சென்னை எம்.ஜி.ஆர்.நகர், வேலுநாச்சியார் தெருவில் வசிக்கும் செல்வந்தர் பொன்னிக்கண்ணன் (வயது 59) -குமாரி தம்பதியினரின் வீட்டில், சில வருடங்களுக்கு முன் வாடகைக்கு குடிவந்தார் சுரேஷ். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், வினோதினி, கனிஷ்கா (இரு மகள்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என இரு மகள்கள் உள்ளனர். வீட்டு உரிமையாளர் பொன்னிக் கண்ணன், அமெரிக்காவில், அதிக வருமானமுள்ள செல்வாக்கான வேலையில் இருப்பதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்னை வந்துபோவார்.
ஒருமுறை இந்தியா வந்தபோது, தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சுரேஷின் மனைவிமீது பொன்னிக்கண்ணனுக்கு தவறான பார்வை விழுந்தது. ஒரு பெருமழையின்போது சுரேஷின் குழந்தை கனிஷ்கா (வயது 11)), சாக்கடைக்குள் விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் இருந்தபோது, சுரேஷுக்கு பண உதவி செய்வதுபோல நடித்தார். மேலும், சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருப்பதைத் தெரிந்துகொண்டு, அடிக்கடி குடிக்கப் பணம் கொடுத்துவந்தவர். ஒரு கட்டத்தில், கொடுத்த பணத்தைத் திருப்பிக்கொடுக்கு மாறு சுரேஷை மிரட்டி, தனக்கு அடிமையாக்கியதோடு, சுரேஷின் மனைவி ராஜலட்சுமியைப் பார்த்து தன்வசப்படுத்த தொடங்கினார்.
பொன்னிக்கண்ணனுக்கு ராஜலட்சுமியின் மீதான மோகத்தீயால் இரு குடும்பத்திலும் பிரச்சனையாகி, விவாகரத்து நோக்கிச்செல்ல, ராஜலட்சுமியை ‘கந்தர்வ விவாகம்’ செய்து மனைவி யாக்கினார் பொன்னிக் கண்ணன். ஆழ்வார்திருநகர் அன்பு நகரில் பத்து லட்சம் ரூபாய் லீசுக்கு வீடெடுத்து, ராஜலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் தனியே குடும்பம் நடத்தத் தொடங்கினார் பொன் னிக்கண்ணன். ராஜ லட்சுமிக்காக ஸ்பெஷல் படுக்கையறையுடன் ஆவடியிலும் இன்னொரு வீடு கட்ட ஆரம்பித்தார்.
காலப்போக்கில், ராஜலட்சுமியை அனுபவித்துச் சலித்த பொன்னிக்கண்ணனின் காமக்கண்கள், குழந்தை கனிஷ்கா மீதும் விழத்தொடங்கியது. ஊட்டிக்கு உல்லாசப் பயணமாக குடும்பத்தை அழைத்துச் சென்றவர், ராஜலட்சுமிக்கு மயக்க சாக்லேட்டுகளைக் கொடுத்து விட்டு, அவரது மகள் கனிஷ்காவை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். (அமெரிக்காவிலிருந்து ஒவ்வொரு முறையும் ராஜலட்சுமியின் வீட்டுக்கு வரும் போதெல்லாம், தனது அப்பா ஸ்தானத்தையும் மறந்து, கனிஷ்கா வைக் குறிவைத்து பாலியல் சேட் டைகளைச் செய்து வந்துள்ளார்.)
