சசிகலா சமீபகாலமாக வித்தியாசமான சில அரசியல் அசைவுகளை செய்து கொண்டிருக்கிறார். வருகின்ற பாராளு மன்றத் தேர்தலையொட்டி அவர் மேற்கொள்ளும் இந்த அசைவுகள், சசிகலாவா இப்படி என கேள்வி கேட்க வைக்கும். பினாமி பெயரில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்த சசிகலா, இன்றைக்கும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் நிறைய சொத்துக்களை வைத்திருக்கும் மிகப்பெரிய நபராக இருக்கிறார். அந்த சொத்துக்களை விற்க விளம்பரம் செய்திருக்கிறார் சசி. அந்த சொத்துக்கள் எல்லாம் ஜெயலலிதாவின் சொத்துக்கள் என யாரும் வாங்கு வதற்கு தயாராக இல்லாத சொத்துக்கள்.
அந்த சொத்துக்கள் விற்பனை என வந்த முதல் விளம்பரத்தைப் பார்த்த தி.மு.க.வின் முக்கியப்புள்ளி, ரகசியமாக டீல் பேசி அதில் சிலவற்றை வாங்கினார். அவர் வாங்கிய பிறகும் சொத்துக்கள் விற்பனை நிற்கவில்லை. ஏன் இப்படி சொத்துக்களை விற்கிறார் சசிகலா என்கிற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டது.
சசியிடம் இல்லாத பணமா எனக் கேட்டதற்கு, "என்னோட வங்கிக் கணக்குகள் எல்லாவற்றையும் முடக்கிவிட்டார்கள். என்னிடம் அவசரத்துக்குப் பணம் இல்லை. மிடாஸ் சாராயக் கம்பெனியிலிருந்து தினமும் வரும் பணத்திலிருந்துதான் நான் செலவு செய்து கொண்டிருக்கிறேன். என் சொத்துக்களை வைத்திருக்கிற என் உறவினர்கள் நேர்மையாக இல்லை. தினகரன் வசம் இருக்கும் சொத்துக்களைக் கேட்டேன். அவர் தரமுடியாது என என் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார். அதனால் இளவரசி மகன் விவேக்கிட்ட இருந்த பீனிக்ஸ் மால் சினிமா தியேட்டரை விற்றேன். என் சொந்த பந்தங்கள் மட்டுமல்ல, நான் பினாமியாக வைத்திருந்த பலரும் எனக்குத் துரோகம் செய்தார்கள். ஈ.சி.ஆரில் ஒரு பெரிய காம்ப்ளக்ஸ். அதுல மாசம் 5 லட்சம் ரூபாய் வருது. அத பினாமியா வச்சிக்கிட்டு இருந்தவரு மாசம் அம்பதாயிரம் ரூபாய்தான் கொடுத்துக்கிட்டு இருக்காரு. அவரைக் கேட்டா அவ்வளவுதான் வருமானம் என்று என்கிட்டயே பொய் சொல்றார். அதனால்தான் விற்க ஆரம்பித்தேன் என்றார் சசி''’என்கிறார்கள் அவரது மிக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
போயஸ் கார்டனில் புதுவீடு கட்டி குடிபோன சசியின் கன்ட்ரோலில் தான் தீபாவும் தீபக்கும் இருக்கிறார்கள். எப்போதுமே தீபக், சசிகலா கண்ட்ரோலில்தான் இருந்தார். சசிக்கு சவால்விடும் தீபாவையும் சசிகலா, இப்போது கண்ட்ரோலில் எடுத்திருக்கிறார். அத்துடன் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தை கூறு போட்டு விற்று விட்டார். அதில் கிடைத்த பணத்தில் ஒரு பங்கை தீபாவுக்கு கொடுத்து விட்டார். கொடநாட்டில் ஜெயலலிதாவிற்கு நினைவு இல்லம் கட்டுகிறேன் என பூமி பூஜை போட்டிருக்கிறார். போயஸ் கார்டன், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு இவையெல்லாம் வரு மானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பின்படி குற்றத்தோடு தொடர்புடைய சொத்துக்கள். ஈ.சி.ஆரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் 91-96க்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துக்கள். அந்த வழக்கில் ஜெ.வும் சசியும் தண்டனை பெற்ற குற்றவாளிகள். சசி முழுக்க தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்த குற்றவாளி.
