னக்கு பாதுகாப்பு கோரியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். அவருக்கு "குறி' வைத்து இன்னும் இருவருக்கும் காயங்களை உருவாக்கியதோடு, தானும் கடுமையான காயங்களோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் காஞ்சிபுரம் புல்லட் பரிமளம்.

காஞ்சிபுரம், சென்னை அ.தி.மு.க.வினருக்கு நன்கு அறிமுகமானவர் புல்லட் பரிமளம். அடாவடிச் செயல்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்பவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், காஞ்சிபுரம் ந.செ. பொறுப்பிலிருந்து ஜெ. இவரை நீக்கினார். நீக்கப்பட்டதைக் கண்டித்து, போயஸ் கார்டன் முன்னால் நின்று கோஷமிட்டபடி தன் கையில் பிளேடால் கீறிக்கொண்டு விரலையே வெட்டிக்கொண்டதாக விளம்பரம் தேடியவர் இவர்.

கடந்த எம்.பி. தேர்தலில், வாக்குகள் எண்ணுவதற்கு முதல்நாளே ""நாற்பது தொகுதிகளிலும் வெற்றி. காஞ்சி அ.தி.மு.க. வேட்பாளர் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி'' என்று காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் பெரிய பேனர் வைத்து சர்ச்சையை கிளப்பியவர். ஜெ. கைதானபோது, தன் வீட்டருகே, மனைவி உமாவுடன் சேர்ந்து பேருந்தைக் கொளுத்தி, மனைவியுடன் சிறை சென்றவர்.

""அ.ம.மு.க.வை ஆரம்பித்த டி.டி.வி. தினகரன் இந்தப் புல்லட் பரிமளத்தை காஞ்சிபுரம் ந.செ. ஆக்கினார். டாக்டர் வெங்கடேசனின் ஆதரவாளரான புல்லட் பரிமளம், தனது காரில் வெங்கடேசனின் படத்தை ஒட்டி வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தினகரனுக்கு வேண்டிய ஸ்ரீபெரும்புதூர் எக்ஸ் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாளுக்கு எதிரியாக மாறினார். அதனால புல்லட் பரிமளத்திடம் இருந்த ந.செ. பதவியைப் பிடுங்கி எக்ஸ் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாளின் ஆதரவாளரான ஹோட்டல் மனோகரனுக்கு கொடுத்துவிட்டார் டி.டி.வி. அந்தக் கோபத்தில்தான் டி.டி.வி.க்கு பாடம் புகட்டப் போகிறேன் என்று சென்னைக்குப் போனார் புல்லட் பரிமளம்'' என்கிறார்கள் காஞ்சி அ.ம.மு.க.வினர்.

Advertisment

காஞ்சியிலிருந்து புறப்பட்ட புல்லட் பரிமளம், இரண்டு, ஐந்து லிட்டர் கேன்களில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு, கொடும்பாவிக்காக டி.டி.வி. பேனர் துணி ஒன்றையும், வைக்கோலையும் காருக்குள் வைத்துக்கொண்டு, சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டிற்கு வந்தார்.

வாசலில் காரை நிறுத்தினார். ஓட்டுநர் சுப்பையா உதவியுடன் கொடும்பாவி செய்தார். ஒரு கேனைத் திறந்து, கையால், கொடும்பாவி மீது பெட்ரோலைத் தெளித்தார். அதைப் பார்த்த டி.டி.வி.யின் ஓட்டுநர் பாண்டித்துரையும் டி.டி.வி.யின் போட்டோகிராபர் டார்வினும் ""ஏய்... என்ன செய்றே...'' என்றபடி வீட்டிலிருந்து ஓடி வந்தனர்.

""தினகரனுக்காக இதுவரை 50 லட்சம் செலவு செஞ்சிருக்கேன். ந.செ. பதவியை புடுங்கி என் எதிரிக்கு கொடுக்கிறார்'' சொல்லியபடி திறந்திருந்த பெட்ரோல் கேனை காலடியில் வைத்துவிட்டு, தீக்குச்சியை கிழித்தார்... அடுத்த நொடி, கொடும்பாவி எரிந்து, காலடியில் இருந்த கேன் எரிந்து வெடித்து, காருக்குள் இருந்த கேனில் பற்றி வெடித்து புல்லட் பரிமளமும் எரிந்தார். பரிமளத்திடம் நாட்டு வெடிகுண்டு இருந்ததால் இந்த விபரீதம்!

Advertisment

-அரவிந்த்