மக்கள் ஒற்றுமையைக் காக்க, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க, மத மோதலைத் தடுத்து நிறுத்த தன்னுடைய உயிரையே பணயம் வைத்தவர் அண்ணல் காந்தியடிகள். இத்தகைய மன உறுதியை எவ்வாறு பெற்றார். எவ்விதத்தில் அது உருவானது?
தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதும், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்ற போதும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பிறகும், பலரைச் சந்திக்கும் வாய்ப்பை அவர் உருவாக்கிக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் அங்கமாக உருவெடுத்து சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியபோது, நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களை சந்தித்ததோடு, அறிஞர்களை, அறிவுஜீவிகளை, எழுத்தாளர்க ளை, இதுபோன்ற பலரையும் சந்தித்தார். இத்தகைய சந்திப்பில், தன்னுடைய கருத்துகளை மற்றவர்களிடம் பரிமாறிக்கொண்டதோடு, அவர்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டார்.
அவர்களில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், தமிழகத்தைச் சார்ந்த சுப்பிரமணிய பாரதியார், காரைக்குடி அருகே சிராவயலில் காந்தி ஆசிரமம் உருவாக்கிய ப.ஜீவானந்தம், தந்தை பெரியார், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சார்லி சாப்ளின், அண்ணல் அம்பேத்கர் என ஏராளமானவர்களைச் சொல்ல முடியும். லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற போது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து அங்கு மாணவர்களோடும் உரையாடினார். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயுடன் கடிதத்தொடர்பு வைத்திருந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தமிழர்களின் வழியாக திருக்குறளை அறிந்த கொண்ட காந்தி, அடுத்த ஒரு பிறப்பு இருக்குமானால் தமிழனாகப் பிறந்து தமிழில் திருக்குறளை நேரடியாக படிக்க வேண்டும் என்று கூறியுள் ளார். அந்த அளவுக்கு திருக்குறள் அவரை ஈர்த்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தென் ஆப்பிரிக்காவில் "இந்தியன் ஒப்பீனியன்' என்ற இதழை நடத்துகிறபோது பலரை சந்திக்கக்கூடிய, உரையாடக்கூடிய வாய்ப்பு அவருக் குக் கிடைத்தது. ஒரு நாள் அண்ணல் காந்தியடிகள் நேர்தாணலுக்குப் புறப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் அவருடைய நண்பர் போலக் என்பவர் காந்தியை சந்தித்து "ஜொகெனஸ் பர்க்கிலிருந்து டர்பன் நகருக்கு ரயிலில் போக 24 மணிநேரம் ஆகும். எனவே, "நீங்கள் ரயிலில் செல்லும் போது இந்த நூலைப் படியுங்கள்' எனக் "கடையனுக்கும் கதிமோட்சம்' எனும் ரஸ்கின் எழுதிய நூலைக் கொடுத்தார். அண்ணல் காந்தி அந்த நூலைப் படித்தது பற்றிய அனுபவத்தை, தனது சுயசரிதையில் ‘"ஒரு நூலின் மந்திர சக்தி'’என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்.
"அந்தப் புத்தகத்தை கையில் எடுத்த பிறகு படித்து முடித்துதான் கீழே வைத்தேன். அப்புத்தகம் என்னை ஆட்கொண்டு விட்டது. டர்பன் நகருக்கு சென்ற பிறகு அன்று இரவு என்னால் உறங்க முடியவில்லை. புத்தகம் கூறும் கருத்தின் அடிப்படையில் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டேன்'' என தனது சுயசரிதையில் அண்ணல் காந்திஜி பதிவு செய்திருக்கிறார்.
"பள்ளிக் கல்லூரி நாட்களில் பாடப்புத்தகங்களை தவிர வேறு நூல்களை நான் வாசித்ததில்லை. தற்போது ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கதிமோட்சம்' என்ற நூல் என் வாழ்க்கையின் பாதையையே மாற்றிவிட்டது'' என்று பதிவு செய்த காந்திஜி பிற்காலத்தில் அந்நூலை குஜராத் மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியுள்ளது. முடிதிருத்தும் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புதான் வழக்கறிஞர் வேலைக்கும் உண்டு. ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கைகள்”- என அந்த நூலில் இடம்பெற்றிருந்த கருத்துகள் தன்னை ஈர்த்ததாகச் சொல்லும் காந்தி, பொழுதுபுலர்ந்ததும் எழுந்து இந்தக் கொள்கையை நடைமுறையில் கொண்டு வரத் தயாரானேன் என்கிறார். சிந்தனையை வளப்படுத்தி மிகப் பெரும் திருப்புமுனையை ஒரு சிறந்த நூலால் ஏற்படுத்த முடியும் என்பதற்கு காந்தியின் வாழ்வில் நடந்த இந்தச் சம்பவம் உதாரணமாகத் திகழ்கிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் காந்திஜி, பட்டேல் உள்ளிட்டவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த தாதாபாய் நவ்ரோஜி (காங்கிரஸ் கட்சியை துவக்கியவர்களில் ஒருவர், இங்கிலாந்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) எழுதிய Poverty and Un#British Rule in India என்ற நூல் சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எந்த அளவிற்கு சுரண்டி கொள்ளையடித்தது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது. இந்நூல், சுதந்திரப் போராட்ட முதல் தலைமுறை தலைவர் களுக்கு பைபிள் போல் அமைந்தது இந்நூலில் “பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் சுரண்டிச் சென்ற தொகை 3,000,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள், இதை 1901க்கு முந்தைய 30 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டியோடு கணக்கிட்டால் இந்தியாவிற்கு பிரிட்டன் செலுத்த வேண்டிய தொகை 723,900,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் ஆக இருக்கும்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது’.
