7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பில் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது? இந்தக் கேள்விக்கு இன்றுவரை யாராலும் சரியான பதிலைத் தெரிவிக்க முடியவில்லை. ராகுலிடம் கூட இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் இருக்க வாய்ப்பில்லாத நிலையில், அழகிரியைக் கேட்பதில் அர்த்தமேயில்லை…!
உண்மையில் இந்த விஷயத்தில் காங்கிரஸ் ஏற்கெனவே கோட்டை விட்டுவிட்டது. 7 பேர் விடுதலைக்குக் காரணமாக இருந்து, பெருந்தன்மையான கட்சி என்கிற தோற்றத்தை உருவாக்கி, தமிழகத்தில் கோட்டை விட்டதை எட்டிப் பிடித்திருக்கலாம்.
நிகழ்ந்ததெல்லாம் இதற்கு நேர்மாறாகவே நிகழ்ந்தது. காங்கிரஸ் அரசு அஸ்தமிக்க இருந்த காலகட்டத்தில், 3 பேரைத் தூக்கில் போடத் தேதி குறித்த காகிதத்தை ப.சிதம்பரமே நேரில் போய் வேலூரில் ஒட்டாதது ஒன்றுதான் பாக்கி!
இப்போது, சூழ்நிலை அடியோடு மாறிவிட்டிருக்கிறது. “"ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம்'’என்று உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்ட நிலையில், "ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது'’என்று சாமர்த்தியமாகப் பேசுகிறது காங்கிரஸ்.
‘ராஜீவைக் கொன்றவர்களை மோடி அரசு விடுவிக்கிறது’ என்கிற பிரச்சாரம் வட இந்திய வாக்காளர்களிடையே எதிர்விளைவை ஏற்படுத்துமோ என்கிற கவலை, தேர்தலுக்கு முன், பாரதீய ஜனதாவுக்கு இருந்திருக்கலாம். இந்த வாக்குவங்கிப் பார்வை அதர்மமானதுதான் என்றாலும், இதுதான் யதார்த்தம்! இந்த சுய ஆதாய அரசியல் லாப நஷ்டக் கணக்குகளுக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது -அப்பாவிகள் ஏழு பேரின் தனிமனித உரிமை.
இப்போது, தேர்தல் நெருக்கடிகளெல்லாம் முடிந்துவிட்ட நிலை. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்கும்படி, மற்ற அரசியல் கட்சிகளைப் போல, பாரதீய ஜனதாவும், ஆளுநரை வெளிப்படையாகவே கேட்டுக் கொள்ளலாம்.
28 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் ஏழு பேரும், ராஜீவ் படுகொலையில் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள். வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அவர்களை விடுதலை செய்ய கருணை கிருணையெல்லாம் தேவையில்லை, இருக்கிற சட்டங்களே போதுமானவை.
‘அவர்களை விடுதலை செய்வதற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ குறுக்கே நிற்காமல், காங்கிரஸ் வழிவிட்டாலே போதும். “
ராஜீவ் கொலைவழக்கு விசாரணை எப்படியொரு கேலிக்கூத்தாய் இருந்தது என்பது கொஞ்சம்கொஞ்சமாக அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனை விசாரித்த விசாரணை அதிகாரி தியாகராஜன் காலங்கடந்தேனும் மனசாட்சியுடன் பேசினார். மறைந்த இயக்குநர் பிரகதீஸ்வரனின் ஆவணப்படம், தியாகராஜன் தவறிழைத்திருப்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருந்தது.
ராஜீவ் கொலையால் நேரடியாக ஆதாயம் பெற்றவர்கள், அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரும், ஒரு அண்டை நாடும்!
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பிரதமர் பதவியில் அந்த நபரைக் கொண்டு வந்து அமர்த்தியது, ராஜீவ் படுகொலை.
அவர், நரசிம்மராவ்.
நேரடி ஆதாயம் கிடைக்கப்பெற்ற ஒரே நாடு, இலங்கை.
ஒடுக்கவே முடியாது என்கிற அளவுக்கு வலுப்பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, இலங்கைக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்தது, ராஜீவ் படுகொலை. அதைக் காட்டியே இந்தியாவிடம் உதவிபெற்று ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை. ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை அராஜகமாக நசுக்கியது.
1987-ல் ராஜீவ் காந்தி தன்னை அவமதித்த நிலையிலும், இந்திய அமைதி காப்புப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பான பிரபாகரனின் வரலாற்று சிறப்புமிக்க ஆகஸ்ட் 4 சுதுமலை உரை, அந்தப் பொதுக்கூட்ட மேடையோடு முடிந்துவிடவில்லை. "ஏன் ஒப்படைக்க வேண்டும்' என்று கேட்ட இளநிலை தளபதிகளையெல்லாம் அழைத்து, குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்கிற தகப்பனைப் போல விளக்கம் சொல்லி சமாதானப்படுத்தினார் அவர்.
அமைதி காப்புப் படையைத் தவறாக வழிநடத்த முயன்றவர்கள் யார், புலிகளுக்கும் இந்தியாவுக்கும் மோதல் போக்கை உருவாக்கியவர்கள் யார் என்கிற வரலாற்றையெல்லாம் காங்கிரஸ் நண்பர்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைத் தெரிந்துகொண்டால்தான், புலிகளைக் குறிவைத்தே நகர்ந்த ராஜீவ் படுகொலை விசாரணையின் அஸ்திவாரம் எவ்வளவு பலவீனமானது அல்லது எதிர்மறையானது என்பதை அவர்கள் உணரமுடியும்.
