Skip to main content

சிக்னல்!16

"நாடு கலங்குதப்பா நாட்டுமக்கள் தவிக்குதப்பா!''

ஐந்துமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த கடவூர் ஜமீன்தார், காங்கிரஸ் முத்தையா (89) காலமாகிவிட்டார்.

muthiayaகாமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். என ஐந்து முதலமைச்சர்களை சட்டமன்றத்தில் சந்தித்தவர்.

பெரியார், காமராஜர், ராஜாஜி, அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர்., கலைஞர், நாவலர், மூப்பனார், ம.பொ.சி., சிவாஜி என தலைவர்கள் பலருடன் நெருக்கமாகப் பழகியவர்.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கடவூரைச் சேர்ந்த கருணை ராகவா முத்தையா என்ற பெயருடைய இவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றவர். 21-ஆவது வயதில் கடவூர் சமஸ்தான ஜமீன்தாரானார். 1952-இல் பஞ்சாயத்துத் தலைவராக வென்றார்.

1954-இல் திருச்சி மாவட்ட போர்டு உறுப்பினர், 57-இல் பஞ்சப்பட்டி எம்.எல்.ஏ.. 1962-இல் கடவூர் எம்.எல்.ஏ., 1967-இல் அன்பில் தர்மலிங்கத்தை எதிர்த்து நின்று எம்.எல்.ஏ., 1971-இல் அதே தொகுதியில் மீண்டும் வென்றார். 77-இல் மருங்காபுரி எம்.எல்.ஏ.

கரூர் மாவட்டத்தில் இமையமாக தனிச்செல்வாக்குப் பெற்றிருந்த முத்தையா, மூச்சுத்திணறல் காரணமாக 07-04-18 அன்று இறந்தார். திருச்சியிலிருந்து கடவூர் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, முள்ளிப்பாடியில் அடக்கம் செய்யப்பட்டார்.

-ஜெ.டி.ஆர்.

போராட்டமே வாழ்க்கையாச்சு நீரோட்டம் போல!

protest

திருவண்ணாமலையில் அரசு ஊழியர்களுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஏற்பட்ட மோதல் மார்ச் கடைசி வாரத்தில் உச்சத்தை எட்டியது.

காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கலெக்டர் அறையை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், அங்கிருந்த ஆதார் மையத்தை நொறுக்கினர். இதில் லாவண்யா என்ற ஊழியர் காயமடைந்தார். ஊழியர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்ட பிறகே மாவட்ட ஆட்சியருடன் சமாதானம் பேச மனு போட்டார்கள் அ.ஊ.கள்.

இந்நிலையில்தான் 9-04-18 திங்களன்று திருவண்ணாமலையில், "பொதுஅமைதிக்கான மக்கள் கூட்டமைப்பு' என்ற பெயரில், ஆண்களும் பெண்களுமாய் இருநூறுக்கும் மேற்பட்டோர் இணைந்து அரசு ஊழியர்களின் அத்துமீறலை, அராஜகத்தை, வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

""அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் ஒரு சிறிய வேலையைக்கூட செய்துகொள்ள முடிவதில்லை. அரசு ஊழியர் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி, மக்களுக்கு எதிரான காரியங்களை மட்டுமின்றி மாவட்ட ஆட்சியருக்கு எதிரான காரியங்களையும் செய்கிறார்கள்...'' ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே காவல்துறை உள்ளே நுழைந்தது. ""ஆர்ப்பாட்டத்துக்கு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்படுகிறது'' என்றது.

ஆர்ப்பாட்டம் செய்த "அமைதிக்கான மக்கள் கூட்டமைப்பு' சட்டை செய்யவில்லை. அதன்பிறகு, மாவட்ட ஆட்சியரே அழைத்து கூட்டமைப்பினரோடு பேசி ஆர்ப்பாட்டத்தை கைவிடச் செய்தார்.

இதுபற்றி ஆட்சியரோடு பேசிவிட்டு வந்த அரங்க குணசேகரன், ""போராட்டம் வேண்டாம், மனுவில் எழுதித் தாருங்கள் என்றார் ஆட்சியர். அதனால் போராட்டத்தைக் கைவிட்டோம். பிரச்சினை தீராவிட்டால் போராட்டம்தான்'' என்றார்.

-து.ராஜா

""பிரே பண்ணுங்க சார்!''

signal

கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய எஸ்.ஐ. ஜோசப், தனது இரவு ரோந்துப்பணியைத் தொடங்கினார். பல தெருக்களைக் கடந்து புதூருக்கு அடுத்த ராதாகிருஷ்ணன் தெருவுக்குள் நுழைந்தார். தெருவில், ஏழெட்டுப் பத்து இளைஞர்கள், டாஸ்மாக் சரக்குகளையும் பிளாஸ்டிக் டம்ளர்களையும் சைடு டிஷ்களையும் பரப்பி வைத்தபடி பார்ட்டி நடத்திக்கொண்டிருந்தார்கள்.

போதையின் உச்சியில் அலப்பறை செய்துகொண்டிருந்த அவர்கள், எஸ்.ஐ. ஜோசப்பை பார்த்ததும் குரலை உயர்த்தி, ""பிரே பண்ணுங்க சார்... நடுத்தெருவுல பார்ட்டி நடத்துற யூத்துகளுக்காக பிரே பண்ணுங்க சார்'' என்று கோரஸாகப் பாட ஆரம்பித்தார்கள். அவர்களை நெருங்கிய எஸ்.ஐ. ""டேய்... வீட்டுக்கு கிளம்புங்கடா... எல்லாத்தையும் எடுத்துட்டுக் கிளம்புங்கடா'' எச்சரித்தார். ""யோவ்! உன் வேலையைப் பார்த்துட்டு நீ போய்யா'' என்றார்கள் அலட்சியமாக.

""ஏண்டா பொறுக்கியளா... என்னையே கிண்டல் பண்றீங்களா?'' இன்னும் அருகில் சென்றார். திடுமென எழுந்த இளைஞர்கள் எஸ்.ஐ. ஜோசப்பை தாக்கத் தொடங்கினார்கள். அடி தாங்க முடியாமல் கதறியபடி ஓடத் தொடங்கினார் எஸ்.ஐ. இளைஞர்களின் பார்ட்டி மீண்டும் தொடங்கியது.

பாதுகாப்பான இடத்துக்கு சென்ற எஸ்.ஐ., செல்போனில் ஏ.சி.யிடம் புகார் செய்தார். பறந்து வந்த ஏ.சி.யின் படை ஏழு இளைஞர்களை அள்ளிச்சென்று கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை அவர்கள் மீது பதியத் தயாரானது.

""வேண்டாம் சார்... வாலிபப் பையனுங்க... போதையில ஏதோ தெரியாம என்னை அடிச்சிட்டானுங்க. கொலை முயற்சி வழக்குப் போட்டா அவனுங்க லைப்பே ஸ்பாயில் ஆயிடும்... மன்னிச்சு விட்டுடலாம் சார்'' கெஞ்சினார் இளைஞர்களிடம் அடிபட்ட எஸ்.ஐ.

அவருடைய கோரிக்கையை ஏற்று, 75 கேஸ் போட்டு ஜாமீனில் அனுப்பினார்கள். அந்த ஏழு இளைஞர்களும் அவர்கள் பெற்றோரும் எஸ்.ஐ. ஜோசப்பை தேடிச்சென்று நன்றி பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள் இப்போது.

-அருள்குமார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்