அமைச்சர்களைக் கண்காணிப்பது, அதிகாரிகளைக் கண்காணிப்பது, யூனியன் பிரதேசத்தில் என்ன நடக்கிறது, ரவுடிகள் என்ன செய்கிறார்கள் எனக் கண்காணித்து தலைமைக்கு அலர்ட் செய்வது போன்ற பணிகளைச் செய்ய வேண்டிய அதிகாரி மீது பெண்மணி ஒருவர் தந்துள்ள பாலியல் புகார் புதுவையில் பரபரப்பாகி யுள்ளது. பெங்களுரூவை சேர்ந்தவர் மலர். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த அவரது தாய்மாமன் ரமேஷுக்கும் இடையே 1995-ல் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதி, வேலைக்காக செஞ்சியிலிருந்து புதுச்சேரிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ரமேஷும், மலரின் சகோதரர் ராஜேந்திரனும் புதுச்சேரி துத்திப்பட்டில் ஒரு சோப்பு கம்பெனியில் வேலை செய்துவந்துள்ளனர். 2010-ல் பைக் விபத்தில் ராஜேந்திரன் இறந்துள்ளார். இந்த விபத்து வழக்கு தொடர்பாக காவல் நிலையத்துக்கு மலர் சென்றபோது, திருமணமே செய்துகொள் ளாமல் வாழ்ந்துகொண் டிருந்த போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சிவஜான்சன் கென்னடி, மலரின் அழகில் மயங்கி, உனக்கு உதவி செய்கிறேன் எனச்சொல்லி அவரின் மொபைல் எண்ணை வாங்கி பேசத்தொடங்கியவர், பின்னர் மலரை காதலிப்பதாகச் சொல்லியுள்ளார். இரவு ரவுண்ட்ஸ் போகும்போது மலரின் வீட்டில் சென்று இரவில் தங்கியுள்ளார். இதையறிந்த ரமேஷ் அதிர்ச்சியாகி மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். மனைவி திருந்தமாட்டார் என்பதை அறிந்தவர், மனைவியையும், பிள்ளை களையும் விட்டுப் பிரிந்துள்ளார்.
புதுவை டி.ஜி.பி. ஷாலினி சிங்கிடம் மலர் தந்துள்ள புகாரில், 'என்னை எனது கணவரை விட்டு பிரிந்து வா என்றார் சிவஜான்சன் கென்னடி. நானும் என் பிள்ளைகளுடன் அவருடன் சென்றேன். வில்லியனூர் நவசக்தி ஜோதி நகரில் வீடு எடுத்துத் தங்கவைத்தவர், வீட்டில் வைத்து எனக்கு தாலி கட்டினார். கடந்த 15 ஆண்டுகளாக நானும் அவரும் கணவன் -மனைவியாக வாழ்ந்துவந்தோம். 2017-ல் என் பெரிய மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததால் அவள் தற்கொலை செய்துகொண்டாள். நான் இதுகுறித்து போலீஸில் புகார் தந்தபோது, உண்மையை சொன்னால் உன்னையும் மத்த பிள்ளைகளையும் கொலை செய்துடுவேன்னு மிரட்டியதால் பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டாள் எனச்சொன்னேன்.
இதனால் பயந்துபோன எனது இரண்டாவது மகள் என்னை விட்டுப் பிரிந்து அவளது அப்பாவுடன் செஞ்சிக்கு போனவள், விபத்தில் இறந்துவிட்டாள். மகன் மட்டும் என்னுடன் இருந்துவந்தான். கடந்த மாதம் ஜூன் 5ஆம் தேதி எனக்கொரு போன்கால் வந்தது, என்னை அசிங்கமாகப் பேசி மிரட்டினார்கள். அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். கென்னடியை தொடர்புகொண்டபோது அவர் போன் எடுக்கவில்லை. இதனால் ரெட்டியார்பாளையத் திலுள்ள கென்னடி வீட்டுக்கு சென்றேன். அங்கே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் குடித்தனம் செய்துகொண்டிருந்தார். இதுபற்றி கேள்வி கேட்டதுக்கு, இதைக்கேட்க நீ யார் என அந்த பெண்ணும், கென்னடியும் சேர்ந்து என்னை அடித்து உதைத்தார்கள்.
நான் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, கென்னடியின் தம்பி பிரகாஷ் என்னை காரில் கடத்திச்சென்று அடித்து உதைத்தான். என் அண்ணன் மீது புகார் தந்தால் உன்னை கொலை செய்துவிடுவோம் என மிரட்டினான். அப்போது என் மகன் எனக்கு போன் செய்து, "என்னை மிரட்டறாங்க, புகார் கொடுக்காதம்மா' எனச்சொன்னதால் திரும்பி வந்துவிட்டேன். இப்போது என் மகன் மதன்கிருஷ்ணா எங்கே எனத் தெரியவில்லை. என்னுடன் குடும்பம் நடத்திக்கொண்டு என்னுடைய தங்க நகைகள் 15 பவுன் மற்றும் சொத்துப் பத்திரங்களை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார். இப்போது என்னை அடித்து டார்ச்சர் செய்கிறார். என்னையும், என் மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்' எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து உளவுத்துறை ஆய்வாளர் சிவஜான் கென்னடியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, "அந்த பெண்மணி புகார் தந்திருக்காங்க, என்னை கைது செய்யணும், சஸ்பெண்ட் செய்யணும் அப்படின்னு சொல்றாங்க. விசாரணையில் இருக்கறதால நான் எதையும் பேசமுடியாது, அந்தம்மாவை பின்னாடி இருந்து சிலர் தூண்டிவிட்டுக் கிட்டிருக்காங்க'' என்றார்.
"தற்போது 50 வயதாகும் கென்னடி, காவல்நிலையத்துக்கு வரும் பெண்களில் அழகானவர்களுக்கு உதவி செய்கிறேன் எனச்சொல்லி தனது வலையில் வீழ்த்திவிடுவார். மலர் மட்டுமல்ல, வேறு சில பெண்களுடனும் நெருங்கிய பழக்கம் உண்டு. சாதிப்பற்று மிக அதிகம். சாதி அமைப்புகளின் பக்கபலத்துடன் இருக்கிறார். வெளிப்படையாகவே அரசை விமர்சிப்பார்'' என்கிறார்கள் இதன் பின்னணி அறிந்தவர்கள்.
டி.ஜி.பி.யிடம் புகார் தந்தும் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'நீ புகாரை வாபஸ் வாங்கலன்னா, நீயும் ஜெயிலுக்கு போவ. உன் மகள் தற்கொலை விவகாரத்தில் நீ உண்மை யை மறைச்சிருக்க... நீயும்தான் உடந்தை' என போலீஸ் தரப்பிலிருந்தே அப்பெண்மணிக்கு நெருக்கடி தந்துவருவதாகக் கூறப் படுகிறது.
புதுச்சேரி எஸ்.பி. ஒருவர் மீது பெண் எஸ்.ஐ. ஒருவர் பாலியல் புகார் தந்துள்ளார். அந்த புகாரை காவல்துறை விசாரிக்கிறது, அந்த விசாரணை சரியாக நடக்க வாய்ப்பில்லை, அதனால் பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவேண்டும் எனப் புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்துள்ளார். "இது எஸ்.பி.க் களுக்குள் நடந்த மோதலால் தரப்பட்ட பொய் புகார். விசாரணைக்கே அந்த எஸ்.ஐ. வரவில்லை' என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
புதுவை காவல்துறை மீது பாலியல் குண்டுகள் விழுந்தபடியே இருக்கின்றன.