கடந்த 22-ஆம் தேதி இரவு என்.ஐ.ஏ., சோதனைக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் பா.ஜ.க., அதனின் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு, கடைகள் மீது பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பிய எரி பொருள் பாட்டில்களை வீசி மக்கள் மத்தியில் பதட்டத்தினை உருவாக்கினர் அடையாளம் தெரியாத நபர்கள். 1998-ல் நடந்த கலவரச் சம்பவம்போல் மீண்டும் நடக்காமலிருக்க, அதிரடியாக கைது நடவடிக்கைகளில் இறங்கி மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்திவருகின்றது காவல்துறை.
சித்தாபுதூர் பகுதியிலுள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதி துணிக்கடை, காந்திபுரம் கடை, மேட்டுப்பாளையம் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர், குனியமுத்தூர் பகுதி களிலுள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எரிபொருள் நிரப்பப்பட்ட குண்டுகள் வீசப்பட்ட நிலையில், சாய்பாபா காலனி, குனியமுத்தூர், பொள்ளாச்சி பா.ஜ.க. கட்சி, அதனுடைய அமைப்புகளின் நிர்வாகிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கியும், தீ வைக்கப்பட்டும் கலவரக் கணக்கில் காவல்துறைக்கு அழுத்தத்தை உண்டாக்கியது. அதேவேளையில், கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவருக்கும், இந்து முன்னணியைச் சேர்ந்த படையப்பா, விக்னேஷ் மற்றும் நந்தபிரகாஷ் ஆகி யோரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. எரிபொருள் வீச்சினை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட இந்து முன்னணி அமைப்பினர் அப்பகுதிக்கு வந்த ஜபருல்லாவைத் தாக்கி மூக்கை உடைக்க, இரு தரப்பிலும் புகாரை வாங்கி 6 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்தது ரத்தினபுரி காவல் நிலையம்.
இதனிடையே, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றச் சாட்டினை வைத்து, கோவையில் பெட்ரோல் குண்டு எறிவதாகவும், தனியார் சொத்துகளை சேதப்படுத்துவதாகவும்" மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி தன்னுடைய இருப்பைக் காட்டினார் பா.ஜ.க. அண்ணாமலை. இதையடுத்து, வழக்கமான 11 சோதனைச்சாவடிகளுடன் கூடுதலாக 28 சோதனைச்சாவடிகளை அமைத்தும், ஏறக்குறைய 3000 போலீஸாரைக் குவித்தும், ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு 3 ரோந்து வாகனங்கள் என மொத்தமாக 45 வாகனங்களை ரோந்து வரச்செய்தும் பதற்றத்தைத் தணித்தது மாநகர காவல்துறை. அத்துடன் நில்லாமல், மாவட் டத்திலுள்ள 94 ஜமாத் தலைவர்களுடன் கூட்டத்தினை நடத்தி சம்பவம் குறித்து தெளிவு பெற்று, ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாகப் பிரித்து வழக்குப் பதிவுசெய்து ஒரு சம்பவத்திற்கு மூன்று தனிப்படைகளை அமைத்தும் சி.சி.டி.வி., சி.டி.ஆர். அனலைஸ், வாகன தணிக்கை மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரனைச் சந்தித்து, "கடந்த இரு தினங்களாக கோவை மாநகரத்தில் பாரதிய ஜனதா, அக்கட்சி சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு, கடைகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.
ஏற்கனவே கோவையில் வெடிகுண்டுகள் வெடித்து அதில் பலர் இறந்துள்ளனர். அந்த வடு இன்னும் ஆறாத சூழ்நிலையில், தற்போதைய பெட்ரோல் பாட்டில் வீச்சு என்பது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக விரோத அமைப்புகள் இதைப் பயன்படுத்தி, கோவை யில் பதற்றச் சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்து, அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தெரியப்படுத்தவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ச்சியாக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, "தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செய லில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்; பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கண்ட றிந்து கைதுசெய்ய தனிப் படைகள் அமைக்கப் பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுவருகிறது" என எச்சரித்தார். 23-ஆம் தேதி மதியம் குனியமுத்தூர் பகுதியில் கார் பற்றவைக்கப்பட்ட சம்பவத்திலும், அதே பகுதியில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவத்திலும், மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ், குனியமுத்தூரைச் சேர்ந்த இலியாஸ் ஆகிய எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை அதிரடியாக கைதுசெய்தது மாநகர காவல்துறை.
இதுகுறித்துப் பேசிய பழைய கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்டவரும் தற்போது தி.மு.க. கழக பொதுக்குழு உறுப்பினருமான முருகனோ, "அன்று நடந்த மதக்கலவரத்தால் காய்கறி வர்த்தகம், மோட்டார் உதிரிபாகங்கள் வர்த்தகம் ஆகியவற்றை இழந்தோம். இப்பொழுதுதான் மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றோம். ஆனால் அன்று அரசியல் செய்ததுபோல் இன்றும் இதனை அரசியலாக்க முயற்சிக்கின்றது பா.ஜ.க. பாஜக அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது, இந்து முன்னணி பிரமுகர் வீட்டினில் குண்டுவீச்சு என பொதுமக்களை அச்சுறுத்தல் செய்யும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் ஊதிப் பெரிதாக்கி கடையடைப்பு அது இதுவெனஅரசியல் லாபம் பார்க்க நினைக்கின்றது பா.ஜ.க. தரப்பு. அது நடக்கக்கூடாது. இவ்வேளையில் காவல்துறையை நம்பவேண்டியது மக்களின் கடமை" என்றார்.
படங்கள்: விவேக்