பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலாக, "தி வயர்' இணைய பத்திரிகையின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன், மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் மீது அஸாம் மாநில போலீசார், தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததோடு, வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இருவரும் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரை தொடர்பாக, அஸாம் மாநில போலீசாரால் தி வயர் இணையதள ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது, பி.என்.எஸ். 152 பிரிவின்கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த 152வது பிரிவானது, இந்திய இறையாண்மை, ஒற்றுமையை சீர்குலைப் பதற்கான தண்டனை வழங்க வகைசெய்வதாகும். அவ்வழக்கில், கடந்த 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம், சித்தார்த் வரதராஜன் மீதான நடவடிக்கைக்கு எதிராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உடனே அதிரடியாக அஸாம் மாநில போலீசாரால், சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் மீது மற்றொரு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்துவது, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான செய்திகளை பரப்புவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சம்மன் அனுப்பியுள்ள குவகாத்தி காவல்துறை ஆய்வாளருக்கு சித்தார்த் வரதராஜன் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், என்ன குற்றச்செயலுக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடவில்லை என்றும், எஃப்.ஐ.ஆர். நகல் இணைக்கப்படவில்லை என்றும், எஃப்.ஐ.ஆர். எண் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஏற்கெனவே பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர். தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது குறித்தும் தெரிவித்துள்ளனர். எனவே முறைப்படி எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டு, குற்றச்செயல் குறித்த விவரங்களை தெரிவிக்கும்பட்சத்தில் இதுகுறித்து பதிலளிக்கத் தயாராக இருப்பதாக சித்தார்த் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
தி வயர் இணையதளம், பொதுமக்களின் பக்கம் நின்று, ஒன்றிய அரசின் தவறுகளை ஆதாரங்களோடு தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதால், அப்பத்திரிகையை மிரட்டும் விதமாகவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேள்விகள் கேட்பதே தேசத்துரோகம் என்றால் ஜனநாயகம் நிலைத்து நிற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் இச்செயலுக்கு, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, சென்னை பிரஸ் கிளப் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.