காவல்துறையில் பணி உயர்வு அளிப்பதில் நடைபெற்றுள்ள கோல்மால் குறித்துதான் தற்போது தமிழகக் காவல்துறையினரிடையே சீக்ரெட் டாக்! "06-07-2022 அன்று ஒட்டுமொத்தமாக விடுமுறை கொடுத்துவிட்டு டி.ஜி.பி.யை முற்றுகையிட்டு நம்முடைய சீனியாரிட்டி விவகாரத்தை எடுத்துரைப்போம்! நமக்கு செவிமடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தினை நாடுவோம்" எனத் தங்களுக்குள்ளேயே, தங்களுடைய டெலிகிராம் குரூப் மூலம் சபதம் எடுத்துள்ளனர் 2011-ஆம் ஆண்டின் நேரடி எஸ்.ஐ.கள். சமீபத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து எஸ்.ஐ. பதவியிலிருந்து இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த தகுதிப் பட்டியல்கள் குறித்த விவரங்கள் தான் 2011-ஆம் ஆண்டின் நேரடி எஸ்.ஐ.க்களை கொதிப்படையச் செய்து சபதமெடுக்கச் செய்திருக்கிறது.

cc

அந்த சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிப் பட்டியலில், 2011-ஆம் ஆண்டின் நேரடி எஸ்.ஐ.க்கள் 1,095 பேரோடு, 1991-ஆம் ஆண்டைய மகளிர் கிரேடு 1 போலீஸார் 384 நபர்களும் அடக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூடுதலாக, கிரேடு 1 போலீ ஸாரின் எஸ்.ஐ.க்கான தகுதித் தேதி (பணியில் சேர்ந்த தேதி) 26-01-2011 என்றும், 2011-ஆம் ஆண்டைய நேரடி எஸ்.ஐ.க் களின் தகுதித் தேதி (பணி யில் சேர்ந்த தேதி) 01-02-2011 என்றும் குறிப்பிடப்பட்டிருந் தது. இந்த தகுதித் தேதி விவரங்கள் தான் பிரச்சனைக்கான மையப்புள்ளி.

"அது எப்படி? 1991-ஆம் ஆண்டு கிரேடு 1 போலீஸாராகச் சேர்ந்த அவர்கள், எஸ்.ஐ-க்கான ப்ரீ புரோமோஷனல் டிரெய்னிங்கை 2016-ஆம் ஆண்டு தானே முடித்தனர்? எப்படி 2011க்கான எஸ்.ஐ.க்கள் லிஸ்டில் அவர்கள் வர முடியும்? எங்கோ கோல்மால் நடந்துள்ளது! இதனை சும்மா விட முடியாது. இதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றி நம் எதிர்ப்பைப் பதிவு செய்தே ஆக வேண்டும். எனவே, 2016-ஆம் ஆண்டின் நேரடி எஸ்.ஐ.க்கள் அனைவரும் 06-07-2022 அன்று, ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு இதுகுறித்து டி.ஜி.பி.யிடம் முறையிடுவோம். அங்கு நமக்கு சாதகமாக இல்லையெனில் நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றத்தில் போராடி நமக்கான நியாயத்தைப் பெறுவோம்!'' என்று முடிவெடுத்துள்ளனர் 2011-ஆம் ஆண்டு எஸ்.ஐ.க் கள்.

மக்களைக் காக்கும் உன்னதப் பணியில் நேரங் காலம் பார்க்காமல் பணி யாற்றும் காவலர்களின் பணி உயர்விலேயே கோல்மால் வேலைகளைக் காட்டுவது சரியா என்று அவர்கள் எழுப்பும் கேள்வியின் நியாயம் நமக்குப் புரிகிறது. இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு சரி செய்வாரா டி.ஜி.பி?

Advertisment