ஒரு கட்டத்தில், கனிஷ்கா இரவு நேரங்களில் பயத்தில் அழுவது கண்டு விசாரித்த ராஜலட்சுமி, பொன்னிக் கண்ண னின் பாலியல் துன்புறுத்தலைத் தெரிந்துகொண்டு கடும் அதிர்ச்சியாகி, அவர் மீது, வடபழனி ரலி27 மகளிர் காவல்நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார்கொடுத்தார். அந்த புகாரை, மாசக்கணக்கில் இழுத்தடித்த மகளிர் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் எஸ்.ஐ. ரேணுகா ஆகியோர், பொன்னிக்கண்ணனின் பண பலத்துக்கு விசுவாசமாகி, அவரின் வக்கீல்கள்
துணையுடன் "அம்மாவை ஜெயிலுக்கும், உன்னை ஹோமுக்கும் அனுப்பிவிடுவேன்!’''” என்று குழந்தை கனிஷ்காவை மிரட்டியுள்ளனர். பொன்னிக்கண்ணனும், "கனிஷ்காவை என்னிடம் விட்டுவிடு. நான் கேரளாவில் ஆறுமாதம் வைத்திருந்து, பின்னர் அமெரிக்கா கூட்டிச்செல்கிறேன். இல்லையென்றால் நீ நடுத்தெருவில் நிற்பாய்!'' என்று ராஜலட்சுமியை மிரட்டியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது, பொன்னிக்கண்ணனின் முதல் மனைவி குமாரி, அன்புநகர் வீட்டு உரிமையாளர் ரவிக்குமார் அவரது மனைவி வீரா மற்றும் சில புரோக்கர்களுடன் கூட்டுச் சேர்ந்து, ராஜலட்சுமி பெயரில் ‘போலி டாக்குமெண்ட்’ தயார் செய்து, மோசடி வழக்குகளில் உள்ளே தள்ளுவேனென்று ராஜலட்சுமியை மிரட்டியிருக்கிறார். இவர்களுக்கு விலைபோன ஆவடி கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ராஜலட்சுமியை மிரட்டி, தன் பங்குக்கு பதினைந்தாயிரம் ரூபாய் பறித்துக் கொண்டார். அதோடு, ரவிக்குமார் தனது அடியாட்களுடன் ராஜலட்சுமியின் வீட்டுக்குள் வந்து தொடர்ந்து ரவுடித்தனம் செய்துள்ளார். இந்த சூழலில், ராஜலட்சுமியும் அவரது மகளும் நக்கீரனின் உதவியை நாடி வந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய நக்கீரன், வளசரவாக்கம் எஸ்.ஐ. செல்வராசுவிடம் புகாரளிக்க, அவர் ரவிக்குமார், அவரது மனைவி வீரா இருவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
அடுத்ததாக, குழந்தை மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பொன்னிக்கண்ணனுக்கு எதிராக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளிக்க, அந்த ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஜாய்ன்ட் டைரக்டர் ராஜ் சரவணக்குமார், கமிட்டி உறுப்பினர்கள் துரைராஜ், கல்வி உளவியலாளர் டாக்டர்.சரண்யா ஜெய்குமார் ஆகியோர் கனிஷ்காவிடம் பரிவுடன் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. கோஷா மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் கனிஷ்காவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப் பட்டன.
தி.நகர் டெபுடி கமிஷனர் மற்றும் அசிஸ்டென்ட் கமிஷனர் பாஸ்கர் ஆகியோரின் துரித செயல்பாட்டால் பொன்னிக்கண்ணனின் பணபலம் தோற்கடிக்கப்பட்டு, போக்ஸோ சட்டப்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டு, பொன்னிக்கண்ணன் எங்கும் தப்பிச்செல்லாதிருக்க லுக்லிஅவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நக்கீரனின் துரித நடவடிக்கை, ராஜலட்சுமிக்கும், பாதிக்கப்பட்ட குழந்தை கனிஷ்காவுக்கும் நம்பிக்கையளிப்பதாக இருந்தது.
பூந்தமல்லி கோர்ட் நீதிபதி, குழந்தையிடம் பரிவுடன் விசாரித்து வீடியோபதிவு செய்து கொண்டிருக்கும் போதுகூட, பொன்னிக்கண்ணனால் வெயிட்டாகக் கவனிக்கப்பட்ட ஆவடி கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ராஜலட்சுமியை தொலைபேசியில் மிரட்டும் வேலையில் ஈடுபட்டார். கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு, இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, எஸ்.ஐ. ரேணுகா, கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்’ போன்ற களைகளால் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள்மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுத்தால்தான் பிஞ்சுக்குழந்தைகள் நிம்மதியாக உயிர்வாழ பூமியில் வழியுண்டு.
- சுந்தர் சிவலிங்கம்