(7) விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சக்திகள்!
நாட்டு மக்களை மத அடிப்படை யில் கூறுபோட்டு, அதிகாரத்தை அளவில் லாமல் சுவைக்கலாம் என்ற குதர்க்கமான எண்ணத்தோடுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிறப்பெடுத்தது. பெரும்பான்மை மக்களான இந்துக்களைத் தூண்டித்தான் அதனை சாதிக்க முடியும். எனவே ‘இந்து ராஷ்ட்டிரா’ ஏற்படுத்துவோம் என்ற கவர்ச்சியான முழக்கத்தை உருவாக்கினார்கள்.
உண்மையில் அவர்கள் ஏற்படுத்த விரும்பும் ஆட்சி மத அடிப்படையிலான ஒடுக்குமுறையையும், சாதிப் பிரிவினைகளையும், மொழி அடிப்படையிலான மேலாதிக்கத்தையும் ஒருங்கே கொண்ட ஒரு அமைப்புதான். இந்த கட்டுரையில், இஸ்லாம், கிறித்தவம் போன்ற சிறுபான்மை மதங்களைப் பற்றிய அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
கோல்வால்கர் எழுதிய ‘நாம் அல்லது வரையறுக்கப்பட்ட "நமது தேசம்'’என்ற நூலில் பிற மதத்தினரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார், “(அவர்கள்) இந்து மதத்தை மதித்திடவும் பயபக்தியுடன் போற்றித் துதித்திடவும் வேண்டும். இந்து தேசத்தை வானளாவப் புகழ்வதைத் தவிர, வேறு எந்த சிந்தனையையும் ஏற்காதிருக்க வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களை எல்லாம் துறந்துவிட்டு, இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும் அல்லது எதையும் கோராமல், எவ்விதமான சிறப்பு உரிமைகளையும் உரிமை பாராட்டாமல், முன்னுரி மைச் சலுகைகள் எதையும் கோராமல், ஒரு பிரஜைக்குரிய உரிமைகளைக் கூடக் கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்படிந்து இருந்துகொண்டு, நாட்டில் தங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால் நாட்டில் இருந்து வெளியேறலாம்.''
அதே நூலின் இன்னொரு இடத்தில் “(அவர்கள் அன்னிய மதத்தை கைவிடாவிட்டல்) இந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைகளாக மட்டுமே இருக்கலாம். எந்த உரிமையையும் அவர்கள் எதிர்பார்க்கக்கூடாது. இந்திய குடிமகனுக்கான உரிமையைக்கூட எதிர்பார்க்கக் கூடாது” என்று குறிப்பிடுகிறார் கோல்வால்கர்.
சாவர்க்கர், 1937ம் ஆண்டு அகமதாபாத் இந்துமகாசபை கூட்டத்தில் உரையாற்றியபோது கீழ்க்கண்டவாறு கூறினார்:
“இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங் கள் அருகருகே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. (இந்த இரண்டு தேசங்களும்) ஒன்றாகக் கூடி வாழ்கின்ற நாடாக இந்தியா உள்ளது என்றோ அல்லது இரண்டு தேசங்களையும் ஒன்றுபடுத்திவிட முடியும் என் றோ சில சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். அது மிகப்பெரிய தவறு ஆகும்.”
இங்கே தேசம் என்று குறிப்பிடுவது இந்துக் களையும், முஸ்லிம்களையுமே. நாட்டை மத அடிப் படையில் பிளவுபடுத்தி நோக்குவதில் சாவர்க்கரும், ஜின்னாவும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். “ஒரு தேசமா அல்லது இரண்டு தேசங்களா என்பது குறித்து ஜின்னாவும் சாவர்க்கரும் ஒரே கருத்தில் முழுமையாக ஒத்துப்போகிறார்கள். இருவரும் ஏற்கக்கூடிய, அழுத்தம்திருத்தமாக வெளிப்படுத்தும் கருத்து என்னவென்றால் இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று இந்து தேசம்; மற்றொன்று முஸ்லீம் தேசம்”
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் நடந்துகொண்டி ருந்த காலத்திலேயே இது போன்ற கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். குருமார்கள் முன்னெடுத்ததற்கு ஒரு காரணம், ஆதிக்க சக்திகளுடைய ‘பிரித்தாளும் அர சியலுக்கு’ உதவி செய்வது. இன்னொரு காரணம் ‘வெறுப்பு’ அரசியலால் கிடைக்கும் நீண்டகால ‘பலன்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியலுக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. உண்மையில், விடுதலைப் போராட்ட கலத்தில் மத வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை கோலோச்சியது.
