ந்திய சுதந்திரத் தின் பவள விழா வை கொண்டாடும் நாம் அரசியல் சட்ட விழுமியங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை கவலையோடு பரிசீலிக்க வேண்டும். அரசியல் சட்டம் உருவானபோது நிலவிய சூழலைப் பரிசீலிக்க வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சி செய்த ஆங்கிலேயர்கள், இந்தியா -பாகிஸ்தான் என நாட்டை இரு கூறுகளாகப் பிரித்தாலும், தொடர்ந்து இந்திய தேசத்தை அடிமைப்படுத்தி ஆள முடியாது என்ற முடிவுக்கு வந்து இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.

ff

Advertisment

சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தை உருவாக்கிட 389 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணயசபை அமைக்கப் பட்டது. வரைவுக்குழுத் தலைவராக அண்ணல் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.

1947-க்கு முன்பும், 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகும், நாட்டின் பல பகுதிகளில் மதக்கலவரம் வெடித்தது.

மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி, கராச்சி, லாகூர் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற கலவரங்கள், வன்கொலைச் சம்பவங்களில், ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரைத் தாக்கிப் படுகொலை செய்யும் அவலங்கள் நடந்தன; குழந்தைகள், மகளிர், முதியோர் என்ற வேறுபாடில்லாமல் விரட்டி விரட்டித் தாக்கும் கொடூரங்கள் அரங்கேறின. தேசத்தின் பல பகுதிகளில் ரத்த ஆறுகள் ஓடின.

இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு சுதந்திர நாடுகள் உருவானாலும், பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இசுலாமியர்கள் பாகிஸ்தானுக்கும் இடம்பெயரும் கொடுமை நீடித்தது. 1946 இறுதியில் நவகாளியில் (இன்றைய வங்கதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு மாவட்டமாக இருக்கிறது) நிகழ்ந்த கலவரத்தில் 5000-க்கும் மேற்பட்ட இந்துக்களும், இசுலாமியர்களும் கொல்லப்பட்டார்கள். வரலாறு கண்டி ராத ரத்தக்கறை படிந்த அப்பகுதிக்குச் சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்று அண்ணல் காந்திஜி முடிவெடுத் தார். 1947, ஆகஸ்ட் 10 அன்று கல்கத்தா நகரை அடைந்தார். அங்கு இசுலாமிய தலைவர்கள் அண்ணல் காந்திஜியை சந்தித்து, நவகாளியைவிட கல்கத்தாவில் மோசமான சூழல் நிலவுகிறது. மதக் கலவரத்தால் கல்கத்தா நகர வீதிகள் மக்க ளின் கண்ணீராலும், செந்நீராலும் நனைந்து கிடக்கிறது. படுகொலைகளையும் கொடூர சம்பவங்களையும் எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. நான் ஒரு உண்மையான இந்து மட்டுமல்ல, அதே அளவுக்கு உண்மையான முஸ்லீமும்கூட என்று நீங்கள்தானே கூறி இருக்கிறீர்கள் என்று சொல்லி கல்கத்தாவிலே தங்குமாறு காந்திஜிக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அவரும் நவகாளிக்குச் செல்வதை ஒத்திவைத்துவிட்டு கல்கத்தாவில் தங்கிவிட்டார்.

ஆகஸ்ட் 14-ல் நள்ளிரவில் 12 மணிக்கு டெல்லி செங்கோட்டையில் வெள்ளையர்களின் யூனியன் ஜாக்கொடியை இறக்கிவிட்டு, மூவண்ண தேசியக் கொடியை பண்டித நேரு ஏற்றினார். டில்லி மாநகரமே கொண்டாட்ட நகரமாகத் திகழ்ந்தது. தேசமே மகிழ்ச்சியிலும் எழுச்சியிலும் திளைத்தது. ஆனால், டில்லி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அண்ணல் காந்திஜி அங்கு செல்லவில்லை. அன்று, அவர் கல்கத்தாவில் இருந்தார். மக்கள் கொல்லப்படுவது கண்டு வேதனை யுற்ற அவர், சுதந்திர தினச் செய்தி தருமாறு கேட்ட தற்கு ‘"ஒன்றுமில்லை'’ என விரக்தியாகக் கூறினார். ஆகஸ்ட் 15-ஆம் தேதி காந்திஜி தனது பிரார்த் தனைக்குச் செல்லும்போது அவர் பேசுவதைக் கேட் பதற்காக இந்துக்களும், இசுலாமியர்களும் இரண்டறக் கலந்து 30 ஆயிரம் பேர் கூடியிருந்தார் கள். அவருக்கு சொல்லப்பட்ட தகவல் மூலம், இந்துக்கள் மசூதிகளுக்கும், முஸ்லீம்கள் கோவில் களுக்கும் நட்புணர்வுடன் சென்றிருந்தனர் என்பதை அறிந்திருந்த காந்திஜி மகிழ்ச்சி அடைந்தார்.

gr

Advertisment

ஆனாலும், நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளி லும் வகுப்புக் கலவரங்கள் ஓயவில்லை. தன்னுடைய பிரார்த்தனையின்போதும், பொது நிகழ்ச்சிகளின் போதும் மனிதரை மனிதர் வெட்டிக்கொல்லும் கோரச் சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டு கோள் விடுத்து சலித்துப் போன அண்ணல் காந்திஜி, செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று கல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கப் போவதாக அறிவித்தார். கல்கத்தா நகரமும் வங்க மாநிலமும் பதட்டமானது.