காந்திஜி மட்டுமல்ல, வரலாற்றில் புரட்சியாளர்கள், மகத்தான தலைவர்கள் உருவாவதற்கு நூல்கள் தூண்டுகோலாக அடித்தளமாக இருந்திருக்கின்றன. மாவீரன் பகத்சிங் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?'’என்ற பிரசுரத்தை எழுதினார். சிறையில் இருந்து வெளியே கடத்தப்பட்டு பல மொழிகளில் அப்பிரசுரம் வெளியாகி உள்ளது. இப்பிரசுரத்தை ப.ஜீவானந்தம் தமிழாக்கம் செய்து தந்தை பெரியார் வெளியிட்டார். இதற்காக இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
இச்சிறிய நூலில் தன்னுடைய சிந்தனையை பகத்சிங் தெளித்திருக்கிறார். தான் கடந்து வந்த பாதையை பரிசீலித்து எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக அவர் படித்த நூல்கள் பற்றி அவரே கூறுகிறார். “பொது உடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகசக்கரவர்த்தியான ஒருவரின் ஆதிக்க இருள் அடர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்மவீரர்களான லெனின், ட்டிராட்ஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூல்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே’. தான் செய்த இத்தகைய வாசிப்பு, ஆய்வு “என்னுடைய புரட்சிகரமான வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை”என்று கூறுகிறார். வாசிப்புக்கு அளவில்லா முக்கியத்துவத்தை பகத்சிங் அளித்திருக்கிறார்.
பல நாடுகளில் நூல்கள் புரட்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் ஊக்குவிக்கும் சக்தியாக இருந்திருக்கின்றன. அமெரிக்காவில் தாமஸ் பெயின் எழுதிய காமன்சென்ஸ் (ஈர்ம்ம்ங்ய்ள்ங்ய்ள்ங்- 1775) என்ற நூல் மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை உருவாக்கியிருக்கிறது.
அதே நாட்டில் ஹேரிட்பீச்சர் எழுதிய அங்கிள் டாம்ஸ் கேபின் (மய்ஸ்ரீப்ங் பர்ம்ள் ஈஹக்ஷண்ய்-1852) என்ற நூல் அந்நாட்டில் இனவெறிக்கு எதிராகக் கருப்பின மக்களை எழுச்சியுற செய்தது. அந்நூல் ஆசிரியர், அம்மையார் ஹேரிட்பீச்சர் ஒரு வெள்ளையர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் மாக்சிம் கார்க்கி எழுதிய "தாய்'’ நாவல் பலரை கம்யூனிஸ்ட்டுகளாக்கியது என லெனின் குறிப்பிட்டார்.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே
உச்சிமீது வான்இடிந்து வீழுகின்றபோதிலும்”
என பாரதி பாடிய பாடல் தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் மேடைகள்தோறும் பாடப்பட்டது. விடுதலைக்காக பாடிய இந்த பாடலுக்காகத்தான் அண்ணல் காந்திஜி சென்னை வந்தபோது பாரதியாரை தேடிச் சென்று நேரில் பார்த்தார்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி... என வள்ளுவர் பாடியிருக்கிறார்.
கற்றதுகைம் மண்ணளவு என்றார் ஔவையார்
"once you stop learning you start dying’ (வாசிப்பை நிறுத்தினால் வாழ்க்கையின் முடிவு துவங்கிவிடும்) என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாசிப்பு பற்றி கூறியிருக்கிறார்.
வள்ளுவரில் துவங்கி காந்திஜி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்டு பலர் வாசிப்பு சுவாசம் போன்றது என வலியுறுத்தியிருக்கிறார்கள். வாசிப்பு பற்றி குறிப்பிடுகிறபோது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவைப் பற்றி கூறாமல் இக்கட்டுரை நிறைவுபெறாது.
கடந்த 16.02.2022 அன்று துவங்கி மார்ச் 6 வரையில் சென்னையில் மாநில அரசின் உதவியோடு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. இதில் சுமார் 800 கடைகள் பங்கேற்கின்றன. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இப்புத்தகக் கண்காட்சி மக்கள் மத்தியில் வாசிப்பை ஊக்குவிப்பதோடு, அறிவார்ந்த சமூகம் உருவாகிட அடித்தளமாக அமைந்திடும்.
(தொடரும்)