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘முதல் சுதந்திரப்போருக்கு’ முன்பாகவே 1800-01 காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நடைபெற்ற போர்களும், 1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் கலகமும் முக்கியமானவை. மேற்சொன்ன அனைத்து போர்களிலும் இந்து – முஸ்லிம் ஒன்றுபட்டே களமிறங்கினர்.
1801ம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள், மருது சகோதரர்களில் ஒருவரான, சின்ன மருது தனது புகழ் பெற்ற ‘திருச்சி அறைகூவலை’ வெளியிடுகிறார். இது திருச்சியின் நவாப் அரண்மனை வாயிலிலும் ஸ்ரீரங்கம் கோவில் வாயிலிலும் பகிரங்கமாக ஒட்டப்பட்டிருந்தது.
“பல்வேறு சாதிகள், தேசங்கள், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் ஆகிய அனைவருக்கும் இந்த அறிவிப்பு தரப் படுகிறது” என்று தொடங்கும் அந்த அறிவிப்பில், அனைவரும் ஆங்கிலேயர்களை விரட்டிட முன் வரவேண்டும் என வேண்டுகோள் இடம்பெற்றிருந் தது. ஆங்கிலேயர்கள் விரட்டப்பட்ட பிறகு அவர்கள் பறித்த ஆட்சியை முகம்மது அலி நவாப் உட்பட அனைவருக்கும் திருப்பித் தரப்படும் எனவும் இந்த அறிக்கை வாக்குறுதி வழங்குகிறது.
மருது சகோதரர்களுடைய போராட்டம் தோல்வியுற்ற பின் அவர்களோடு சேர்த்து நாடுகடத்தப்பட்டவர்களில் ஷேக் உசேன்’ போன்ற முஸ்லிம்களும் இருந்தார்கள்.
1806ம் ஆண்டு வேலூர் சிறையில் நடந்த கலகத்தில் அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த திப்புவின் மகன்களும் பங்கேற்றனர். கலகம் வெற்றி பெற்றால் மைசூருக்கு திப்புவின் மகனை அரசனாக்குவது எனவும் ஹைதராபாத் நிசாமுக்கு மீண்டும் அரசாட்சியை தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்துத்துவ அரசியலை ஏற்பதற்கு முன்பாக, சாவர்க்கர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். அப்போது அவர் இந்திய சுதந்திர போராட்டம் என்ற நூலை யும் எழுதி னார். அந்த நூலை மங்கல் பாண்டே, ராணி லட்சுமி பாய், நானா சாகேப் ஆகியோருடன் சேர்த்து மவுல்வி அகமது ஷா, அசிமுல்லா கான், டாட்டியா டோபே, பகதூர் ஷா ஜாபர், பேகம் ஜீனத் மகால் ஆகியோருக்கு அர்ப்பணம் செய்திருந்தார். இந்து முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க நானா சாகேப் மற்றும் அசிமுல்லாகான் நடைமுறைப்படுத்திய கொள்கைகளை சாவர்க்கர் பெரிதும் பாராட்டுகிறார். அதே போல் ஆக்ரா மற்றும் கான்பூரில் போர் நடத்திய அகமது ஷாவையும் ஜெகதீஷ்பூரில் போர் நடத்திய குன்வார் சிங்கையும் பாராட்டுகிறார்.
