"ஹலோ தலைவரே, தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இப்போதே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.''”
"ஆமாம்பா, இதற்காக மதுரையில் பிரமாண்டமாகப் பொதுக்குழுவை நடத்த, தி.மு.க. தயாராகி வருகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஜூன் 1ஆம் தேதி மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை உற்சாகமாக நடத்த இருக்கிறது தி.மு.க. இதற்காக அங்குள்ள உத்தங்குடியில் 20 ஏக்கர் பரப்பளவில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆயிரம்தான் என்றாலும் 10 ஆயிரம்பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. பொதுக்குழுவிற்கு வரும் ஸ்டாலின், அங்கு ரோடு ஷோவை நடத்தவும் இருக்கிறாராம். இந்தப் பொதுக்குழுவை, தேர்தலுக்கான அச்சார நிகழ்வாகவும், பிரச்சாரத் தொடக்க நிகழ்வாகவும் அறிவாலயம் பார்க்கிறது. இந்த நிலையில், முதல்வரின் மாப்பிள்ளை சபரீசனின் தலைமையில் இயங்கும் "பென்' அமைப்பு, தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகள் எவை?, இன்னும் கவனம் செலுத்தவேண்டிய தொகுதிகள் எவை? என்றெல்லாம் சீக்ரெட்டாக ஆய்வு நடத்திவருவதோடு, அங்கெல்லாம் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதிக சாதகம் என்கிற கணக்குகளையும் இன்னொரு பக்கம் போட்டு வருகிறதாம்.''”
"தி.மு.க.வின் இதயம் இளைஞரணிதான்னு உதயநிதி சொல்லியிருக்கிறாரே?''”
"தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், திருச்சியில் 25ஆம் தேதி நடந்தது. அதில் பேசிய உதயநிதி, ’"தி.மு.க.வின் இதயம் என்றால் அது இளைஞரணிதான். அதில் சிறப்பாக செயல் பட்டவர்கள் இன்று பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். இளைஞர் அணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், உங்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். நாடாளு மன்றத் தேர்தலில் நாம் 40 தொகுதி களிலும் வெற்றிபெற இளைஞரணியின் பங்களிப்புதான் முக்கிய காரணம். சமூக வலைத்தளத்திலும் நமது கருப்பு சிவப்பு கொடி உயர்ந்து பறக்க வேண்டும், நம்முடைய பணி 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே இருக்க வேண்டும். நம் திராவிட மாடல் அரசு செயல் படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். அதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றிபெற்றாக வேண்டும்' என்றெல்லாம் இளைஞரணியின ருக்கு உற்சாகமூட்டினார்.''”
"இதற்கிடையே, நெல்லை தி.மு.க. ஆய்வுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யிடம் ஆதங்கத்தைக் கொட்டியிருக்காங்களே?''”
"நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தி.மு.க. மண்டலத்துக் கூட்டத்தை, அதன் பொறுப்பாளரான கனிமொழி எம்.பி. கூட்டியிருந்தார். தொடக்கத்திலேயே, "வர இருக்கும் தேர்தல்ல கடும் போட்டிகளை நாம் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் அனைவரும் பொறுப்பாக வேலை பார்த்தாகணும். குறிப்பா, நெல்லை, அம்பை, தொகுதிகளில் நாம் தீவிர கவனம் செலுத்தியாகணும்' என்றார். அப்ப கட்சி நிர்வாகிகள் சிலர், ’"நம்ம ஆட்சி வந்து நாலு வருசமாச்சி. இதுவரை யாரும் கட்சிக்காரங்களைக் கண்டுக்கலை. கஷ்டப்படும் கட்சிக்காரங்களுக்கு யாரும் உதவலை. பொறுப்பு அமைச்சர் கூட, கட்சிக்காரங்களை ஏறிட்டுப்பாக்கலை. அதே நேரம் அ.தி.மு.க. ஆட்சி நடந்தப்ப, அவங்க கட்சிக்காரங்களை நல்லா கவனிச்சிக் கிட்டாங்க. அப்படிப்பட்ட போக்கு நம்ம ஆட்சியில் இல்லை"ன்னு குமுறியிருக்காங்க. இதைக்கேட்டுத் திகைத்த கனிமொழி, "உங்க மனக்குமுறலை தலைமையின் கவனத்துக்குக் கொண்டுபோகிறேன்'ன்னு சொல்லியிருக்காங்க. "இதுக்கப்புறமாவது கட்சிக்காரங்களுக்கு நல்லது நடக்குமா?' என்கிற எதிர்பார்ப்பு அங்கே தி.மு.க. உடன்பிறப்புகள் மத்தியில் உருவாகியிருக்கு.''”
"நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு சப்போர்ட்டாக நிறைய தொழிலதிபர்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு பல்வேறு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் ஆதரவாகக் கைகோத் திருக்கிறார்களாம். குறிப்பாக, ஆந்திர கல்குவாரி அதிபர் விஷ்ணு ரெட்டி, விஜய்க்கு ஃபைனான் ஸியல் பலமாக மாறி இருக்கிறாராம். இந்த விஷ்ணு, தமிழகத்தில் இயங்கும் "ஜி ஸ்கொயர்' நிறுவனத்தோடும் இணைந்து ரியல்எஸ்டேட் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள். இவரது மைத்துனரான சுஜய் ரெட்டி, தமிழ்த் திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்து வருகிறவராம். இந்த சுஜய் மூலம்தான் விஷ்ணுவே நடிகர் விஜய்க்கு நெருக்கமானார் என்றும் சொல்கிறார்கள். விஜய்யும் விஷ்ணு வும் அடிக்கடி சீக்ரெட்டாக சந்தித்து மகிழ்கிறார்களாம். அண்மையில் கூட இருவரும் கோவைக்கு தனி விமானத்தில் பறந்தார்களாம். இதில் இன்னொரு ரகசியம் என்னவென்றால் இந்த விஷ்ணுவும், டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் தேடப்பட்டு வருபவரும் நெருக்கமான நண்பர்களாம். இத்தனை களேபரங்களை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில் கூட, விஷ்ணு பற்றிய எந்தத் தகவலும் வெளியே கசியாதபடி, நட்பு காரணமாக விஜய் தரப்பு பார்த்துக் கொண்டதாம்.''”
"அ.தி.மு.க.-பா.ஜ.க. பிரபலங்கள் பொள்ளாச்சியில் ஒன்று கூடி கைகுலுக்கி இருக்காங்களே?''”
"அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருந் தாலும் இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கிடையே இன்னும் நெருக்கமும் புரிதலும் உருவாக வில்லை என்ற மனக்குறை இரு தரப் பிலுமே இருந்து வந்தது. இதேநிலை நீடித்தால், தேர்தல் நேரத்தில் இது பயன்தராது என்கிற கருத்தும் பா.ஜ.க. தரப்பில் வைக்கப் பட்டது. சட்ட மன்றக் கூட்டம் நடந்த நேரத்தில் எடப்பாடியை அவரது அறையில் சந்தித்த, தமிழக பா.ஜ.க. தலைவ ரான நயினார், இது குறித்து அப்போதே விவாதித்தாராம். அதற்கு எடப் பாடியோ, இரு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் இணக்கம் உருவாக வேண்டு மானால், பொது நிகழ்விலும், பொது மேடைகளி லும் இரு கட்சித் தலைவர்கள் ஒன்றாக பங் கேற்கவேண்டும் என்றாராம். இதன் அடிப்படையில், பொள்ளாச்சியில் 25ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. முன் னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் இல்ல காதணி விழாவில், எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. பிரபலங்களோடு, நயினார், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் கலந்துகொண்டு ஒருவரோடு ஒருவர் அளவளாவி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இரு தரப்பினரின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறதாம்.''
’"தி.மு.க. மீது, அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் வைக்கும் விமர்சனத்திற்கு சிறுத்தைகள் திருமா, அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறாரே?''”
