சட்டம் ஒழுங்கிற்கான டி.ஜி.பி. ரேஸில் கந்தசாமி, சைலேந்திரபாபுவுடன் போட்டியிலிருந்தவர் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பதவிவகித்த ஷகீல் அக்தர் ஐ.பி.எஸ். அந்த இடத்தில் சைலேந்திரபாபு நியமிக்கப் பட்டார். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உளவுத்துறையின் நுணுக்க மான -திறமையான பணி அவசியம். அதுபோலவே, மற்ற தகவல்களையும் அரசாங்கத் தலைமைக்கு விரைந்து அனுப்ப வேண்டியதும் உளவுத்துறை யின் முக்கிய பணியாகும். எனினும், சட்டம் ஒழுங்கிற்கான டி.ஜி.பி. ஆனார் சைலேந்திரபாபு. இதே வேளையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். இருவரின் போட் கிளப் சந்திப்பு, டெல்லி பயணம் ஆகியனவற்றில் தாமதாகவே அரசிற்கு தகவலை தெரிவித்துள்ளது ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசீர்வாதம் தலைமையிலான உளவுத்துறை.
இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்திய நிலையில்... "உளவுத்துறைக்கு டி.ஜி.பி.யாக அனுபவமிக்க ஒருவரை நியமிக்கலாம்'' என கலந்தா லோசிக்கப்பட்டுள்ளது. முதலில் இப்பதவிக்கு பலமுறை உளவுப் பதவியில் பதவி வகித்து சிறப்பாக செயலாற்றிய சென் னையின் சட்டம்- ஒழுங்கு கமிஷனராக உள்ள சங்கர்ஜிவால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில்... அவர் தலைநகரத்தின் சட்டம்-ஒழுங்கை காப்பதில் ஆர்வம் காட்டுவதால், அதற்கடுத்ததாக தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக உள்ள ஷகீல்அக்தர் டிக் செய்யப்பட்டிருக்கின்றார். விரைவில் உளவுத்துறை டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமிக்கப்படவுள்ளார் என்கிறது காவல்துறை வட்டாரம்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பிரகாஷ் சிங் பாதல் வழக்கின் தீர்ப்பினை சுட்டிக்காட்டி டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு இருக்கும்பொழுது, அவருக்கு இணையாக உளவுத்துறை டிஜிபி நியமிக்கக்கூடாது என அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளன எதிர்க்கட்சிகள். அதே பிரகாஷ்சிங் பாதல் வழக்கினை சுட்டிக்காட்டி, "காவல்துறைக்கு ஹெச்.ஓ.பி. (Head Of the Police)யாக சைலேந்திரபாபு இருக்கின்றார். அவருக்கு அடுத்த பதவிதான் உளவுத்துறை டி.ஜி.பி. பதவி. முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் டி.ஜி.பி.யாக திரிபாதி இருக்கும் போதே, சிறப்பு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்தாஸ் நியமனம்போல் காவல்துறைத் தலைவருக்கு இணையான பதவி இது அல்ல'' என பதில் வாதத்துக்கு தயாராகி வருகின்றனர் ஆளுங்கட்சியினர்.