“அனைத்து சாதி மற்றும் மதங்களைச் சார்ந்த மவுலிகள், பண்டிட்டுகள், ஜமீன்தார்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைவரும் விடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர்’என சாவர்க்கர் தனது நூலில் விவரிக்கிறார். இப்போது, இந்து – முஸ்லிம் மோதலின் அடை யாளமாக’ மாற்றப்பட் டுள்ள ‘அயோத்தியில், முதல் சுதந்திரப்போர் காலத்தில் மத ஒற்றுமை மேலோங்கியிருந்தது. பிரிட்டிஷ் படைக்கு எதிராக நடந்த போரில் ஹனுமான் கோவில் நிர்வாகி பாபா ராம்சரண் தாக் என்பவரும் மவுலானா அமீர் அலி என்பவரும் இந்தியப் படைக்கு தலைமை தாங்கினர். பல போர்களில் வெற்றியும் பெற்றனர். எனினும் பின்னர் அவர்கள் இருவரும் சிறைப் பிடிக்கப்பட்டனர். குபீர் டீலா எனும் இடத்தில் இருவரும் ஒரே மரத்தில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
அதேபோல இன்னொரு படைப் பிரிவுக்கு அச்சல்கான் என்ற முஸ்லிமும் ஷம்பு பிரசாத் சுக்லா எனும் இந்துவும் தலைமை தாங்கினர். இவர்களின் திறமையான போரால் பிரிட்டிஷ் படை பெரிய இழப்புகளை சந்தித்தது. இதனால் கோபமுற்ற பிரிட்டிஷார் இவர்களை சிறைப்பிடித்து பொதுவெளியில் சித்திரவதை செய்து சிரச்சேதம் செய்தனர்.
முதல் சுதந்திரப் போராட்டத்தின் வர லாற்றை பதிவு செய்த அதே சாவர்க்கர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய மன்னிப்புப் கடிதங்களும் பிரபலமானவை. முன்னாள் முதல்வர் வாஜ்பாயும், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத் தில் பங்கேற்றதாக கைதாகி பின் "நான் வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றேன், போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை' என்று எழுதிக் கொடுத்து விடுதலையானார். விடுதலைப் போராட்ட காலம் முழுவதுமே ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்த அரசியல் காட்டிக் கொடுப்பதாகவே இருந்தது.
இந்த அரசியல்தான், நாட்டின் பிரிவினைக் கும், பிரிவினையின் போது நடந்த கலவரங்களுக் கும் பின்னணியாக அமைந்தது. இதே அரசியல் தான் விடுதலை இந்தியாவின் அரசியல் அமைப் பாக ‘மனுநீதி’ இருக்க வேண்டும் என்றது. அதன் படி பெண்களையும், சூத்திரர்களையும் கீழ் நிலைக்கு தாழ்த்திட விரும்பியது. மதச்சார்பற்ற அரசியலை யும், மத நல்லிணக்கத்தையும் மூர்க்கமாக எதிர்த்த துடன், அண்ணல் காந்தியின் படுகொலை வரை யிலான பல பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அடித் தளமாக அமைந்தது.
மேலே குறிப்பிட்ட அடிப்படையில், மதவழி சிறுபான்மையினருடைய குடியுரிமையை இரண் டாம்தரமாக தாழ்த்தக் கூடிய முயற்சிகளை பா.ஜ.க. தொடர்ந்து மேற் கொள்கிறது. ‘இந்திய நாட்டின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக, மத நம்பிக்கையை புகுத்தக்கூடிய முயற்சியை ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின்’ மூலமாக தொடங்கினார்கள். அதனோடு சேர்த்து முன்னெடுக்கப்படும் ‘மக்கள் தொகை பதிவேடு’ மற்றும் ‘குடிமக்கள் பதிவேடு’ ஆகிய நடவடிக்கைகள், மத அடிப்படையில் மக்களைத் தாழ்த்தும் முயற்சியின் தொடக்கமாக அமைந்துள்ளன.
குடியுரிமை பறிக்கப்பட்ட மக்களை முகாம்களில் அடைத்துவைக்கும் வேலைகளையும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தொடங்கியது. இப்போது பல மாநிலங்களில் தடுப்பு காவல் முகாம்கள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு, விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த சக்திகள் தற்போது விடுதலை இந்தியாவையும், அதன் ஜனநாயக அடித்தளத்தை யுமே அசைத்துப் பார்க்க முயற்சிக்கிறார்கள்.
(தொடரும்)