"’திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தன்முன் வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அழுத்தமாகப் பதில் கொடுத்தார். அப்போது அவர், இவ்வளவு நாள் நிதி ஆயோக் கூட்டத்திற்குப் போகாத முதல்வர், இப்போது ஏன் போனார் என்றும், டெல்லியிடம் தஞ்சமடைந்துவிட்டார் என்றும் விமர்சிக் கிறார்கள். இதற்கு முன் அவர் பங்கேற்காதது அவர் நடத்திய அடையாளப் போராட்டம். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியைக் கேட்டு வலியுறுத்துவது முதல்வருக்கு இருக்கும் கடமை. அதைத்தான் இப்போது அவர் செய்திருக்கிறார். மதச்சார்பற்ற கூட்டணியைத் தலைமை தாங்கி நடத்தும் தி.மு.க., பா.ஜ.க.வோடு நெருக்கம் காட்டும் வரலாற்றுப் பிழையை எப்போதும் செய்யாது. இது தெரிந்தாலும், தி.மு.க. மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக, எடப்பாடி, கீழ்த்தரமாக விமர்சிக்கிறார். டெல்லி, தமிழகத்துக்கு எதிராகவே நடக்கிறது. இந்தி விவகாரமாக இருந்தாலும் கீழடி விவகார மாக இருந்தாலும் அது நமக்கு எதிரிதான். கீழடி ஆய்வறிக்கையைக் கூட ஏற்றுக் கொள்ளாமல், திருத்தம் செய்யச் சொல்வதிலேயே தமிழகத்தின் மீதான அதன் காழ்ப்புணர்வு தெரிகிறது’ என்றெல்லாம் அதிரடிக் கருத்துக்களை அள்ளி இறைத்தார்.''”
"அ.தி.மு.க.-பா.ஜ.க. தரப்புகளுக்கு இடையில், சீட் ஷேரிங்கில் பஞ்சாயத்து நடக்குதே?''”
"தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், நாகாலாந்த் மாநில கவர்னரு மான இல.கணேசனின் சதாபிஷேக விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரான பி.எல்.சந்தோஷ் சென்னை வந்திருந்தார். அவரது வருகை பற்றி யாருக்கும் சொல்லப்படாத நிலையிலும், அவர் வந்திருப்பதை அறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் அதிக சீட்டுகளை பா.ஜ.க.தான் பெற வேண்டும். கூட்டணிக்குள் எத்தனை கட்சிகள் வந்தாலும், அ.தி.மு.க.வுக்கு அடுத்த சீட் எண்ணிக்கை பா.ஜ.க.வுக்குத் தான் இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் சொல்ல, அதனை மறுத்துப் பேசும் விதமாக, சீட் எண்ணிக்கை நமக்கு முக்கியமில்லை ; வாங்கும் சீட்டுகளில், 100 சதவீத வெற்றி நமக்கு கிடைக்க வேண்டும். எனவே, நீங்கள் யாரும் சீட் ஷேரிங் பற்றிப் பேசக்கூடாது. நமது இலக்கு தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான். அதில் செலுத்துங்கள் என்று கறாராகச் சொல்லியிருக்கிறார். அதோடு, கரு.நாகராஜன் உள்ளிட்ட சில நிர்வாகிகளுக்கு டோஸும் விழுந்ததாம்.''”
"டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையிடம் முன்னாள் பா.ஜ.க. மாநில நிர்வாகி சிக்கியிருப்பதாகச் சொல்கிறார் களே?''”
"அமலாக்கத்துறையின் வலையில் மாஜி பா.ஜ.க. மாநில நிர்வாகி சிக்கியிருக்கிறார். டாஸ்மாக் விவகாரத்தை சலித்துவரும் அமலாக்கத்துறை, இதில் தொடர்புடைய சிலரோடு அவர் நிழலுலகத்தில் நெருக்கமான நட்பு கொண்டிருந்ததைக் கண்டறிந்திருக்கிறதாம். அதேபோல், கடந்த வருடம் டிசம்பர் 24ஆம் தேதி அவர், சென்னை லீலா பேலஸ் ஓட்டலில், தேர்தல் வியூக வகுப்பாளரான சுனிலுடனும், டாஸ்மாக் தொடர்பான நபர்களுடனும் தீவிர டிஸ்கஷன் நடத்தியதையும் கண்டறிந்து, அதுகுறித்த விசாரணையையும் அமலாக்கத்துறை நடத்தி வருகிறதாம். இது குறித்த ரிப்போர்ட்டு களை பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கும் அமலாக்கத்துறை, அவர்களின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறதாம். அவர்களிட மிருந்து சிக்னல் கிடைத்ததும், அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி தொடர்பான இடங்களிலும் அதிரடி ரெய்டு நடவடிக்கைகள் தொடங்கும் என்கிறார்கள்.''”
