(6) மதத்தின் கட்டளையும், மக்களாட்சியும்!

டவுள் நம்பிக்கையும், மத வழிபாடும், ஆன்மீக செயல்பாடுகளும் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் தனிநபர் உரிமைகள். தனிப் பட்ட வாழ்க்கையில் ஒருவர் மத நம்பிக்கைகளோடு ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடு வதற்கான உரிமைகள் நிச்சயம் மறுக்கப்படக் கூடாது.

Advertisment

ஆனால், மதம் ஒரு நாட்டின் ஆட்சியை யும், நிர்வாகத்தையும் வழிநடத்துவதையும், கட்டுப்படுத்துவதையும் ஏற்க முடியாது. மதத்தின்அடிப்படையில் ஆட்சி நிர்வாகம் நடந்தால் எத்தகைய ஒடுக்குமுறை நிகழும் என்பதற்கு வாழும் சாட்சியாகத் திகழ்பவர் மலாலா. மத அடிப்படை வாதிகளான தலிபான் களின் ஒடுக்கு முறைகள் குறித்து எழுதியதற்காக சிறுமி என்றும் பாராமல் தலி பான்கள் இவரைத் தலையில் சுட்டார்கள். மிகப்பெரும் மருத்துவப் போராட்டத்திற்குப் பின்பு உயிர்பிழைத்த மலாலா இன்றைக்கு உலமெங்கிலும் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகிறார்.

gr

மதத்தினை அரசியலில் கலப்பதன் மூலம் லாபமடைந்துவரும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தங்களுடைய வழிகாட்டியாக கொண்டிருப் பது கோல்வால்கரின் கோட்பாடுகளைத்தான். அவர் எழுதிய 'நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்' என்ற நூல், பா.ஜ.க. உருவாக்க விரும்பும் அரசின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று விளக்குகிறது. அவர் மதச்சார்பற்ற அரசு என்ற கொள்கையை அடிப்படையிலேயே மறுக்கிறார்.

இந்து மதத்திற்கு "கணிசமான அளவிற்கு அரசியலிலும் இடமிருக்க வேண்டும். உண்மையில் மதத்துடன் ஒப்பிட்டால் அரசியலே ஒரு சிறிய காரணியாக மாறிவிடுகிறது. எனவே அது மதத்தின் கட்டளைக்கிணங்க செயல்படக்கூடிய ஒன்றாகவும் பின்பற்றப்பட வேண்டும்'' என்று அவர் எழுதியுள்ள நூலில் விளக்குகிறார். இதுதான் அவர்களுடைய விருப்பம். இந்தப் பாதையில்தான் அவர்கள் பயணிக் கிறார்கள். இதைத்தான் கோல்வால்கர் தன்னுடைய விருப்பமாக முன்வைத்துள்ளார்.

கலீலியோ கலிலி

இத்தாலிய அறிஞரான கலீலியோ கலிலி நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். சூரியக் குடும்பத்தின் மையமாக சூரியனே இருக்கிறது, பூமி உருண்டை வடிவிலானது, அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றிவருகிறது என்ற அறிவியல் உண்மையை கண்டறிந்து சொன்னதற்காக அவர் மீது விசாரணை ஏவப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதிக்காலம் வரைக்கும் அவருக்கு சிறைவாசம் தொடர்ந்தது.

ஆராய்ச்சி மேற்கொண்டு கண்டறியப்பட்ட உண்மையை வெளியே சொன்னது, ’மத நம்பிக்கைக்கு எதிரானது’ என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த இன்னொரு அறிவியலாளர் ஜியார்டானோ புரூனோ. நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்ற அறிவியலாளரின் கொள்கையான பிரபஞ்சத்தின் மாதிரியினை அறிய முற்பட்ட அவருடைய ஆய்வு பிற விஞ்ஞானிகளுக்குத் தூண்டுதலாக இருந்தது. ஆனால் புருனோவின் கருத்துக்கள் பாரம்பரிய கிறித்தவ கருத்துக்களுக்கு எதிராக இருந்தது என்று சொல்லி மதவாதிகள் அவரை எதிர்த்தார்கள்.

பிரபஞ்சம் பற்றிய அவருடைய கருத்துக்களுக்காக அவரை சிறையில் அடைத்ததுடன் 1600 ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி உயிருடன் எரிக்கப்பட்டார்.

Advertisment

gr

பரிணாம வளர்ச்சி

இந்த வரிசையில் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் சார்லஸ் டார்வின் மிக முக்கியமானவர். உயிர்களின் தோற்றம் பற்றி பல்வேறு கற்பனையான கருத்துக்களை மதம் கொண்டிருக்கிறது. அவைகள் பெரும்பாலும் உயிரினம் அனைத்தும் கடவுளுடைய சிந்தனையில் இருந்து ஒரு சில நாட்களில் சிருஷ்டிக்கப்பட்டவை என்பதாகத்தான் இருக்கின்றன. ஆனால், டார்வின் அந்தக் கட்டுக்கதைகளை தனது கண்டுபிடிப்பின் மூலம் அதிரச் செய்தார்.

உயிரினங்களின் தோற்றத்தினை 'பரிணாம வளர்ச்சி' கொள்கையின்வழியாக விளக்கியதுடன், மனிதனும் கூட குரங்கு இனத்தின் மூதாதையர்களுடைய பரிணாம வளர்ச்சியின் விளை வாகவே தோன்றினர் என்றார். அவர் எழுதிய, ’உயிரினங்களின் தோற்றம்’ மற்றும் ’மனிதனின் மூதாதையர்கள்’ ஆகிய நூல்கள் உலகம் முழுவதும் விவாதத்தை கிளப்பின. இது மத பீடங்களை அதிரச் செய்தது.

