ஒவ்வொரு இந்தியரையும் நம்பவைக்கும் வாக்குறுதிகளைக் கொடுத்த மோடி அரசை ஒவ்வொரு இந்தியரும் ரொம்பவே எதிர்பார்த்தார்கள்.
ஒருமுறையேனும் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என டெல்லி குளிரில் 100 நாட்கள் காத்திருந்து நிர்வாணப் போராட்டம் வரை நடத்தினார்கள் தமிழ்நாடு விவசாயிகள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் தலைநகரத்தை முற்றுகையிட்டுப் பெரும் போராட்டம் நடத்தியது. கடைசிவரை, பிரதமர் மோடியை விவசாயிகளால் சந்திக்க முடியவில்லை.
எந்த விவசாயிகளை பிரதமர் மோடி புறக்கணித்தாரோ, அந்த விவசாயிகள்தான் 5 மாநில தேர்தல் முடிவுகளில் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான், பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் 5 மாநிலத் தோல்வி குறித்து ஏழு மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார் மோடி. அதற்கு முன்பாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஐந்து மாநில பா.ஜ.க. கட்சித் தலைவர்களுடனும் பாரதிய ஜனதாவின் விவசாயப் பிரிவான பாரதிய கிசான் மோர்ச்சாவின் தலைவர்களுடனும் பல மணிநேரம் பேசியிருக்கிறார்.
தெலங்கானாவில் மீண்டும் பெரு வெற்றிபெற்ற சந்திரசேகர ராவ் தனது வெற்றி அறிவிப்பாக விரைவில் தெலங்கானா விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அறிவித்திருக்கிறார். அண்மையில் தேர்தலை சந்தித்த மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகியவை விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட மாநிலங்கள். இந்தியா முழுவதும் மோடி அரசு கடைப்பிடித்த விவசாய கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் இந்த 4 மாநில தேர்தல் முடிவுகள் என்கிறார்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களே.
தமிழகத்தில் விவசாயிகள் சங்கமான அகில இந்திய கிசான் சபையின் தலைவராக செயலாற்றிய சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணனிடம் விவசாய பிரச்சினையின் தீவிரம் குறித்துக் கேட்டோம்.
""சட்டமன்றத் தேர்தல் நடந்த மத்திய பிரதேசத்தில் பருப்பு, உருளைக்கிழங்கு, கோதுமை விளைகிறது. தமிழகத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 150 ரூபாய். பருப்பு விளைகின்ற மத்திய பிரதேசத்தில் கிலோ ஐந்து ரூபாயைக்கூட தாண்டாது. உருளைக்கிழங்கின் விலை கிலோ மூன்று ரூபாயைக்கூட தாண்டுவதில்லை. அதாவது உற்பத்தி செய்யும் விவசாயிக்கு அடிப்படை விலை கிடையாது. அதனை வாங்கும் மக்களுக்கோ அநியாய விலை ஏற்றம்.
ஒவ்வொரு முறை சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பா.ஜ.க. அங்கே ஒரு அருமையான தேர்தல் வாக்குறுதியை அளிக்கும். "நாங்கள் இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமி நாதன் கொடுத்த பரிந்துரையின்படி விவசாயி ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஒரு ரூபாய் ஆகிறதென்றால்.... அரசே ஒன்றரை ரூபாய்க்கு அதை கொள்முதல் செய்யும்' என நாவில் தேனொழுக பா.ஜ.க. பேசும்.
நாடாளுமன்றத் தேர்த லில் மோடி அதே வாக்குறுதிகளைத் தந்ததை நம்பிய விவசாயிகள், வங்கிகளில் லட்சக் கணக்கில் பணம் வாங்கி பயிர் செய்தார்கள். திடீரென்று பண மதிப்பிழப்பீடு திட்டத்தை நரேந்திரமோடி கொண்டு வந்தார். வியாபாரம் முழுவதும் டிஜிட்டல்மயமானது. அதுவரை ரொக்கத்தில் வியாபாரம் செய்துவந்த விவசாயி, உரம் வாங்கக்கூட காசில்லாமல் அத்தியாவசிய செலவுகளுக்கான வீட்டு உண்டியலை உடைத்து செலவு செய்தான்.
