துரித உணவு மீதான மோகம் அதிகரித் துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் மறக்கடிக்கப்பட்டு, அமெரிக்கா, சீனா, ஜப்பான், சவுதி என வெளிநாட்டு உணவுவகைகளின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது ஷவர்மா சாப்பிட்ட இளைஞர்களோ, மாணவர்களோ உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்த ஷவர்மா என்ற உணவு, சவுதியிலிருந்து பாகிஸ் தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த ஒன்றாகும். 1920ஆம் ஆண்டுகளில் மெக்சிகோவில் லெபனான் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் கனடா, ஒட்டாவா, மான்ட்ரீல் ஆகிய பகுதிகளில் பிரபல துரித உணவாகியது. அந்த உணவு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் கேரளா வழியா மெல்ல நுழைந்து, தற்போது இந்தியா முழுக்க விற்பனையாகிவருகிறது.

பொதுவாக ஷவர்மாவை ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சியை வைத்து செய்வர். அதில் சில மசாலாவை சேர்த்து, சப்பாத்தியில் வைத்து சாஸ் ஊற்றி சுற்றித் தருவர். எந்த இறைச்சியில் செய்வார்கள் என்பது அந்தந்த நாட்டுக்கேற்ப மாறுபடும். லெபனானில் ஆட்டிறைச்சி சர்வசாதாரணமாக கிடைக்கும் என்பதால் ஷவர்மாவில் ஆட்டிறைச்சியை வைத்தார்கள். சவுதியில் மாட்டிறைச்சி, மெக்சிக்கோவில் சிக்கனை வைத்துக் கொடுத்தால் மக்கள் விரும்பி உண்டார்கள். இவ்வுணவு அந்த நாடுகளின் சூழலுக்கு உகந்ததாக இருந்ததால் அதனை வாங்கிச் சாப்பிட்டார்கள். ஆனால் நம் நாட்டுச் சூழலுக்கு அது உகந்ததா என்பதை யாரும் பொருட்படுத்தவில்லை. அதனால்தான் இந்த ஷவர்மா பலருக்கும் விஷமாக மாறும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா, அவரது மாமியார் கவிதா மற்றும் குழந்தைகள் பூபதி, 14 வயது கலையரசி, உறவினர் சுனோஜ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமத்தி சாலையில் உள்ள 'ஐவின்ஸ்' என்ற உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுமி கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டது. மேலும், அதே கடையில் ஷவர்மா வாங்கிச் சாப்பிட்டவர்களில் 5 குழந்தைகள் உள்பட 43 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர்.

Advertisment

அந்த உணவகத்தில் தயாரிக்கப்பட்ட ஷவர்மாவில் என்ன கோளாறு என்று நடத்தப் பட்ட ஆய்வில், ஷவர்மாவில் பயன்படுத்தப்படும் மாமிசம் குளிர்ச்சியான சூழலில் வைக்கப்பட்டு பின்னர் சூடுபடுத்தப்பட்டதில், அந்த இறைச்சி சரியாக வேகாமல் கிளாஸ்ட்ரிடியம் எனும் பாக்டீரியாவை இறைச்சியில் உருவாக்க, அது போட்டுலினம் டாக்ஸினாக மாறி, சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்ததாகத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலர்கள், ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக, தமிழ்நாடு முழுக்க பரவலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எதாவது உணவகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழப்போ, பலருக்கு உடல்நலக் கோளாறோ ஏற்பட்டால் மட்டும் அந்த நேரத்துக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனைகள் நடத்தப்படுவதுபோல் காட்டுவதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதுமுள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள். இன்றுவரை அவர்கள் யாரும் பணியிட மாற்றம் செய்யப்படாமல் உள்ளனர். இதனால் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்றும், எந்த கடையை ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வு செய்யக்கூடாது என்பதை அவர்களாக வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவரெனப் பார்த்துதான் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

உதாரணத்திற்கு, இந்த ஷவர்மா பிரச்சனையில்கூட இதற்கு முன்பு எந்த அதிகாரியும் ஷவர்மா தயாரிக்கும் உணவகங்களுக்கு சோதனைக்காக சென்றதில்லை. நாள் தவறாமல் உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்வதற்காக மட்டுமே அங்கு சென்றுவந்த நிலையில், ஷவர்மா வால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டவுடன் ஆய்வு நடத்துவது மிகுந்த வருத்தமளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பதட்டமான சூழலில், கண் துடைப்புக்காகத் தங்களுக்கு தெரிந்த செய்தி நிறுவனங்கள், ஊடகங்களைச் சேர்ந்தவர்களை அழைத்துக்கொண்டு, சோதனை நடத்துவதுபோல் படம்பிடித்து செய்தியாக்குகிறார்கள். இவர்கள், உளப்பூர்வமாக, தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு நியாயம் சேர்ப்பதுபோல் தொடர்ச்சியாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டால் உணவகங்களில் நடக்கும் தவறுகள் கட்டுப்படுத்தப்படும். எனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதில் தலையிட்டு, ஒரே மாவட்டத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் சாட்டையைச் சுழற்றினால்தான் இந்த அலுவலர்கள் நேர்மையாகச் செயல்படுவார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இவர்கள் ஒழுங்காக இருந்தால் உணவகங்களும் ஒழுங்காக இருக்கும் தானே!

Advertisment