சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்ததுபோல் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவம் புதுச்சேரி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழ கம், புதுச்சேரி டூ சென்னை ஈ.சி.ஆர். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப் பல்கலைக்கழகத்தில் சுமார் 2,500 மாணவ -மாணவிகள் படித்துவருகின்றனர். அகில இந்திய கோட்டாவில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவ -மாணவிகளும் படித்துவருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவ -மாணவிகள் விடுதிகள் உள்ளன.
இப்பல்கலைக்கழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு முதலாமாண்டு மாணவி கடந்த 11ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது அதே கல்லூரி நூலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றும் ஒருவரின் உறவினர், அவரது நண்பர்கள், கல்லூரி வளாகத்தில் இந்த ஜோடி தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப் பதைப் பார்த்துவிட்டு அவர்களை மிரட்டி யுள்ளனர். உடனிருந்த அந்த மாணவியின் காதலன் எதிர்த்துக் கேள்வி கேட்டபோது, அவனை அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத் காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படு கிறது. அவர்களிடமிருந்து அம் மாணவி தப்பி ஓடும்போது அருகிலிருந்த ஒரு கட்டையை எடுத்து அவள் மீது வீசி யதில் அம்மாணவிக்கு அடிபட்டுள்ளது. அப் போது அம்மாணவி கத்திக் கூச்சல் போட்ட தும் நால்வரும் தப்பியோடியிருக்கிறார்கள்.
அதன்பின் அம்மாணவியை இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காகச் சேர்த்த பல்கலைக்கழக பேராசிரியர், ஹாஸ்டல் பொறுப்பாளர் ஆகியோர், மாணவி தவறி கீழே விழுந்துவிட்டதாகக்கூறி சிகிச்சையளிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி காவல்துறையில் புகார் தரவில்லை. அதே வேளை, நிர்வாகத்திடம் தந்த புகாரை கண்டு கொள்ளாத நிலையில் தகவல் கசிந்து, புதுச்சேரி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கசிந்ததால் பதறிய பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்லூரியில் அநாகரிகமாக மூவர் பேசியுள்ளனர். மற்றபடி இது பாலியல் மிரட்டல் இல்லை. தவறான செய்தியை பரப்ப வேண்டாம்' எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. மா.த. சாட்டையால் அடித்துக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங் கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி இந்த விவகாரத்தை அமுக்கப் பார்ப்பதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி யுள்ளன.
விவகாரம் கசிந்து பெரிதானதும் காலாப்பட்டு போலீஸார் பல்கலைக்கழக துணை வேந்தர் மோகனிடம் புகாரைக் கேட்டு வாங்கி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவியை அவரது மாநிலத்துக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவியின் நண்பரிடம் போலீஸார் விசாரித்தபோது, "பேசிக்கிட்டு இருந்தோம், அவுங்க எங்களை முறைச்சாங்க, மிரட்டனதால நாங்க எதிர்த்தோம், அவ்வளவு தான், அதனால்தான் புகார் தரல'' எனச் சொன்னதாகக் கூறுகிறது. சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலமாக சம்பந்தப் பட்டவர்களைத் தேடிவருகிறது போலீஸ். சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் காலாப்பட்டுவையும், ஒருவர் வில்லியனூரையும் சேர்ந்தவர் எனக் கூறப்படு கிறது.
இதுகுறித்து மாணவர் அமைப்புத் தலைவர் வை.பாலா நம்மிடம், "கல்வி நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போய் விடக் கூடாது என நினைக்கும் அதிகாரிகள், மாணவ - மாணவிகள் நலன் குறித்துக் கவலைப்படவில்லை என்பது நிர்வாகத் தின் அறிக்கை மூலமாகவே தெரிகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
இதுகுறித்து புதுச்சேரி சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், "11ஆம் தேதி மாலை 5 மணிக்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பல்கலைக்கழகத்துக்குள் சென்றுள்ளார்கள். அங்கு மற்றொரு வாகனத்தில் இருந்த இருவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. பாலியல் தொந்தரவு நடந்ததாகத் தகவல் இல்லை, விசாரித்து வருகிறோம்'' என்றார்.
புதுச்சேரி பல்கலைக்கழகமும், அரசாங்கமும் இவ்விவகாரத்தை மூடி மறைக்கப் பார்ப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.