விவசாயத்தை முடக்கியது போதாதென்று ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து வியாபாரத்தையும் முடக்கினார்கள். விளைந்த பொருட்களெல்லாம் தேங்கின. டீசல், உரம் என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. உற்பத்தி செய்த பொருளை உரிய விலைக்கு விற்க முடியாமல் தவித்த விவசாயிகள் "வங்கிகளில் விவசாயத்திற்காக வாங்கிய கடனை ரத்து செய்யுங்கள்' என போராடினார்கள். மத்திய பிரதேசத்தில் மான்ட்சோர் என்ற இடத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் 9 பேரை போலீசை ஏவி சுட்டுக் கொன்றுவிட்டு, மறுநாள் அதே இடத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாடக போராட்டம் நடத்தியது பா.ஜ.க. அரசு.
ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தராஜே ஒவ்வொரு முறையும் விவசாயிகள் போராடும் போதும் கூப்பிட்டு பேசி ஒப்பந்தம் போடுவார். நிறைவேற்றவே மாட்டார். விவசாயிகள் தொடர்ந்து போராடினார்கள். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்காமல் பாதுகாத்து வந்தார்கள். "தேர்தல் வரும் புதிய அரசு அமையும், அப்பொழுது விற்கலாம்' என சேமித்து வைத்தார்கள். தேர்தல் வந்ததும் தங்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க.வை ஆட்சியை விட்டு விரட்டினார்கள். அதே நேரம் தங்க ளுக்காக போராடிய தலைவர்களை வெற்றி பெற வைத்தார்கள். ராஜஸ் தான் மாநிலத்தில் சி.பி.எம்.மின் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்களான பல்வான் பூனியா, கிரிதாரி லால்மணி ஆகிய இரு தலைவர்களை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததோடு... ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சி.பி.எம். சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நல்ல வாக்குகளை தந்துள்ளனர். சி.பி.எம். பெற்ற வெற்றி, விவசாயி களின் கோபத்தை எதிரொலிக்கிறது'' என்கிறார் கே.பாலகிருஷ்ணன்.
பொருளாதார அறிஞரான வெங்கடேஷ் ஆத்ரேயா, ""சீனாவில் ஒரு ஏக்கரில் 6000 கிலோ விவசாய பொருள் உற்பத்தி நடக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒரு ஏக்கரில் 2000 கிலோ தான் உற்பத்தி நடக்கிறது. அந்த அளவிற்கு விவசாயம் மிகவும் பின்தங்கி கிடக்கிறது. இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு உரமானியம் கிட்டத் தட்ட இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை கிராமப்புற இளைஞர்களுக்கு வேலையின்மையை உருவாக்கியுள்ளது. இது பா.ஜ.க. மீதான கடும் கோபமாக மாறியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் நிலவும் வேலையின்மை அங்கே ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கோபமாக மாறி காங்கிரசை வீழ்த்தியுள்ளது.
"விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய நான்கரை லட்சம் கோடிகள் வேண்டும்' என சொல்லும் மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடனை லட்சக்கணக்கில் தள்ளுபடி செய்தது. இதனைப் புரிந்து கொண்டவர்கள் பா.ஜ.க.வை தோற்கடித்தார்கள்'' என்கிறார்.
பா.ஜ.க. 5 மாநில சட்டசபை தோல்விகள் குறித்து ஆராய நடத்திய கூட்டத்தில் விவசாயிகள் விஷயம் முக்கியத்துவம் தந்து ஆராயப் பட்டுள்ளது. ""ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெற பா.ஜ.க. நம்பியிருந்தது, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி பிரிக்கும் வாக்குகளைத்தான். மத்திய பிரதேசத்தில் நான்கு சதவிகித வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி பெற்றது. சத்தீஸ்கரில் முன்பு காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அஜித் ஜோகியுடன் இணைந்து 11 சதவிகித வாக்குகளை பெற்றது. மாயாவதியின் ஓட்டு பிரிப்பையும் தாண்டி காங்கிரஸ் அங்கே எப்படி வெற்றி பெற்றது என்பதை பெரிதும் ஆராய்ந்த பா.ஜ.க. தலைமை, தேர்தலுக்கு பிறகு ம.பியில் காங்கிரசுடன் கைகோர்த்த மாயாவதியின் அரசியல் சாணக் கியத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள்'' என்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.
