ஊரடங்கில் வேலை இல்லாததால் திருட்டுத் தொழில்!
ஈரோடு பெருந்துறை ரோடு, சங்கு நகர் பிரிவு அருகே செயல்பட்டு வருகிறது அந்தத் தனியார் ஏ.டி.எம்.! காவலாளி இல்லாத இந்த ஏ.டி.எம்.மில், கடந்த 21ந்தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், கொள்ளை முயற்சி நடப்பதாக, வங்கி ஊழியர்களுக்கு அலர்ட் மெசேஜ் சென்றிருக்கிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியரான சுரேஷ், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்மந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்த தெற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசார், அங்கு ஏ.டி.எம். இயந்திரத்தின் முகப்புப் பகுதியை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞரைக் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஈரோடு திண்டல் வள்ளியம்மை நகரைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது.
கொள்ளை முயற்சி தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, ""நான் கார் டிரைவர். தொடர்ச்சியான வேலை இல்லாததால் ஆக்டிங் டிரைவராக யார் அழைத்தாலும் வேலைக்கு செல்வேன். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்தினேன். கொரோனா வந்ததும் அந்த வேலையும் கிடைப்பதில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நான், வேறு வழியின்றி திருட்டில் ஈடுபட முடிவுசெய் தேன். வீடு புகுந்து திருடக்கூடாது என்று தீர்மானித்துதான், ஏ.டி.எம்.மில் இருக்கும் அரசாங்கப் பணத்தை எடுக்கச் சென்றேன்'' என்று பரிதாபமாகக் கூறியிருக்கிறார். இதற்காக போலீசார் இரக்கமா படமுடியும். அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு சிறையில் அடைத்துவிட்டனர்.
ஊரடங்கு தாக்கத்தின் இன்னொரு முகம் இது.
- ஜீவாதங்கவேல்
பணிநேரத்தில் போதை ஆட்டம்! விவகாரத்தில் விருதுநகர் மாவட்ட சிறை!
"சிறைகளுக்குள் கொரோனா பரவுகிறது' என்ற பீதியில் சிறைவாசிகள் பரிதவித்துவரும் நிலையில், விருதுநகர் மாவட்ட சிறையில், பணிநேரத்தில், சிறை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள சிறை அலுவலர் வடிவேல், மதுபோதையில் கண்ட படி உளறிக்கொண்டு இருந்திருக்கிறார்.
இந்த விவகாரம், உதவி சிறை அலுவலர் ராம்குமார் மூலம் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகாராகியுள்ளது. சிறை அலுவலர் வடிவேல், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஏ.ஆர். காப்பி பதிவுசெய்யப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையும் பதிவாகியுள்ளது.
""உயரதிகாரியான நீங்கள் இப்படி குடிபோதையில் பணிக்கு வரலாமா?'' என்று கேட்டாராம், உதவி சிறை அலுவலர் ராம்குமார். அதற்கு வடிவேல், ""நீங்கல்லாம் யோக்கியமா? உன் வேலையைப் பார்...''’ என்று தகாத வார்த்தையில் பேசினாராம்.
இந்த வழக்கின் பின்னணியில் வேறொரு விவகாரம் இருப்பதாகச் சொல்கிறது விருதுநகர் சிறைத்துறை வட்டாரம். சிறை அலுவலர் வடிவேல் விடுப்பில் இருந்தபோது, பிணை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, பிணை உத்தரவு என்று தவறுதலாக கருதி, சிறைவாசி ஒருவரை ’ரிலீஸ்’ செய்துவிட்டனர். இதன்பிறகு, வழக்கறி ஞர் மூலம் அந்தக் கைதியை திரும்ப அழைத்து வந்து, செல்லில் அடைத்துள்ளனர். இந்தத் தவறுக்காக, சம்பந்தப்பட்டவர், துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார். இந்த எரிச்சலில்தான், மதுப்பழக்கம் உள்ள சிறை அலுவலர் வடிவேலுவை, அவர் சிக்க வைத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவைப் படித்து புரிந்துகொள்ள இயலாத நிலையில்தான் தமிழகத்தில் சிறை அலுவலர்கள் பலரும் உள்ளனர். புழல் சிறை தொடங்கி, விருதுநகர் மாவட்ட சிறை வரை இதே நிலைதான்!
-ராம்கி
ஊதியத்திற்காக அல்லாடும் மாற்றுத்திறனாளி!
2010ல் இருந்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் மாதவன். 3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியவர் என்பதால், இவர் மணலி பகுதிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.
மாற்றுத்திறனாளியான தான், அவ்வளவு தூரம் சென்றுவர முடியாது. மனைவி உயிரிழந்த நிலையில் 2 மகள்கள், வயதான தாயாருடன் சென் னையில் இருக்க விரும்புவதாக அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பினார் மாதவன். இதையேற்று சென்னை லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்தது கல்வித்துறை.
இந்நிலையில், 01-10-2018ல் மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலகம் தன்னை விடுவித்தது. 31-07-2018ல்தான் கடைசியாக ஊதியம் பெற்றேன். இதிலிருந்து இரண்டு ஆண்டுகளாக சம்பளம் பெறாமல் சிரமப்படுகிறேன். இறுதி ஊதியச்சான்று இருந்தால் இதற்கு தீர்வு கிடைக்கும். ஆனால், மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலருக்கு இது தொடர்பாக பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை என்று மாதவன் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
வட்டார கல்வி அலுவலர் முத்துலெட்சுமியிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ""மாதவனுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது. இங்குள்ள ஆசிரியர் சிக்கன நாணய கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருந்தாலே கடன் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் தடையில்லா சான்று வாங்கவேண்டும். என்.ஓ.சி. கொடுத்துவிட்டால் இறுதி ஊதியச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மாதவனுக்கு ரூ.4,34,691 கடன் உள்ளது. அந்தக் கடனை அடைத்துவிட்டால் என்.ஓ.சி. சான்று அளித்து விடுவார்கள். இதுதான் நடைமுறை'' எனத் தெளிவாக விளக்கம் அளித்தார்.
2 ஆண்டுகளாக ஊதியம் பெறாமல் இருக்கும் பிரச்சனையை கல்வித்துறை உயரதிகாரிகள் கருணையுடன் கவனம்செலுத்தி தீர்க்கவேண்டும் என்கிறார்கள் மாதவனுக்காக குரல் கொடுப்பவர்கள்.
-ராஜவேல்