அன்றைய மேற்குவங்க கவர்னர் சி.ராஜ கோபாலாச்சாரியார் அண்ணல் காந்திஜியை சந்தித்து உரையாடினார்.

ராஜாஜி: உங்கள் நடவடிக்கையை நான் அங்கீகரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டீர்கள் அல்லவா? குண்டர்களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதமிருப்பதா?

காந்திஜி: குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்களால் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்.

ராஜாஜி: ஒரு வேளை நீங்கள் இறந்து விட்டால் காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்.

காந்திஜி: நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்கமாட்டேன். என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.

79 வயதை எட்டும் நிலையில் இருந்த அண்ணல் காந்திஜி பல அரசியல் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை மறுத்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார்.

கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஜோதிபாசுவும் பூபேஷ் குப்தாவும் காந்திஜியை சந்தித்து அமைதியை நிலைநாட்ட நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார்கள். "இளைஞர் களே! இந்த நகரத்தில் வீதிவீதியாக மதநல்லிணக்கப் பேரணியை நடத்துங்கள்'' என்றார் காந்திஜி. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சார்பில் நகரங்களில் மக்கள் ஒற்றுமைப் பேரணி யை அந்தக் கம்யூனிஸ்ட் இளந்தலைவர்கள் நடத்தினார்கள்.

இந்து, இசுலாம், சீக்கீய மதங்களின் தலைவர்கள் வகுப்பு நல்லிணக்கத்தைக் காப்பதை உறுதிசெய்து அண்ணல் காந்திஜியை சந்தித்து கூட்டறிக்கையை அளித்தார்கள். யாரும் எதிர்பாரா வகையில் கல்கத்தா நகருக்கு அமைதி திரும்பியது. காந்திஜியிடம் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டுகோள் விடுத் தனர். அண்ணல் காந்திஜி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு நடந்த மதக்கலவரத் தைச் சுட்டிக்காட்டி தங்களுடைய நாட்டை ஆளுவதற்கு இந்திய மக்கள் சிறிதளவும் தகுதி படைத்தவர்கள் அல்ல என்று பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சர்ச்சில் கூறினார். பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாடும் வழிகாட்டலும் விலக்கிக்கொள்ளப்படும் போது இந்தியர்கள் தங்களை மிகவும் மோசமான குழப்பத்தில் ஆழ்த்திக்கொள்வார்கள் என்றும் பிரிவினைக் குரல்களும் முரண்பாடும் தலைதூக்கும் என சர்ச்சில் கூறினார். இது பற்றி அண்ணல் காந்தியிடம் கேட்டபோது, "200 ஆண்டுகாலம் எங்களை ஆண்ட நீங்கள்தான் இதற்கு பொறுப்பு'' என்று பதிலளித்தார். அதே நேரத்தில் இப்படிப்பட்ட கருத்துகளை சர்ச்சில் கூறுவதற்கு இடமளித்து விட்டீர்களே என்று இந்திய மக்களையும் காந்திஜி குறைகூறினார். இவ்வாறு எந்தவித சம ரசத்திற்கும் இடமில்லாமல் மதக் கலவரத்தை தடுத்து நிறுத்திட நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றார் காந்தி. இவரை உயிரோடு விட்டால் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிட முடி யாது எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ் கும்பல் தீட்டிய சதித்திட்டத் தின் அடிப்படையில் 1948, ஜனவரி 30-ஆம் நாளன்று கோட்சே அண்ணல் காந்திஜியை சுட்டுக்கொன்றார்.

பதறிப்போன பண்டித நேருவும் உள்துறை அமைச்சர் பட்டேலும் மவுண்ட்பேட்டனும் காந்திஜி படுகொலையான இடத்துக்குச் சென்றார்கள். கோட்சே பிடிபட்ட பிறகு, பண்டித நேரு, காந்திஜியைக் கொன்றது ஒரு முஸ்லீம் அல்ல; ஒரு இந்துதான் என்றும்; பதட்டம் கூடாது மோதல் கூடாது; மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஒரு வேனில் விளம்பரம் செய்தார். இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழல் நாடு முழுவதும் நிலவிய பின்னணியில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை அரசியல் சட்ட வரைவு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தது. பல மதங்களைச் சார்ந்த பல எண்ணங்களைக் கொண்ட வேறு வேறு கலாச்சாரங்களுடைய இந்திய தேசம் மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா, மதச்சார்புள்ள நாடாக இருக்க வேண்டுமா என ஆழமாக விவாதித்தது. அண்டை நாடான பாகிஸ்தான், இசுலாம் தான் எங்களது அரசு மதம் என அறிவித்தபோது கூட அத்தகைய அணுகுமுறையை பண்டித நேருவும் அரசியல் நிர்ணய சபையும் அண்ணல் அம்பேத்கரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

(தொடரும்)