பத்திரிகையாளர்கள் அரெஸ்ட்! அடாவடி ஆய்வாளர்!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி ஊர்க்கோவில் விவகாரத்தில், இருதரப்பினருக்கு இடையே பிரச்சனை உருவானது. காவல்நிலையம் வரை புகார்சென்றும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ஒரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் 13-ந் தேதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருபதுக்கும் மேற்பட்ட போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களை ராமநத்தம் இன்ஸ்பெக்டரும், வேப்பூர் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரியுமான புவனேஸ்வரி தலைமையில் விரட்டியடித்தனர். இதனைப் படம்பிடித்த தினசரி பத்திரிகையாளர்கள் இருவரைக் கண்டதும் ஆவேசமடைந்த புவனேஸ்வரி, கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அவர்களின் செல்போன்களைப் பிடுங்கினார்.
இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஆத்திரமான புவனேஸ்வரி பத்திரிகையாளர்களைக் கைதுசெய்து லாக்-அப்பில் அடைத்தார். இந்தத் தகவல் கடலூர், விழுப்புரம் மாவட்ட பத்திரிகையாளர்களுக்குப் பரவியது. அவர்கள் இதுபற்றி எஸ்.பி. அபிநவ், டி.எஸ்.பி. தீபா சத்தியனிடம் முறையிட்டனர். அவர்கள் பேசிப் பார்த்தனர்.
இன்ஸ். புவனேஸ்வரியோ, ""ஒருத்தன் செல்போனைப் பிடுங்கும்போது, என் காக்கிச் சட்டையை இழுத்தான். ரெண்டுபேர் மேலயும் வழக்குப்போட்டு சிறையில் அடைப்பேன். ஐ.ஜி.யே சொன்னாலும் கேட்கமாட்டேன்'' என்று அடம்பிடித்தார். பொறுமையிழந்த ஊடகத்துறையினர் காவல்நிலையம் முன்பு திரண்டனர். பொதுமக்களும் ஆதரவு தர, நிலைமையின் தீவிரம் உணர்ந்து பத்திரிகையாளர்கள் மீது சி.எஸ்.ஆர். மட்டும் பதிந்துவிட்டு மாலை விடுவித்தனர்.
மாமூல்பேர்வழியான இன்ஸ். புவனேஸ்வரி மீது அந்தப் பகுதியில் அதிருப்தி நிலவுகிறது. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, புவனேஸ்வரிக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி அனைத்துக் கட்சியினரும், ஊடகத்தினரும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
-எஸ்.பி.சேகர்
மீண்டும் ஒரு லாக் அப் மரணம்!
காட்டுமன்னார்கோவில் பகுதி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வருபவர்களிடம் உதவுவதுபோல் மோசடி செய்ததாகக் கூறி, உத்திரச்சோலை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமாரை (24) விசாரணைக்காக கடந்த புதன்கிழமை காவல்நிலையம் கூட்டிச்சென்றனர் காவலர்கள். அங்கு சிறப்பு கவனிப்பு கொடுக்கப்பட்டது.
பிறகு வியாழன் காலை 9 மணிக்கு அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று சோதனை செய்துவிட்டு, மீண்டும் லாக்-அப்பில் வைத்து கவனிப்பு தொடர்ந்திருக்கிறது. அன்று காலை 9.50-க்கு வினோத் லாக்-அப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவித்துவிட்டு, சடலத்தை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பின்னர் பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதை அறிந்து கடலூருக்கு மாற்றினர்.