"சரிப்பா, இந்த மாஜி பா.ஜ.க. மாநில நிர்வாகி, குடும்பத்துடன் ரகசியமாக சிங்கப்பூர் போயிருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் நிர்வாகி, திடீரென்று தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள செந்தோசா தீவில் அவர் உல்லாசமாகப் பொழுதை கழிக்கிறாராம். அவர் இந்தப் பயணத்தை சீக்ரெட்டாக வைத்திருக்கிறார். அவரது பயணம் குறித்து, பா.ஜ.க. மாநில தலைவருக்கோ, நிர்வாகிகளுக்கோ கூட அவர் தெரிவிக்கவில்லையாம். எனினும், இதை மத்திய உளவுத்துறை மோப்பம் பிடித்து, ஒன்றிய அரசுக்கு ரிப்போர்ட் போட்டிருக்கிறதாம். ஏற்கெனவே அவர் மீது, தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட வசூல் தொடர்பான புகார்கள் குறித்து, அமித்ஷாவே கடுமையாக விசாரித்தார். இதுபோன்ற நிதி மோசடி விவகாரங்கள் தான், அவரது கட்சிப் பதவியை பறிக்க வைத்தது. இந்த நிலையில், அவரின் இந்த சிங்கப்பூர் பயணத்தின் போது, கணிசமான முதலீடுகளை அங்கே அவர் பதுக்குகிறாரா? என்று மத்திய உள்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறதாம்.''”
"ஓ.பி.எஸ். விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் எடப்பாடி முரண்பட்டிருக்கிறாரே?''”
"ஓ.பி.எஸ்.. எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார் என்று மாநில பா.ஜ.க. தலைவர் நயினாரும் முன்னாள் மாநில நிர்வாகியும் சொன்னதால், ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டார் எடப்பாடி. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. அணியில் எந்த நிலையி லும் ஓபிஎஸ்.ஸைச் சேர்க்கக்கூடாது. இதை மீறி அந்த முயற்சியில் நீங்கள் இறங்கினால், நாங்கள் உங்களிடம் இருந்து விலக வேண்டியிருக்கும் என்று எடப்பாடி, அழுத்தம் திருத்தமாகவே நயினாரிடம் தெரிவித்துவிட் டாராம். இதில் உஷாரான நயினார், நம்மால் கூட்டணி உடைந்தால், டெல்லியிடம் செமையாக வாங்கிக்கட்டிக் கொள்ள நேரிடும் என்று வாயை மூடிக்கொண் டாராம். மேலும், பா.ஜ.க. ஊடக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்மையில் பேசிய நயினார், அ.தி.மு.க.வை விமர்சித்தோ, அதற்குப் பிடிக்காத வகையிலோ எந்தவிதமான கருத்துக்களையும் நீங்கள் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் மாநில முன்னாள் பா.ஜ.க. மாநில நிர்வாகி தரப்பிற்கும் இதுகுறித்து அவர் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறாராம். அதே சமயம் ஓ.பி.எஸ். விவகாரத்திற்கு எப்படி சுமுகத் தீர்வைக்காண்பது என்கிற குழப் பத்திலும் நயினார் இருப்பதாகக் கூறு கிறார்கள்.''”
"எஸ்.பி., வேலுமணிக்கு கொலை மிரட்டல் என்கிறார்களே?''”
"ஒரு கோடி ரூபாய் கொடுக்காவிட்டால், வெடிகுண்டு மூலம் கொலை செய்வோம் என்கிற ரீதியில் தனக்குக் கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக, மாஜி அ.தி.மு.க. மந்திரி எஸ்.பி., வேலுமணி, போலீஸில் புகார் தெரிவித்திருக் கிறார். இதைத் தொடர்ந்து தனக்கும் தன் குடும் பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை காவல்துறை சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறதாம். அது செட்டப் செய்யப்பட்ட கடிதம் என்பதாகவே அவர்கள் கருதுகிறார்களாம். எதற்காக இப்படி ஒரு புகார் எழுப்பப்பட வேண்டும் என்கிற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறதாம்.”
"எனக்கு வந்த ஒரு தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். சென்னை சைதை பகுதி அ.தி.மு.க. செயலாளரான சுகுமாறன், நில அபகரிப்பு, போலி டாகுமெண்ட் மோசடி எனப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக, சர்வதேச சமூகநீதிக்கான அமைப்பு ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்டி யிருக்கிறது. இவருக்கு ஒருசில ஏரியா காவல் துறையினரும், அடையார் சரக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும், அதனால் இவர் மீதான புகார்கள் ஒருசில கண்டுகொள்ளப்படுவது இல்லை என்றும் இதே அமைப்பு கூறிவருகிறது. சுகுமாறனால் பாதிக்கப்பட்டவர்கள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு புகார்களை அனுப்பிய நிலையில், அவரும் அமைதி காத்துவருகிறாராம்.''