திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு திருச்சியின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முக்கொம்பிற்கு திருச்சி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்க ளான கரூர் -புதுக்கோட்டை -அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக, தீபாவளி, பொங்கல் மற்றும் தொடர் வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதுமட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் இந்த சுற்றுலாத்தலத்திற்கு வருகை தருவது வழக்கம்.
கடந்த புதன்கிழமை (04.10.23) மாலை எவ்வித அனுமதியோ, விடுப்போ, உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் சொல்லாமல் பச55 -இஈ 6633 ஐர்ய்க்ஹ ஆம்ஹக்ஷ்ங் என்ற சிகப்பு கலர் காரில் ஜீயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல்நிலையக் காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து எண்-6 ல் பணிபுரிந்த முதல்நிலை காவலர் சங்கர் ராஜபாண்டியன், ஜீயபுரம் போக்குவரத்து காவல்நிலைய காவலர் சித்தார்த்தன் ஆகியோர் முக்கொம்பு பகுதியில் மது அருந்திவிட்டு மப்டி உடையில் போதை வலம் போயுள்ளனர்.
சரக்கு மப்பு தலைக்கேறிய நிலையில்... முக்கொம்பு சுற்றுலாப் பகுதியில் காவேரி ஆற்றில் குளித்துவிட்டு கரையோரப் பகுதியில் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்த இரண்டு காதல் ஜோடி களை வம்பிழுத்துள்ளனர். போலீசாரின் கண்களில் தெரிந்த காம வெறி போதையைக் கண்டு அதில் ஒரு காதல் ஜோடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியிருக்கிறது. தனிமையில் இவர்களிடம் அகப்பட்டுக்கொண்ட மற்றொரு ஜோடியான இஸ்ஸாமிய சமுதாயத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியையும் 19 வயது இளைஞரையும் மிரட்டி யதுடன், அடித்து உதைத்து "கஞ்சா விற்பனை செய்கிறீர்களா? உங்களை விசாரணை செய்ய வேண்டும்' என மிரட்டி அந்த இளைஞரை மட்டும் விரட்டிள்ளனர்.
தனியாக சிக்கிக்கொண்ட அந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிப்போட்டு மதுபோதையில் பாலியல் சீண்டல் களை ஆரம்பித்துள்ளனர். உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் சங்கர் ராஜபாண்டியன் இருவரும் அந்தச் சிறுமியிடம் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டதோடு, செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு, "எப்போது அழைத்தாலும் பேசவேண்டும் என்றும், நாங்கள் கூப்பிடும் லாட்ஜுக்கு வரவேண்டும் என்றும் அதிகார தோரணையில் மிரட்டி, அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்களின் பாலியல் சீண்டல்களைத் தாங்க முடியாமல் அந்தச் சிறுமி கூச்சலிடவே, காரை விட்டு கீழே இறக்கிவிட்டதாக தெரிய வருகிறது. பின்னர் அந்த சிறுமியும் அவளது காதலனும் முக்கொம்பு புறக்காவல் நிலையத்திற்கு சென்று, பணியில் இருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர் சதீஷ்குமார் ஆகியோ ரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக, புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் இரண்டு காவலர்களும் சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றபோது முக்கொம்பு உள் பகுதியிலிருந்து மேற்படி ஐர்ய்க்ஹ ஆம்ஹக்ஷ்ங் காரில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு காம வெறிபிடித்த போலீசும் மெயின் ரோடு நோக்கி திரும்பி வந்துள்ளனர். அவர்கள் காரை நிறுத்திய காவலர்கள் உள்ளே இருந்த உதவி ஆய்வாளர் சசி குமாரிடம் விசாரித்தபோது, “அவர்களிடம் "நான் கஞ்சா விற்பனை தொடர்பாக விசா ரணை செய்தேன். வேறு ஒன்றும் இல்லை'’என்று போதையில் குழறியபடி சொல்லியுள்ளார்.
அப்போது பாதிக்கப்பட்ட காதலர்கள் இருவரும் நேரடியாகவே உதவி ஆய்வாளர் சசிகுமாரிடம் "இங்கு பணியில் போலீசார் உள்ளனர் நீங்கள் யார்? நீங்கள் எப்படி எங்களிடம் தவறாக நடந்து கொள்ளலாம், இருவர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது தவறா?' என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.
அதற்கு உதவி ஆய்வாளர் சசிகுமார் அந்த இருவரையும் பார்த்து, "“உங்கள் மீது கஞ்சா வழக்கு போடப் போகிறேன் ஒழுங்காக ஓடிவிடுங்கள்' என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த ஜோடி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் நின்ற ‘திருச்சி சத்திரம்’ செல்லக் கூடிய பேருந்தில் ஏறி சென்றுவிட்டதாகத் தெரியவருகிறது. பணியில் இருந்த போலீசார் விவரம் கேட்டபோதும் கூட சசிகுமார் மற்றும் காரில் வந்தவர்கள் சரியாக பதி லளிக்காமல் ஆணவமாகச் சென்றுவிட்டார்களாம்.
மேற்படி போக்கிரிக் காவலர்களின் நடத்தை தொடர்பாக 05.10.23 அன்று விசாரணை செய்த திருச்சி காவல் சரக ரூரல் எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ். காதலர்களிடம் தவறாக அத்துமீறி நடந்துகொண்ட 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார். திருச்சி புறநகர் எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ். பரிந்துரையின் பேரில் உதவி ஆய்வாளர் சசிகுமாரை திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன் ஐ.பி.எஸ். பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
காவலர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சிறுமியின் புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சங்கர் ராஜபாண்டியன், பிரசாத் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி. வருண்குமார், டி.ஐ.ஜி. பகலவன் ஐ.பி.எஸ்., பயிற்சி உதவி ஆய்வாளர் ஆறுமுகம், காவலர் சதீஷ்குமார் ஆகியோர் திருச்சி பொதுமக்களின் பாராட்டுமழையில் நனைகின்றார்கள்.