இந்த நூல்களும் கூட சுமார் 18 ஆண்டுகள் தாமதமாக வந்ததற்கு சமூகத்தில் நிலவிய மத அடிப்படைவாதச் சூழல் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இப்போது மேற்கு நாடுகள் தங்கள் போக்குகளை மாற்றிக்கொண்டார்கள். மதத்தையும் அரசையும் கலப்பது தவறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றங்களும், ஜனநாயக முறைமைகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

பின்னோக்கிச்செல்லும் பா.ஜ.க.

மேற்சொன்ன அறிவியல் உண்மைகள் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் மீது ஆராய்ச்சிகள் வளர்ச்சி யடைந்திருக்கும் தற்போதைய காலத்திலும் மதவாதிகள் அதே அடிப்படைவாதத்தை பேசுவது தொடர்கிறது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை மறுத்து, ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சத்தியபால் சிங் சமீபத்தில் பேசினார். அமைச்சருக்கே இப்படி யான பிற்போக்குப் பார்வை இருப்பது ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனென்றால் அறிவியலுக்கு விரோதமான போதனைகளைத் தான், பாடத்திட்டமாக மாற்ற வேண்டுமென பாஜக விரும்பு கிறது.

அறிவுக்கு விரோதமான கூட்டணியில் எல்லா மத அடிப்படைவாதிகளும் இணைந்து கொள்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடியும் விதிவிலக்கு அல்ல. அறிவியல் அறிஞர்களுடைய மாநாட்டிலேயே புராணக் கதைகளை மேற்கோள்காட்டிப் பேசிய அவர், யானையின் தலையுடன் இருக்கும் "விநாயகர்' கதையும், "கர்ணனின்' பிறப்பும் மரபணு ஆராய்ச்சி, முகமாற்று அறுவை சிகிச்சை ஆகியவை இருந்ததற்கான சான்றுகள் என்று அடித்துவிட்டார்.

gr

Advertisment

“மகாபாரதத் தில் வரும் கர்ண னைப் பற்றி நாம் அனைவரும் படித்திருப் போம். அதுபற்றி கொஞ்சம் அதிகமாக சிந்தித்தால் கர்ணன் தனது தாயின் கருவில் இருந்து பிறக்கவில்லை. அப்போதே மரபணு அறிவியல் இருந்தது. அதனால்தான் கர்ணன் தாயின் கருவில் இருந்து பிறக்கவில்லை” என்றார் அவர். இதனை அவர் வாய்தவறிப் பேசவில்லை. பா.ஜ.க.வின் ‘அறிவுஜீவிகளில்’ ஒருவரான பத்ரா இதுபோன்ற போலி அறிவியலை முன்வைத்து ஒரு புத்தகத்தையே எழுதியிருக்கிறார். அந்த புத்தகம் புராணக் கதைகளில் எழுதப்பட்ட புனைவுகளை வரலாறாகவும், அறிவியல் உண்மைகளாகவும் திரித்து முன்வைக்கிறது.

இந்தியாவின் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை இப்போது இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசக் கூடிய பிரதமர் புராணங்களை உதாரணமாக்கி பேசியிருப்பது தீர்வை நோக்கிய ஒன்றா?

சமூகத்தில் மதம் நிலவுவதற்கான காரணிகள் இருக்கின்றன. மக்கள் தங்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் பல்வேறு நம்பிக்கைகளை, பல்வேறு நிலைகளில் பின்பற்றுகிறார்கள். மத நம்பிக்கையற்றவர்களும் உள்ளார்கள். எனவே, அரசாங்கம் அனைவருக்கும் பொதுவாக மதச்சார்பற்று இருந்தாலே ஜனநாயகம் மேம்படும்.

தனியொரு மதம் மட்டும் அரசாங்கத்திற்கு கட்டளைகள் பிறப்பிக்குமானால், அங்கே முதலில் பலியாவது ஜனநாயகமும், இணக்க வாழ்வும்தான். பா.ஜ.க./ஆர்.எஸ்.எஸ். அந்தப் பாதை யில் தான் பயணிக்கிறது. அதில் சிக்கி மக்கள் வாழ்க்கை நாசமாகிறது.

இப்போது 5 மாநில தேர்தல் நடந்துவருகிறது. உத்தரப் பிரதேசத்தில், வாக்குகளை மத அடிப்படையில் பிரிக்கவேண்டும் என்று தீவிர முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. குஜராத் மாநில பா.ஜ.க., முஸ்லிம்களை கூண்டோடு தூக்கில் ஏற்றும் விதமான புகைப்படத்தை இணையதளத்தில் பதிவு செய்து வெறுப்பை பரப்பியது. கர்நாடகத்தில் மத வெறுப்பை வெளிப்படுத்தும் ‘ஹிஜாப் எதிர்ப்பு’ உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் கிளப்பப்பட்டுள்ளன. உ.பி., தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிளை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருக்கிறார்.

இப்படி எல்லா விதத்திலும் தேர்தல் பிரச்சாரம், மதங்களுக்கு இடையிலான போட்டியைப் போல் மாற்றப்படுகிறது. கோயில் கட்டுவதும் இன்ன பிற மத நடவடிக்கைகளும் அரசின் சாதனைகளாக முன்வைக்கப் படுகின்றன.

அதே உ.பி. மாநிலத்தில் ஏழை மக்களுடைய அன்றாடத் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. உணவுக்கும், குடிநீருக்கும், வேலைக்கும், வீட்டு வசதிக்குமான அவர்களுடைய தேவைகளைப் பற்றி பா.ஜ.க. பேசுவதில்லை. இப்படி ஜனநாயக அரசியலில் இருந்து மக்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைப்பதற்கே மதவாத அரசியல் வழிவகுக்கிறது.

(தொடரும்)