வழக்கோடு தொடர்புடைய சொத்துக்களை, நீதிமன்றத்தால் கையகப்படுத்த வேண்டும் என உததரவிடப்பட்ட சொத்துக்களை எப்படி விற்க முடியும்? என சசி தரப்பில் கேட்டபோது, “அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள். மற்ற குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு தொடரப்படவில்லை. ராவணன் இறந்துவிட்டார். அவருக்கு கொடநாடு எஸ்டேட்டில் பங்கு இருக்கிறது. ராவணனின் வாரிசுகள் மூலம் கொடநாடு எஸ்டேட்டின் ஒரு பகுதியை சசிகலா விற்றால் என்ன செய்ய முடியும்''’என எதிர்கேள்வி கேட்கிறார்கள் சசி தரப்பினர்.
அது எப்படி சரியாகும் என நீதிபதி குன்ஹாவிடம் உதவியாள ராக இருந்த பிச்சை முத்துவிடம் கேட்டபோது “"91-96 காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் ஊழல் சொத்துக்கள் என குன்ஹா அறிவித்தார். அதை அரசு கையகப்படுத்த வேண்டும். தி.மு.க. அரசு அந்த வேலையை செய்யவில்லை. ஊழலில் சம்பாதித்த பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்தார் என்பதுதான் வழக்கு. அதற்காக ஜெ. சதி செய்தார். அந்த சதித் திட்டத்தில் சசிகலா பங்கு பெற்றார் என்பதுதான் வழக்கே. சதிச் செயலில் பங்குபெற்ற ஒருவரின் உறவினர்கள் வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை எப்படி விற்க முடியும். போயஸ்கார்டனில் ஜெ.வுக்கு நினைவிடம் எழுப்ப எடப்பாடி எடுத்த முயற்சியும் தற்பொழுது கொடநாட்டில் ஜெ.வுக்கு நினைவகம் எழுப்ப சசி எடுக்கும் முயற்சியும், தவறானவை. அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடப்பட்ட சொத்தில் எந்த மாற்றத்தையும் யாராலும் கொண்டுவர முடியாது. குன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட் ஏற்றுள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வராமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள்தான் இவை''’என்றார்.
ஜெ.வின் சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என நரசிம்மமூர்த்தி என்கிற ஆர்.டி.ஐ. ஆர்வலர் கர்நாடக நீதிமன்றங் களில் வழக்கு போட்டார். அதில் “நான் முதலில் ஜெயலலிதாவின் பேரில் வங்கிகளில் இருக்கும் பிக்ஸட் டெப்பாசிட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என வழக்குப் போட்டேன். அதற்குப் பதிலளித்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெ.வின் டெபாசிட் என்பது உறைந்துபோன அக்கவுண்ட். அதை மீண்டும் திறக்க முடியாது என்று சொல்லியது. ஜெ.வின் அக்கவுண்ட்கள் உறைந்துபோனவை அல்ல. அதில் உள்ள பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்தது ஜெ.வின் நகைகளை ஏலம்விட்டு வழக்கை கர்நாடகத்தில் நடத்தியதற்கு ஆன செலவான ஐந்துகோடி ரூபாயை வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அந்த நகலை தமிழக அரசிடம் ஒப்படைத்து அதை ஏலம் விடச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டது. மூன்றாவதாக, வழக்குடன் தொடர்புடைய சொத்துக்களை அரசு கையகப்படுத்தும் விசயம் வந்தது. கோர்ட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் ஜெ.வின் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்தார்கள். அதில் யார் இந்த சொத்துக்களின் உண்மையான உரிமையாளர் என்பதை சசிகலா தரப்பு கேள்வி எழுப்பியிருந்தது. அதனால் அந்த சொத்துக்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது'' ’என்றார்.
இதுபற்றி குன்ஹாவின் உதவியாளர் பிச்சைமுத்து கூறுகையில், "வழக்கு நடந்து முடிந்து சசி தண்டனை பெற்றபின், திரும்ப இத்தனை ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்பான சொத்துக்களில் யார் உரிமையாளர் என குழப்பத்தை சசிகலா ஏற்படுத்த முயற்சிக்கிறார். யார் உரிமையாளர் என்று ஆராயாமலா குன்ஹா தீர்ப்பளித்திருப்பார். அவருடைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்றிருக்கும். சசிகலாவுக்கு அரசியலுக்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஊழல் செய்து சம்பாதித்தார் என தெளிவாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கின் சொத்துக்களை விற்க முயல்கிறார்''’ என்றார். ஆனால் எங்களுக்கு ஒரு விசயம் தெளிவாகப் புரிகிறது. கொஞ்சம் அசந்தால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையே விற்றுவிடு வார் சசிகலா''’என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.