செந்தில் பாலாஜி கைது பற்பல விவாதங்களை உருவாக்கி யுள்ளது. செந்தில்பாலாஜியை கஸ்டடியில் விசாரிக்க அமலாக்கத் துறை எட்டு நாள் அனுமதியை வாங்கியது. ஆனால், அவரிடம் ஒரு கேள்வியைக் கூட கேட்க முடியவில்லை. அவரது கைதை வைத்து ஒரு பெரிய சதித்திட்டத்தையே மத்திய அரசு உருவாக்கியிருந்தது. அந்த திட்டமே சுக்குநூறாகி விட்டது.
செந்தில் பாலாஜி விசயத்தில் தி.மு.க. வழக்கறிஞர் படை மிகவும் சுறுசுறுப்பாக செயல் பட்டது. அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரது மனைவி மேகலா மூலம் ஒரு ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பாலாஜியை கைது செய்து டெல்லிக்கு அழைத்துக்கொண்டு போய் ‘திகார்’ சிறையில் பூட்டி அவரை அப்ரூவர் ஆக்கி அடுத்த கட்டமாக உதயநிதி, சபரீசன், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது ‘ரெய்டு’ நடத்துவதுதான் அமலாக்கத்துறையின் பிரம்மாண்ட மான திட்டம். அதற்காக செந்தில் பாலாஜியின் கைதை உள்ளூர் நீதிமன்றத்திற்கு தெரிவிக் காமலேயே காலம் தாழ்த்தி வந்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட தி.மு.க. எம்.பி என்.ஆர்.இளங்கோ தலைமையி லான வழக்கறிஞர் அணி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவை விசாரிக்கும் ‘பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஒருவர் தான் கரூரை சார்ந்தவன்’ என்கிற அடிப்படையில் கடைசி நிமிடத்தில் பதவி விலகினார்.
அந்த மனுவின் அடுத்த விசாரணை மறுநாள் புதிய அமர்வில் வரும் என்கிற சூழ்நிலையை தி.மு.க. வழக்கறிஞர் அணி ஏற்படுத்தியது. இதனால் செந்தில் பாலாஜியை மருத்துவமனையிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லும் அமலாக்கத் துறையின் திட்டம் தவிடுபொடியானது. ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலிக்காமல் இருக்க அவசர அவசரமாக முதன்மை செஷன்ஸ் நீதிபதி அல்லியை அமலாக்கத்துறை சந்தித்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்து செந்தில் பாலாஜியின் கைதை அதிகாரப்பூர்வ மாக அறிவித்தார்கள்.
அந்த அமர்விலேயே என்.ஆர்.இளங்கோ பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அமலாக்கத்துறையோ, அவரை கஸ்டடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வாக்கிங் போய்விட்டு வந்தவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது எப்படி என அமலாக் கத்துறை வழக்கறிஞர் கோர்ட்டிலேயே கிண்டலடிக்க, மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையை தவறென்று சொல்லும் அமலாக் கத்துறையை, கோர்ட்டில் தவறான தகவல் கொடுத்த சட்டப்படி கைது செய்ய நேரிடும் என என்.ஆர்.இளங்கோ ஆவேசமாகப் பேசினார்.
ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை பாலாஜியின் உடல்நிலை குறித்து சொன்ன வாதங் களை நிராகரித்தது. அவரை காவேரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அனுமதியளித்தது. எய்ம்ஸ் மருத்துவர்கள் அவரை பரிசோதிக்க அனுமதியளித்தது. அதே நேரத்தில் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை எட்டு நாள் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அந்த விசாரணையில் ஒன்றுமே செய்ய முடியாமல் அமலாக்கத்துறை விழி பிதுங்கி நிற்கிறது.
அடுத்த கட்டமாக செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை குறிவைத்து கவர்னரை களமிறக்கியது மத்திய அரசு. இதுபோல ஒரு சூழ்நிலை 2005 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் ஏற்பட்டது. நிதிஷ்குமாரும் பா.ஜ.க.வும் இணைந்து அரசமைக்க முன்வந்த நேரத்தில் அதை ஏற்காத காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட கவர்னர், 356-வது பிரிவை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சி வருமென அறிவித்தார். அதேபோல் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரும் தி.மு.க. அரசை நான் ஏற்க மாட்டேன் என்கிற நிலையை தமிழக கவர்னர் எடுத்தார். பீகார் விசயத்தில் கவர்னர் எடுத்த நிலை சட்டப்படி தவறு என உச்சநீதி மன்றம் தெளிவாகத் தீர்ப்பு கூறியுள்ளது. நள்ளிரவில் கவர்னர் மாளிகையில் நடந்த சட்ட ஆலோசனைகளும், தமிழக அரசுக்கு ஆலோசனை கூறிய சட்ட வல்லுனர்களும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை தெளிவாக எடுத்துக் கூறினார்கள். 356-வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கு எதிராக கவர்னர் செயல்பட முடியாது என இரு முகாம்களி லும் சட்ட வல்லுனர்கள் கூற, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என கவர்னரின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு அறிவித்தது. அதனால் ஆட்சிக் கலைப்பு நிகழும் என எதிர்பார்த்துக் காத்திருந்த அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஏமாற்றம் அடைந்தனர்.
செந்தில் பாலாஜி கைதை வைத்து தி.மு.க.வை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் என நினைத்த மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொன் றாக தோல்வியடைய, அமலாக்கத்துறை அவரது தம்பி அசோக்கை குறிவைத்தது. அவர் கட்டிவரும் வீடு போன்றவற்றை ‘டார்கெட்’ செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. பாலாஜி கைதின்போதே அவரை அடுத்ததாகக் கைது செய்வார்கள் என உணர்ந்த செந்தில்பாலாஜி குடும்பத்தினர், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். பறந்துபோன அசோக் எங்கே இருக்கிறார் எனக் கண்டுபிடிக்க முடியாமல் அமலாக்கத்துறையினர் மூன்றாவது தோல்வியையும் பாலாஜி விசயத்தில் சந்தித்தனர்.
அடுத்த கட்டமாக பாலாஜியின் பி.ஏ.க்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என யாரைப் பிடித்தால் பாலாஜியை வாய் திறக்க வைக்க முடியும் எனத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள் அமலாக்கத்துறையினர். இதில் பாலாஜியின் மனைவி மீது நடவடிக்கை எடுக்க லாமா என்கிற யோசனையும் அமலாக்கத் துறையால் ஆராயப்பட்டு வருகிறது என்கிறது அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீதான விசாரணை புதனன்று நடக்கவுள்ளது.