தி.மு.க.வை சேர்த்துக்கொண்ட தினகரன் கட்சி!
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது டி.டி.வி. தினகரன் கட்சி என்று இன்றுவரை மேடைகளில் அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
"தி.மு.க.வுடன் உறவு எந்தக் காலத்திலும் இல்லை' என்று தினகரன் கட்சியினர் இன்றுவரை பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை எதிர்த்து தனது தோழமைகளுடன் காவிரி மீட்பு நடைப்பயணம், ஆர்ப்பாட்டம், மறியல் என்று தி.மு.க. ஒருபக்கம் தீவிரம் காட்டுகிறது.
தினகரன் கட்சியினரும் மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து விவசாய சங்கங்களின் இணைப்போடு காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்று ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் தி.மு.க.வும், தினகரனின் அ.தி.மு.க.வும் இணைந்தே காவிரிப் பிரச்சினைக்காக ஆட்டோ பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தின.
கோட்டைப்பட்டினச் சுற்றுவட்டார ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் பெயரில் நடத்தப்பட்ட பேரணி என்றாலும், நூற்றுக்கும் அதிகமான ஆட்டோக்கள் கலந்துகொண்டன என்றாலும், ஒருங்கிணைத்து நடத்தியது அ.ம.மு.க.வின் புதுக்கோட்டை மா.செ. மணல்மேல்குடி பரணி கார்த்திகேயன் ஏற்பாட்டில் ஆவுடையார்கோயில் தி.மு.க. ஒ.செ. உதயம் சண்முகம், மணல்மேல்குடி ஒ.செ. சக்தி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம்., இஸ்லாமிய அமைப்புகளும் ஒற்றுமையாய் இணைந்துதான் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
""இந்தச் சிறிய ஊரில் நடந்த இந்தப் பேரணி, ஆர்ப்பாட்டம்போல தமிழகம் முழுவதும் நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட முடியும்'' என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.
-பகத்சிங்
சிறைத்துறையில் லஞ்ச டிரான்ஸ்பர்!
தமிழகம் முழுவதுமுள்ள சிறைத்துறை முதல், தலைமைக் காவலர்கள் 76 பேருக்கு கோவை, சேலம், வேலூர், கடலூர், புழல், நாகை, புதுகை, பாளை, திருச்சி, அம்பை, திருப்பூர், மதுரை சிறைகளுக்கு பணியிடமாறுதல் ஆணை 13-04-18 அன்று சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது.
இந்த ஆணையைப் பார்த்த சிறை சீனியர் காவலர்களுக்கு அதிர்ச்சி. டிரான்ஸ்பருக்கு விண்ணப்பித்த சீனியர்கள் யாருக்குமே வாய்ப்பளிக்கப்படவில்லை. புதியவர்களுக்கும் ஜுனியர்களுக்கும்தான் டிரான்ஸ்பர் கிடைத்திருக்கிறது.
16-04-18 அன்று, சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்ட முதல்நிலைத் தலைமைக் காவலர்கள் வந்தனர்.
""ஒவ்வொரு டிரான்ஸ்பருக்கும் ஒரு லட்ச ரூபாய்வரை விளையாடியிருக்கிறது. சைலேந்திரபாபு சார் ஏ.டி.ஜி.பி.யாக இருந்தபோது, கவுன்சிலிங் முறையில் டிரான்ஸ்பர் போடப்பட்டது. அந்த முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த டிரான்ஸ்பர் ஊழலுக்கு டி.ஐ.ஜி. கனகராஜ்தான் காரணம். லஞ்ச டிரான்ஸ்பரை உடனே நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று முறையிட்டனர்.
""பணம் கொடுத்தால்தான் டிரான்ஸ்பர் என்றால், எங்கள் வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் போடுங்கள்'' என்று கடிதத்தோடு வந்திருந்தார் ஒருவர்.
""கவுன்சிலிங் முறையில் டிரான்ஸ்பர் போடாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்'' என்று தீனதயாளன் என்ற காவலர் எச்சரித்திருக்கிறார்.
சீனியர் முதல்நிலைக் காவலர்களின் குமுறலைக் கேட்ட ஏ.டி.ஜி.பி. சுக்லா, ""இந்த டிரான்ஸ்பரை மாற்ற முடியாது... ஆனால் விசாரிக்கிறேன்'' என்று சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்.
-ஜெ.டி.ஆர்.
எம்.பி.க்கு எதிராக எக்ஸ் எம்.எல்.ஏ. சபதம்!
நாகர்கோயில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், ஒழுகினசேரியில் உள்ள தனது சொந்த கட்டடத்தை டாஸ்மாக்கிற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு "பார்' நடத்துவதும் நாஞ்சில் முருகேசனே.
அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்ட பிறகும், இரவு முழுவதும் நாஞ்சில் முருகேசன் பாரில் எல்லா சரக்கும் சப்ளையாகிக்கொண்டுதான் இருக்கும். விற்பனை படுஜோராக நடக்கும். இதை டாஸ்மாக் நிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை.
புதிதாய் பொறுப்பேற்ற பயிற்சி ஏ.எஸ்.பி. ஜவஹர் 14-4-18 அன்று இரவு ஒரு மணிக்கு நாஞ்சில் முருகேசனின் பாருக்குள் நுழைந்தார். நாஞ்சில் முருகேசன் உட்பட நான்கு நபர்களை பிடித்து வடசேரி காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்றார்; உட்கார வைத்தார். வழக்குப் பதிவு செய்தார்.
""என்னை வெளியே விடலைனா இந்த வடசேரி காவல்நிலையத்திலேயே தூக்குப்போட்டுச் செத்துப்போவேன். இந்த "பார்' என்னோடது மட்டுமில்லை... இதுல மந்திரியும் பார்ட்னர். நாளைக்கு இருக்கு உனக்கு...'' ஏ.எஸ்.பி.யை மிரட்டியும் கெஞ்சியும் அதிகாலையில் வெளியே வந்துவிட்டார் நாஞ்சில் முருகேசன்.
வெளியே வந்தவர், ""அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.வாக, மாவட்டச் செயலாளராக இருந்தவன். அம்மா செத்தபிறகு, நான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியிலுமில்லை, டி.டி.வி. தினகரன் அணியிலும் இல்லை. நான் நானாக இருக்கிறேன். இது பொறுக்காமல்தான் இ.பி.எஸ்.ஸின் காவல்துறை என்மீது சாராய வழக்குப் போட்டுவிட்டது. எனது புத்தாண்டு சபதம் என்ன தெரியுமா? இதுக்கு காரணமான எம்.பி. விஜயகுமாரை பழிவாங்குவதுதான்'' சவால்விட்டார் நாஞ்சில் முருகேசன்.
-மணிகண்டன்