உடற்கூறாய்வு முடிந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மகனின் உடலருகே கதறிக்கொண்டிருந்த அவரது தந்தை மூர்த்தி, “""போலீஸ் பார்த்திபன், ஏட்டு ராஜா ஆகியோர் என் மகனைக் கைதுசெய்து அடிப்பதாக தகவல் வந்ததும், வெளியூரிலிருந்து ஓடிவந்தேன். கைது செய்ததைச் சொல்லாத காவலர்கள், செத்த தகவலைச் சொன்னார்கள். கை, கால்கள் வீங்கியிருந்தன. கழுத்தில் ஒருவிரலில் மையால் தடவியதுபோல் வடு மட்டுமே இருந்தது. அவனை அடித்தே கொன்றுவிட்டார்களே'' என்று துடித்தார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், ""தன்னைக் கைதுசெய்து கூட்டிச் செல்வதை ஊர்மக்கள் வேடிக்கை பார்த்த அவமானத்தில் வினோத்குமார் தற்கொலை செய்துகொண்டார்'' என்றார். தற்கொலைக்குப் பிறகு எடுத்த போட்டோ, வீடியோ இல்லை என்று மறுத்துவிட்டார்.
தூக்கு மாட்டியது வேட்டியில், கயிறில் என்று மாறிமாறி காவலர்களே பிதற்றுவதால் சந்தேகம் வலுக்கிறது.
-காளிதாஸ்
அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்!
"காற்று பலமாக வீசுகிறது' என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இருப்பினும், தங்களுக்குச் சொந்தமான பதிவெண் பெறாத நாட்டுப் படகில் தங்கச்சிமடம் அந்தோணி, பாம்பன் மினோன், ஸ்டீபன், சூசையப்பர்பட்டினம் சிந்தாஸ் ஆகியோர் 4-ந் தேதி மாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
முதல்நாள் கடலுக்குச் செல்பவர்கள் மறுநாள் காலை 10 மணிக்குள்ளாக வந்துவிட வேண்டும் என்பது வழக்கம். 5-ந் தேதி மதியம் ஆகியும் நால்வரும் திரும்பவில்லை. ராமேசுவரம் பிசாசு முனைக்கு 12 நாட்டிகல் தொலைவில் பார்த்ததாக படையப்பா நாட்டுப்படகு, எதேச்சையாக கூற உடனடியாக மீன்வளத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலை கலெக்டர், கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படைக்கு அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்தது மீன்வளத்துறை.
""படையப்பா நாட்டுப்படகு கொடுத்த ஜி.பி.எஸ். மார்க்கை வைத்து, நாட்டுப்படகுகளில் சென்று நாங்களே தேடினோம். அதிவேகமாக செல்லக்கூடிய மரைன் படகுகள் வரவில்லை. 8-ந் தேதி நம்புதாழை மீனவர்களின் கண்ணில்பட்ட ஸ்டீபனையும், அந்தோணி யையும் காப்பாற்றினார்கள். நீரில்மூழ்கிய சிந்தாஸ், மினோனின் அழுகிய உடல்களை 11, 13 தேதிகளிலேயே கோடியக்கரை முத்துப்பேட்டை கழிமுகப்பகுதிகளில் கண்டெடுத்தோம்'' என்கிறார் பாரம்பரிய மீனவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி.
""பலமான காத்துல படகு கவிழ்ந்தது. மினோன் அப்போவே மூழ்கிட்டாரு. படகோட வழுக்கலான முகப்பைப் பிடிச்சே தவிச்சிட்டு இருந்தோம். தனிமையும், வலியும் தந்த மனச்சிதைவால் "டீ, பன் வாங்கி வர்றேன்'னு சிந்தாஸ் கடலுக்குள்ள போயிட்டாரு'' என்று சிகிச்சை பெற்றுவரும் அந்தோணியும், ஸ்டீபனும் திகைப்புடன் கூறினர்.
மாவட்ட ஆட்சியரும், உள்ளூர் அமைச்சரான மணிகண்டனும் மீனவர்களின் இறப்பைக்கூட கண்டுகொள்ளவில்லை. ""மரைன் படகுகள் வர மத்திய அரசு ஆர்டர் போடணுமாக்கும். ஆபத்தான நேரத்துல உதவாம, குட்டிக்கரணம் அடிச்சு ஷோ காட்டத்தானா உங்க ஹெலிகாப்டரெல்லாம்?'' என்று கொதிக்கிறார்கள் மீனவர்கள்.
-நாகேந்திரன்