விவசாயிகளின் நான்கரை லட்சம் கோடிக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பான பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி "அதற்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவிக்கிறது' என்று நெகட்டிவ் பதிலையே தந்திருக்கிறார். "ரிசர்வ் வங்கி கவர்னராக முன்பு பொருளாதார வல்லுநர்களாக நியமிப்பீர்கள். இப்பொழுது முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூளையுமான சக்தி கந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளாரே? அவரால் முடியாதா?' என கேள்வி எழுந்தபோது, இப்பொழுதும் முடியாது என்ற பதிலே ஜெட்லியிடமிருந்து வந்துள்ளது.
"விவசாயம் காப்போம்' என்று சொல்லி, விவசாயிகளை கடனாளியாக்கியது மோடி அரசு. இளைஞர்களுக்கு வேலை என்று அறிவித்து விட்டு, "பகோடா விற்பதும் வேலைதான்' என பம்மாத்து செய்தது. அம்பானி-அதானிகளுக்கு வாரிக் கொடுத்துவிட்டு சிறுவணிகர்களை ஜி.எஸ்.டி.யால் வதைத்து முடக்கியது. வீட்டில் உள்ள பெண்கள் கடுகு டப்பாவில் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பறித்துக்கொண்டது. ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஏமாற்றிய மோடி அரசுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிராக இருக்கிறது.
பப்பு (பொடியன்) என பா.ஜ.க. கேலி செய்த ராகுல்காந்தி, செமி ஃபைனல் எனப்பட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் ஆட்சியைப் பறித்திருக்கிறார். அடுத்த வேட்டு, ஃபைனல் எனப்படும் எம்.பி. தேர்தலில் வெடிக்கும்.
-தாமோதரன் பிரகாஷ்
___________
வெற்றியைக் குவித்த வாக்குறுதி!
அசத்தலான வெற்றியை சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இத்தனைக்கும் அதன் தலைவர்கள் பலர் நக்சலைட் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர். முன்னாள் முதல்வர் அஜித்ஜோகி தனிக்கட்சி ஆரம்பித்து மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதனை மீறிய வெற்றிக்கு முக்கிய காரணம்... டி.எஸ்.சிங்வி என்கிற மாநில காங்கிரஸ் தலைவர். இவர்தான் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வடிவமைத்தவர். "விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்', "விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்சம் ஆதரவு விலை தரப்படும்' என அவர் உருவாக்கிய தேர்தல் அறிக்கைதான், பா.ஜ.க.வில் தொடர்ச்சியாக முதல்வராக இருந்த ரமன்சிங் ஆட்சியை வீழ்த்தியது. வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடுதலாக ஒரு லட்சம் கோடி தேவைப்படுமாம்.
தோல்வியில் லாபம் தேடும் மோடி!
மத்திய பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் அதிருப்தியால் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நிறுத்த ஆர்.எஸ்.எஸ். ஆலோசித்தது. அண்மையில் நடந்த ஒரு விழாவில் கட்கரி மயங்கிச் சரிந்தது ஃபிட்னெஸ் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. குஜராத்தில் தொடர்ச்சியாக முதல்வர் பதவியில் மோடி இருந்ததுபோல, மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகள் இருந்தவர் சிவராஜ் சவுகான். மக்கள் செல்வாக்கும் உடையவர். மோடியைப் போலவே பா.ஜ.க.வின் பாராளுமன்ற போர்டில் சவுகானும் நிரந்தர உறுப்பினர். இம்முறை ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித் திருந்தால் மோடிக்கு சவுகான் சவாலாகியிருப்பார். அதுபோல, வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவரான ராஜஸ்தான் வசுந்தரா ராஜேவும் தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றியிருந்தால் மோடியுடன் போட்டி போட்டிருப்பார். எனவே, பா.ஜ.க.வின் தோல்வியில் மோடிக்கு பர்சனல் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றனர் காவி பார்ட்டியினர்.
சீறும் சின்ஹா!
"மோடியை நான் தோற்கடித்தே தீருவேன்' என சபதம் போட்டிருப்பவர் ராம்ஜெத்மலானி. அதுபோலவே, ""மோடியை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற செய்யாதீர்கள். நாட்டின் பொருளாதாரம் சின்னாபின்னமாகிவிடும்'' என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா. முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண்ஷோரியும் மோடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார். இவர்களில், வாஜ்பாய் அமைச்சரவையில் நம்பர் டூ இடமான நிதியமைச்சர் பொறுப்பை வகித்த யஷ்வந்த்சின்ஹாவின் சீற்றம் பா.ஜ.க.வுக்குள்ளேயும் வெளியேயும் அதிர் வலைகளை உருவாக்கியுள்ளது.