"மீண்டும் நாமதான்'' என்ற தில்லோடு தி.மு.க. இருக்க, முடுக்கிவிடப்பட்ட முதல்வர் கனவோடு த.வெ.க. தலைவர் விஜய் தன் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். பா.ஜ.க.வோடு கூட்டணியிலிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ தேர்தலுக்கு முன்பே தனது தோல்வியை உறுதி செய்துவிட்டார் எனக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தர்மயுத்தம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை அ.தி.மு.க.வை உடைப்பதற்காக மட்டுமே பா.ஜ.க. தன்னைப் பயன்படுத்திக்கொண்டது என உணர்ந்து பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளி யேறிய ஓ.பி.எஸ்., தொடர் அவமானங்களால் வருத்தப் பட்டு வெளியேறிய டி.டி.வி. தினகரன், இவர்களின் பின்னணியில் தனது ஜாதி சமூக வாக்குகளை பிணைத்துவைத்திருக்கும் சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்தால் மட்டுமே அடுத்த தேர்தலில் ஏதாவது அ.தி.மு.க. வெற்றிபெறும் என தொடர்ந்து கூறிவருகின்றனர் அக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள். ஓ.பி.எஸ். அணியினரோ, நிபந்தனை யெதுவுமின்றி அ.தி.மு.க.வில் இணையவும் தயாராக இருக்கிறார்கள்.
எடப்பாடியாரின் பிடிவாதத்தால், வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற செங்கோட்டையன், "பிரிந்தவர்களைச் சேர்க்க 10 நாட்கள் கெடு' என எடப்பாடியாருக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தார். இதன்பலனாக கட்சிப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் கழட்டிவிடப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் அ.தி.மு.க. ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துவிட்டு வந்தார். அப்போது, செங்கோட்டையனிடம் பேசிய அமித்ஷா, "முயற்சி செய்துபார்ப்போம். இல்லையென்றால் வேறு வழி காண்போம்' என வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 16-ஆம் தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால், தனது மகன் மிதுன் ஆகியோரோடு டெல்லிசென்ற எடப்பாடி பழனிச்சாமி, புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த கையோடு, அன்றிரவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் மட்டும் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.
சேலம் திரும்பிய பழனிச்சாமி, "இதுதாங்க நடந்துச்சு' என டெல்லியில் நடந்த சம்பவம் குறித்து மீடியாக்களிடம் விளக்கினாலும், உண்மை நிலவரம் தெரிந்த அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் எடப்பாடியார்மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"அப்படி என்னதான் நடந்தது டெல்லியில்?' என்ற கேள்வியோடு எடப்பாடியாரோடு டெல்லி சென்றுவந்த அ.தி.மு.க. தலைவர்களில் ஒருவரை மிகுந்த சிரமத்திற்கு பிறகு தொடர்புகொண்டு பேசினோம்.
"எனது பெயரோ அடையாளமோ வேண்டாமே'' என்ற கோரிக்கையோடு நம்மிடம் பேசிய அவர், "உண்மையைச் சொல்லவேண்டுமானால், தேவர் திருமகனாருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவை மட்டுமே எடப்பாடியார் தலைமையில் நாங்கள் அனைவரும் சேர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொடுத்தோம். அதைப் பெற்றுக்கொண்ட அவர், வேறொரு அறையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாகக் கூறி சென்றுவிட்டார்.
சுமார் அரைமணி நேரம் கழித்து அங்குவந்த அதிகாரி ஒருவர், எடப்பாடியாரையும், மிதுனையும் தவிர அனைவரையும் அங்கிருந்து கிளம்பச்சொல்லிவிட்டார். நாங்கள் கிளம்பியபிறகு அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி, கட்சி நிலவரம், தனது பரப்புரை பயணம் ஆகியவற்றைப் பேசிவிட்டு ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைக்கமுடியாது என்பதை மட்டும் உறுதியாகக் கூறியதாகத் தெரிவித்தார். அப்போது, புகழ்பெற்ற கோவில் கள் அடங்கிய தொகுதிகள் உட்பட மாவட்டத்திற்கு ஒரு தொகுதிவீதம் பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டுமெனவும், என்.டி.ஏ. கூட்டணியில் பா.ஜ.க.வை நம்பி வரும் கட்சி களுக்காக கூடுதலாக தாங்கள் கேட்கவிருக்கும் தொகுதிகளைத் தரவேண்டுமெனவும் கூறியிருக்கிறார் அமித்ஷா.
இதுதவிர, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக அமலாக்கத்துறையை ஆக்டிவேட் செய்யவும் அமித்ஷாவிடம் வலியுறுத்தியிருப்பதாக எடப்பாடியார் தெரிவித்தார். ஆக மொத்தத்தில், எங்கள் அனைவரையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று, அமித்ஷா வீட்டு வரவேற்பறையோடு எங்களை திருப்பியனுப்பிவிட்டார்.
எடப்பாடியாரை பொறுத்தவரை தனக்குத்தானே தப்பான கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். தன்னிடமிருக்கும் பணத்தையும் தன் மகன் மிதுனையும் மட்டுமே நம்புகிறார். அதனால்தான், ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்கமறுக்கிறார். இதேநிலை தொடர்ந்தால், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியைக் காப்பாற்ற நாங்களும் ஒரு முடிவெடுத்திருக்கிறோம்.
சில தினங்களுக்கு முன்பு, "ஆட்சியைப் பிடிப்பதுகூட முக்கியமில்லை. தன்மானம்தான் முக்கியம்' என பேசியிருந்தார் எடப்பாடியார். அதே முடிவைத்தான் நாங்களும் எடுத்துள்ளோம். கட்சி தோத்தாலும் பரவாயில்லை, தற்போதைக்கு, பா.ஜ.க.வின் பிடியிலிருந்து அ.தி.மு.க.வை மீட்பது என்பதைவிட, எடப்பாடியார் பிடியிலிருந்து மீட்பதே முக்கியம் என கருது கிறோம். விரைவில் காட்சிகள் மாறலாம். பொறுத்திருந்து பாருங்கள்'' எனக்கூறிய அவர், "விரைவில் சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒரேமேடையில் தோன்று வார்கள். எடப்பாடியாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது'' என அதிரவைத்தார்.
எடப்பாடியாருக்கு இது சோதனையான காலம்தான் போல!
____________
வார்னிங்!
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சிக்குள் இணைக்கவேண்டும் அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களின் விருப்பம். நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க ஒப்புக்கொள்ளாத எடப்பாடி, த.வெ.க. உடன் கூட்டணி பேசுவதற்கு முயற்சி செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனை, ஐ.பி. ரிப்போர்ட் மூலம் தெரிந்துகொண்ட அமித்ஷா, டெல்லி சந்திப்பின்போது எடப்பாடியாரை கடுமை யாக எச்சரித்திருக்கிறாராம்!