி' விருது..

signal

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சிறப்புகளைப்பற்றி கடந்த 2007 பிப்ரவரியில் "மாணவர்களை அடிக்காத பள்ளி' என்னும் தலைப்பில் நடுப்பக்க கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி கல்வித்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி டெல்லியில் மத்திய மனிதவளமேம்பாட்டு ஆணையத்தின் நோட்டீஸ் போர்டில் செய்தித்தாள் ஒட்டப்பட்டது. அந்த செய்தியே "சாட்டை' படம் உருவாக காரணமாக இருந்ததாக சமுத்திரகனி பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணியை தொலைபேசியில் பாராட்டினார்.

அதேபோல பலமுறை அந்த பள்ளியை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 11-ந் தேதி நக்கீரன் இணைய தளத்தில் "சத்தியமா இது அரசுப்பள்ளிதான்.. இந்த பள்ளியும் ஒரு நாள் இந்தியாவின் தலைசிறந்த பள்ளியாகும்' என்ற தலைப்பில் சிறப்புக்கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த கட்டுரையை பார்த்த வெளிநாடுவாழ் தமிழர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை பாராட்டியதுடன் பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளையும் செய்து கொடுத்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் புதுமைப் பள்ளிக்கான விருதுக்காக விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு தேர்வுகள் முடிந்த நிலையில், மாங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியை கல்வித்துறை இயக்குநர் அலுவலகம், கல்வித்துறை செயலாளர் அலுவலகம் தொலைபேசியில் அழைத்து உங்கள் பள்ளிக்கு "புதுமைப் பள்ளி' விருது வழங்க உள்ளோம். "திங்கள் கிழமை முதல்வர் எடப்பாடி வழங்குகிறார், வரவேண்டும்' என்று அழைப்புக் கொடுத்தனர்.

அதன்படி முதல் 5 பள்ளிகளை தேர்வு செய்து அதில் முதல் பள்ளியாக நக்கீரன் வெளிக்காட்டிய மாங்குடி அரசுப் பள்ளிக்கு விருதும், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி உள்ளார் முதல்வர் எடப்பாடி.

-இரா.பகத்சிங்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்