த்ம சேஷாத்ரி பள்ளி தொடங்கி ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவியர் மீதான பாலியல் வன்முறைகள் பற்றிய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளிகளில் நடைபெறும் இத்தகைய பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பது-நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாது, குழந்தைகள்மீது ஏவப்படும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு புரியவைப்பதும் அவசியமாகிறது.

இது குறித்து குழந்தை உரிமைகள் செயற் பாட்டாளர் தோழமை அ.தேவநேயனிடம் கேட்டோம்.

d

"குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது, அப்பள்ளியில் படிப்பு தவிர கூடுதலாகக் கற்றுத்தரப்படும் கலைகளைப் பற்றி விசாரிக்கும் பெற்றோர், அந்த பள்ளி, நம் குழந்தைக்கு பாது காப்பானதா என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு, உடல்நீதியாக, மனரீதியாக, பாலியல்ரீதியாக, புறக்கணித்தல் மூலம், இணையவழியாக என 5 விதமான தீங்குகள் இழைக்கப் படுகின்றன.

Advertisment

ஒரு குழந்தையை அடிப்பதற்கும், படிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் கிடை யாது. நாம் அடிமைப்பட்ட காலத்திலிருந்து நமக்கு பழக் கப்பட்டதுதான் அடித்து துன்புறுத்துவது. குழந்தைகளை அடிப்பது, முட்டிபோட வைப்பது போன்ற தண்டனைகளை, உடல்ரீதியான தீங்கிழைத்தல் என்கிறோம். ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதுபோல, ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவது, மன ரீதியான தீங்கிழைத்தலாகும்.

குழந்தைகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதிலிருந்து, பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவது வரை அனைத்தும் பாலியல் தீங்கிழைத்தலாகும். ஒரு குழந்தையின் ஜாதி, மதம், நிறம், உடல் நலக்கோளாறுகளைச் சுட்டிக்காட்டி அவமானப் படுத்தி ஒதுக்கிவைப்பதை புறக்கணித்து தீங்கிழைத்தல் என்கிறோம். ஆன்லைன் வழிக்கல்வி யில், ஒரு குழந்தையின் கேட்புத்திறன், உடை உள்ளிட்டவைகளில் குற்றம் சுமத்தி அவமானப் படுத்துவது, இணையவழி தீங்கிழைத்தலில் சேரும்.

இத்தகைய தீங்குகள் இல்லாத மகிழ்ச்சியான கல்விச்சூழல்தான் குழந்தைகளின் படிப்புக்கு உகந்தது. எனவே ஒவ்வொரு பள்ளியும் ஏதேதோ விளம்பரப்படுத்துவதைவிட, 'எங்கள் பள்ளி, குழந்தை நேயப்பள்ளி!' 'எங்கள் பள்ளி, குழந்தைகளுக்குத் தீங்கிழைக்காத பள்ளி!' என்று விளம்பரப்படுத்தும் சூழல் வர வேண்டும்.

Advertisment

s

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் களைவதற்கு, ஒவ்வொரு பள்ளியிலும், குழந்தை பாதுகாப்புக் கொள்கையும், அதற்கான குழுவும் இருக்க வேண்டும். இந்த குழுவில், தலைமையாசிரியர், பெண் ஆசிரியர், கவுன்சிலர், பெற்றோர் இவர்களுடன் தேவைப்பட்டால் மாணவர் பிரதிநிதி ஒருவரும் இடம்பெறலாம். குழந்தை களுக்கு தீங்கிழைத்தல் குறித்த விழிப்புணர்வை இக்குழு அனைவருக்கும் தரவேண்டும். இப்படியொரு கமிட்டி செயல் படுவது பள்ளியிலுள்ள அனைவருக்கும் தெரிய வேண்டும்.

இக்குழுவிடம் மாணவர்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக புகார்ப்பெட்டி வைக்கப்பட வேண்டும். இந்த புகார்ப்பெட்டி தலைமை யாசிரியரின் அறையிலோ, ஆசிரியருக்கு அருகிலோ வைக்காமல், மாணவர்களுக்கு அருகில் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தைரியமாகப் புகாரளிக்க முன்வருவார்கள். மொட்டைக் கடிதமாகப் புகாரளித்தாலும்கூட அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து, ஆசிரியர்கள் நியமனத்தின்போது அந்த ஆசிரியர்களின் பின்புலம் குறித்து விசாரித்து, அவர்கள்மீது ஏற்கனவே புகார்கள் பதிவாகி யுள்ளதா என்பதை அறிந்தபின்பே சேர்க்க வேண் டும். ஏனெனில், ஒரு பள்ளியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்ட பின், அதை மறைத்து இன்னொரு பள்ளியில் பணியில் சேர்ந்து, இங்கும் குற்றச் செயலைத் தொடர வாய்ப்புள்ளது. அதேபோல, ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும்போதே அவர்களிடம், எவ்விதத் தீங்கிழைத்தலிலும் ஈடுபட மாட்டேன் என்ற ஒப்புதலையும் எழுதி வாங்கவேண்டும்.

f

இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 121ன் படி, ஆசிரியர், பள்ளிக்கூடத்தில் ஏதாவது பாலியல் வன்முறையில் ஈடுபட்டால், அவரைப் பணி நீக்கம் செய்வதோடு, அவரது சான்றிதழும் செல்லாததாக அறிவிக்கப் படும். இதன் மூலம் அவரால் வேறெங்கும் பணியில் சேரவே முடியாத நிலை ஏற்படும். ஆனால் இந்த அரசாணையை எவரும் பின்பற்றுவதில்லை. கடந்த 2019ம் ஆண்டில், ஆசிரியர்களின் பாலியல் வன்முறை தொடர்பாக மொத்தம் 36 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் அவர்கள்மீது இந்த அரசாணைப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது இந்நிலை மாறினால்தான் ஆசிரியர்கள் இப்படியான இழிசெயலில் ஈடுபடத் தயங்குவார்கள். குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள்.

குழந்தைகள்மீது, பள்ளியில் மட்டுமல்லாது, சமூகத்திலும், குடும்பத்திலும்கூட பாலியல் வன்முறைகள் ஏவப்படக்கூடும். அப்போது, 1098 என்ற சைல்ட் ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். இந்த அமைப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பேர் கொண்ட குழு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணை அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்காங்கே எழுதிவைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த அமைப்பு தவிர, குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய அமைப்புகளும் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து செயல்படுகின்றன. இந்த அமைப்புகளின் அலுவலரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களையும் பள்ளியில் எழுதி வைக்க வேண்டும்" என்றார். இதன்மூலம், குழந்தைகள்மீதான வன்முறையைத் தடுப்பதில், பள்ளி நிர்வாகத்துக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதை உணர முடிகிறது.

-தெ.சு.கவுதமன்