வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து நிகழ்வில் தினமும் ரெங்கநாதர் ஒவ்வொரு அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் திரள்கிறார்கள். பக்தர்களில் ஒருவராக கடந்த 9ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார் பரதநாட்டிய கலைஞரான கலைமாமணி ஜாகிர் உசேன். அவரைப் பிடித்து வெளியே தள்ளினார் ரெங்கராஜன் நரசிம்மன்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிராக தொடர்ந்து பல முரண்பாடான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரவவிடுவது ரெங்கராஜன் நரசிம்மனின் முதன்மை வேலை. கோயில் நிலம் காணாமல் போனதாகவும், கொரோனா காலத்தில் பூஜை நிறுத்தப்பட்டதாகவும் வழக்குகளைப் போட்ட பிரகஸ்பதி இவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதில் இவருக்கு செம கடுப்பு.
இந்நிலையில்தான், மாற்று மதத்தவரான ஜாகிர் உசேனை வெளியேற்றிவிட்டு, அது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார். "மாற்று மதத்தவர் கள் நம் கோவிலுக்குள் வரும் முன் அவர்களின் மூதாதையர் கள் (மொகலாய மன்னர்கள்) செய்த கொடுமையை ஒப்புக் கொண்டு அதை தவறு என்று எழுதி, மதம் மாறிய பின் நம் கோவிலுக்கு வரட்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். அரசர் கால படையெடுப்புகள், பாலியல் வன்முறைகள் எல்லாவற்றையும் மத ரீதியாக சித்தரித்துள்ளார் ரெங்கராஜன் நரசிம்மன்.
ஆண்டாள் பாசுரங்களுக்கு பரத நாட்டியமாடி, திருமால் புகழ் பரப்பும் தன்னை வெளியேற்றியது குறித்து காவல்துறை ஆணைய ரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் ஜாகிர் உசேன். அதில், "கடந்த 30 ஆண்டுகளாக பரத நாட்டிய கலைஞராகவும் சொற்பொழி வாளராகவும் இருந்து வருகிறேன். 9-ந் தேதி அமைதியான முறையில் திருவரங்கம் அரங்கநாதரை தரிசிக்க கோவிலுக்கு சென்ற என்னை, அமெரிக்க அரசால் பாலியல் சீண்டல் குற்றத்திற்கு தண்டனை பெற்றவரும், தன்னை வைணவர் என சொல்லிக்கொள்ளும் ரங்கராஜன் நரசிம்மன் என்னும் நபர், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து அவமானப்படுத்தி, மதம் மற்றும் சாதிய அடையாளத்தை கொச்சைப் படுத்தி தகாத வார்த்தை களால் பேசி கோவிலுக் குள்ளிருந்து வெளியேற்றி னார்.
அனைத்து சம்பவங்களும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால் இப்பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது உதவிடவோ, தலையிட்டு அதை தடுக்கவோ யாரும் முன்வரவில்லை. இதனால் அவமானத்தால் என் உடல் மிகவும் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளேன்.
ரங்கராஜன் நரசிம்மன் திருவரங்கம் கோயிலில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லாதவர். ஆலயத் தின் உரிமையாளர் போல தன்னை நினைத்துக் கொண்டு என்னை அவமதித்து தகாத வார்த்தைகளால் பேசி இறையாண்மைக்கும் நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்டு உள்ளார். எனவே அவரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையரின் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இணை ஆணையர் மாரிமுத்து கூறுகையில், "வெளிநாடுகளிலிருந்து பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள், ரங்கராஜன் இதுபோன்று பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேனைத் தடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்'' என்றார்.
கலையையே மதத்தால் பிரிக்க நினைக்கிறார்கள் மத வெறியர்கள்.