அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். 19-ஆம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில், சென்னை ராயபுரம் ஏரியாவிலுள்ள 46-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டுப் போடுவதாக அ.தி.மு.க.வினர் ஜெயக்குமாருக்கு தகவல் தந்தனர். தடுத்து நிறுத்துங்கள் என அவர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு, வழக்கறிஞர்கள் குழுவுடன் ஸ்பாட்டுக்கு வந்தார் ஜெயக்குமார்.
தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷை அ.தி.மு.க.வினர் பிடித்து வைத்திருந்தனர். அங்குவந்த ஜெயக்குமார், சட்டையைக் கழட்டுடா என்று கோபமாக சொன்னார். நரேஷ் சட்டையைக் கழட்டாததால் அ.தி.மு.க.வினர் அவரின் சட்டையைக் கழட்டி கைகளைப் பின்பக்கமாகக் கட்டினார்கள். பிறகு அவனை இழுத்துச்சென்று தண்டையார்பேட்டை ஸ்டேசனில் ஒப்படைத்தார். சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் ஒருவரே அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அரசியல் கட்சிகள் கண்டித்தன.
மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்ட நரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது கொலை முயற்சி, மிரட்டல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆயுதங்களைக் கொண்டு காயப்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் 21-ஆம் தேதி இரவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து 7:55 மணிக்கு சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள ஜெயக்குமாரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். இணை கமிஷனர் ரம்யாபாரதி தலைமையில் துணை கமிஷனர் சுந்தரவதனம், உதவி கமிஷனர் இருதயம் உள்ளிட்ட காவல்துறையினர் 25 பேர் சென்றனர். அப்போதுதான் சாப்பிட அமர்ந்த ஜெயக் குமாரிடம், "நரேஷ் கொடுத்த புகாரில் உங்களை கைது செய்ய வந்துள்ளோம் சார்... ஒத்துழைப்பு கொடுங்கள்''’என்று போலீஸார் சொல்ல... “"என்ன புகார்? என்ன செக்ஷன்?''’என்று தனக்கேயுரிய நக்கல் பாணியில் ஜெயக்குமார் கேட்க, "நரேஷ் என்பவரை வீதியில் ஒரு ரவுடிபோல இழுத்துச் சென்றிருக்கிறீர்கள்'' என விவரம் சொன்னது போலீஸ். அதற்கு ஜெயக்குமார், “"கள்ள ஓட்டுப் போட்ட திருட்டுப் பயலை போலீஸ் தடுக்கவில்லை; நீங்க செய்யவேண்டிய வேலையை நான் செஞ்சிருக்கேன். கள்ள ஓட்டு போட்டவனை பிடித்துக் கொடுத்தால் கைது செய்வீங்களா? இதைத்தான் தி.மு.க. அரசு உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறதா?''’என கோபம் காட்டியிருக் கிறார்.
"ஒத்துழைப்பு கொடுங்க சார்; எதுவா இருந்தாலும் நீதிபதியிடம் பேசிக்கொள்ளுங்கள்''” எனச் சொல்லி அவரை அழைத்துச்செல்ல போலீஸார் முயற்சித்தனர். ஜெயக்குமாரின் மகனும், மனைவியும் காவல்துறையிடம் கோபமாகப் பேசினர். போலீஸ், "அமைதியாக “வாங்க சார், ப்ளீஸ்''’என அழைக்க... ஜெயவர்த்தன், "கையைப் பிடிக்கிற வேலையெல்லாம் வெச்சுக்கக்கூடாது''’என கோபப்பட்டார். ஜெயக்குமாரின் மனைவி, "இது அராஜகம்; ஒரு குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்த இவரை கைது செய்வீங்களா?''’என கடுமையாகப் பேசியதுடன், "சரி, அவரை சாப்பிடவிடுங்கள்''’ என கேட்டுக்கொண்டார். “"நான் எங்கேயும் ஓடிடமாட்டேன். கைலியை மாற்றிக்கொண்டு வர்றேன்''’என சொல்ல, அவரை அழைத்துச் சென்றது போலீஸ்.
சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேசனில் ஜெயக்குமாரிடம், நரேஷை அவர் இழுத்துச்சென்ற வீடியோவைக் காட்டி, “"நீங்க சீனியர் லீடர். சட்டம் படிச்சவர்; இந்த சம்பவம் நியாயம்தானா? சட்டத்துக்குட்பட்டதா?''’என கேட்க, அவரால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. வாக்குச்சாவடிக்குச் சென்று ஜெயக்குமாரும் அவரது ஆட்களும் செய்த தகராறுகள் அனைத்தையும் எஃப்.ஐ.ஆரில் விரிவாகப் பதிவு செய்துள்ளது காவல்துறை.
ஜார்ஜ் டவுன் 5-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முரளிகிருஷ்ணா முன்பு ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் தன்மையை நீதிபதி ஆராய்ந்துவிட்டு, 15 நாள் சிறையிலடைக்க உத்தரவிட, பூந்தமல்லி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயக்குமார்.
சென்னை அ.தி.மு.க. மா.செ.க்களிடமும், ஜெயவர்த்தன் தரப்பிலும் நாம் விசாரித்தபோது, “"கள்ள ஓட்டு போட்ட சம்பவத்தைக் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைதியாகத்தான் இருந்தார். சேகர்பாபுவுக்கும், ஜெயக்குமாருக்கும் அரசியல்ரீதியா பிடிக்காது. சேகர்பாபு இதனை தனது ஜெயக்குமார் எதிர்ப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டார்''’என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால் தி.மு.க. தரப்பிலோ, “நரேஷ் சட்டை கழற்றப்பட்டு திறந்தமேனியாக இழுத்துவரப்பட்ட விவரம் அறிந்ததும் சேகர்பாபுவை அழைத்து, " உண்மை நிலவரம் என்னனு பாருங்க'' என்று கேட்டிருக்கிறார் முதல்வர். அவர் விசாரித்து நடந்ததை ரிப்போர்ட் செய்திருக்கிறார். நரேஷ் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், ஸ்டாலினோ கட்சிக்காரர்களோ கோபமடைந்திருக்க மாட்டார்கள்.
மாறாக, சட்டையைக் கழற்றி, அடித்து இழுத்துவரப்பட்டதுதான் ஆளும்கட்சித் தரப்பை டென்ஷனாக்கிவிட்டது. அதனால் தனது அறிக்கையில், "முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.க. நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தி யிருக்கிறார். கழகம் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்றுபோகிற வகையில் அம்பலமாவார்கள்” எனக் குறிப்பிட்டார் ஸ்டாலின்.
ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்த்தன், இந்த கைது விவகாரத்தை எடப்பாடியிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் தகவல் தெரிவித்திருக்கிறார். ஜெயக்குமாரின் கைதுக்கு எதிராக நள்ளிரவிலும் போராடிய அ.தி.மு.க. தொண்டர்கள், "அடுத்தடுத்து சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள்' என தங்களுக்குள் பேசியிருக்கிறார்கள்.
எனவே ஜெயக்குமார் கைதுக்கு எதிரான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டரீதியான ஆலோசனைகளை அ.தி.மு.க. தலைமை தொடங்கியிருக்கிறது.
-இளையசெல்வன் & கீரன்
படங்கள்: ஸ்டாலின், அசோக்