ஒன்றரை லட்சம் தமிழரைத் திட்டமிட்டுக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச, அந்தக் குற்றத்தை மூடிமறைக்கவும், சர்வதேச விசாரணையின் பிடியிலிருந்து தப்பிக்கவும் இன்றுவரை நம்பியிருப்பது, இந்தியாவைத்தான்! மேற்குலகம் தன்னைக் காட்டிக்கொடுத்தாலும் இந்தியா காட்டிக் கொடுக்காது என்கிற உறுதியான நம்பிக்கை ராஜபக்சவுக்கு இருக்கிறது.
இந்தியாவுக்குள்ளேயே வந்துநின்று, இந்தியாதான் எல்லா உதவியும் செய்தது என்று சொல்வதன் மூலம் ‘இனப்படுகொலையில் இந்தியா கூட்டுக் குற்றவாளி’ என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்ய ராஜபக்சவால் முடிகிறது. இது சர்வநிச்சயமாக ‘பிளாக் மெயில்’. இப்படி பிளாக்மெயில் செய்கிற ஓர் இனப்படுகொலைக் குற்றவாளிக்குத்தான், ராகுலும் மோடியும் போட்டி போட்டுக் கொண்டு விருந்து கொடுக்கிறார்கள்.
2008-2009-ல் நடந்த தமிழினப்படுகொலைக்கு மூலகாரணமாக இருந்தது காங்கிரஸ் அரசின் பிழையான இலங்கைக் கொள்கை. அந்தக் கொள்கைக்கு நாங்களும் முட்டுக்கொடுப்போம் என்று முரண்டுபிடிக்கிறது பாரதீய ஜனதா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஓர் இனவெறியனை, இனப்படுகொலையாளியை நடுவீட்டில் உட்காரவைத்துக் குளிப்பாட்டிக் கொண்டிருப்பது என்ன ராஜதந்திரம் என்று புரியவில்லை.
சர்வதேச நெருக்கடியிலிருந்து தப்பிக்கவே, ஆட்சிமாற்றம் என்றொரு நாடகத்தை அரங்கேற்றியது சிங்கள உயர்குழாம். ‘குற்றம் செய்த ராஜபக்சவைப் பதவியிலிருந்து நீக்கிவிடுகிறோம்’ என்று சொல்லி விட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜபக்சவுக்கும் இனப்படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்துக்கும் சகல பாதுகாப்பும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘
26-வது மைலில் இருக்கிற ஒரு சுண்டைக்காய் நாட்டின் இந்த மோசடி ராஜதந்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத சுஷ்மா சுவராஜின் வெளியுறவுப் பரிவாரத்தால் சீன - அமெரிக்க - ரஷ்ய நகர்வுகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?
தமிழினப் படுகொலைக்கு நீதி வாங்கித்தருகிற வேலையை மோடி முடுக்கிவிட்டிருந்தாலே போதும்….. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கவனத்தையும் பா.ஜ.க. கவர்ந்திருக்கும். அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது முதல் குற்றமென்றால், அதைக்காட்டிலும் பெரிய குற்றம், ‘ராஜபக்சவுக்கு பாரதரத்னா விருது வழங்கியே ஆகவேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிற உளறுவாயர்களை மடியில் கட்டிக்கொண்டு திரிவது.
ஓர் இனப்படுகொலையைத் திட்டமிட்டுச் செய்து முடித்தது ராஜபக்சவின் அரசுதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ராஜீவ் கொலையில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேருக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை என்பதும் நமது புத்திக்குப் புரிகிறது. அறிவுக்கும் துணிவுக்கும் தொடர்பேயில்லாத நிலையில், என்ன தெரிந்து என்ன பயன்? நாம் இப்படி இருப்பதால்தான், இனப்படுகொலை செய்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள்; அப்பாவிகள் சிறையில் கிடக்கிறார்கள்.
‘இதில் காங்கிரஸுக்கு நான் இளைத்தவனில்லை என்று காட்டிக்கொள்வதில்தான் அக்கறை காட்டுகிறது, பாரதீய ஜனதா.
காங்கிரஸைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் அதை உயிர்த்தெழ வைக்க, இப்போதுகூட ஒரு வாய்ப்பிருக்கிறது. "தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 7 பேரையும் விடுவியுங்கள். ராஜீவ் போன்ற மனிதாபிமானம் மிக்க ஒரு தலைவருக்கு அதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும். ராகுலும் காங்கிரஸும் அதைத்தான் விரும்புகிறோம்'’என்று பகிரங்கமாக அறிவித்தால், காங்கிரஸின்மீது சர்வநிச்சயமாக ஒரு மரியாதை ஏற்படக்கூடும். அதன் இமேஜ் பலமடங்கு அதிகரிக்கும்.
நல்ல வாய்ப்புகளை நழுவவிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிற காங்கிரஸ், இதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதை காங்கிரஸின் துரதிர்ஷ்டம் என்று சொல்வதா, நமது துரதிர்ஷ்டம் என்று சொல்வதா.... புரியவில்லை. மோடி எவ்வளவுதான் கஷ்டப்பட்டு கெட்டபேர் எடுத்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ளவே மாட்டோம் என்று காங்கிரஸ் ஒற்றைக்காலில் நின்றால் யார்தான் என்னதான் செய்ய முடியும்?