(20) அரசியலிலிருந்து மதம் விலகி நிற்க வேண்டும்!
ஆட்சியைப் பிடிப்பதற்கும், தக்க வைத்துக்கொள்வதற்கும் பா.ஜ.க. மதத்தை குறுக்கு வழியில் பயன்படுத்துகிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்துத்துவா என்ற தங்களது நீண்ட கால அரசியல் திட்டத்தை நடைமுறைப்படுத்திட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளும், பா.ஜ.க.வும் மத வெறியூட்டி, மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்துகின்றன. இதன் விளைவாக பல மாநிலங்களில் கணிசமான மக்கள், மத ரீதியில் வாக்களிக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் மதச்சார் பின்மைக்காக, மக்கள் ஒற்றுமைக்காக குரலெழுப்புவோரின் மதம் குறித்த கண்ணோட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
‘மதம் என்பது அதில் நம்பிக்கை உள்ளவரின் தனிப்பட்ட விஷயம் ஆகும். இந்தியக் குடிமக்கள் எவரும், இந்து மதத்தையோ, இசுலாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ, சீக்கிய மதத்தையோ அல்லது எந்த ஒரு மதத்தையும் அவர்கள் விருப்பப்படி பின்பற்ற லாம். மேலும், ஒருவர் விரும்புகிற மதத்தை நம்புவதற்கும், பின்பற்று வதற்குமான உரிமையை, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. இதில் தலையிடவோ, இடையூறைச் செய்யவோ, அரசுக்கு சட்டப்படி அதி காரம் இல்லை. அதைப் போலவே மதம் சாராமல், கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஒரு தனி மனிதரோ, குழுவோ இருக்க முழு உரிமை உண்டு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கிய இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் குறிப்பிட் டுள்ளார். மேற்கண்ட கூற்றுக்கு மாறாக, பா.ஜ.க. எப்படி மதரீதியில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது என்பதை பரிசீலிப்போம்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு, வறுமை, வேலையின்மை, பட்டினி போன்ற கொடுமை களுக்கு ஆளாகும் மக்களில் கணிசமான பகுதியினர் இவையெல்லாம் அவன் செயல் எனக் கருதுகிறார் கள். ஒருவரது வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அவை ஆண்டவன் இட்ட கட்டளை என நம்புகிறார்கள். கடவுள் மீது பாரத்தை சுமத்திவிட்டு தங்களது துயரத்தை மறந்திட, கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை அவர்களுக்கு ஆறுதலாக அமைகிறது.
இதைத்தான் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னதாக, மாமேதை காரல்மார்க்ஸ் துல்லியமாக சுட்டிக்காட்டினார். ‘மதம் (மதநம்பிக்கை) ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகில் இதயம். ஊக்கமற்ற நிலையில் ஊக்க மளிப்பதும் ஆகும்’ என்றார்.
இதன் பொருள், துன்பத்தில் உழலும் மக்கள் ஓர் தற்காலிக ஆறுதல் உணர்வுக்காக மதத்தைப் பற்றிக்கொள்கிறார்கள்; அதனால் மதங்கள் மீது ஆழமான நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால் மதத் தின் மீதான உணர்வுப்பூர்வமான இந்த நம்பிக்கை யை, வகுப்புவாதிகள் உசுப்பிவிட்டு மதவெறியாக மாற்றுகிறார்கள். இதனால்தான் மேற்கண்ட தனது கூற்றில், “மதம் மக்களுக்கு அபின் போன்றது’என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். இத்தகைய கருத்தைச் சொன்னால் மத நம்பிக்கையை மார்க்சிஸ்ட்கள் அவமதிப்பதாகச் சொல்கிறார்கள்.
கடவுள்கள் தங்களுடைய நல்வாழ்விற்கு அருள்பாலிப்பார்கள் என மனிதர்கள் நம்பு கிறார்கள்; தங்களுடைய கஷ்டங்களைப் போக்குவார்கள் என்றும் நம்புகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத சமூகமே இல்லை என்று சொல்லுமளவுக்கு உலகின் எல்லா பகுதிகளிலும், மக்கள் தங்களது சமூகம் உருவாக்கிய கடவுள்களை வழிபட்டு வருகிறார்கள். புதிய புதிய கடவுள்களை உருவாக்கி வழிபடுகிறார்கள். தங்களுடைய மூதாதையர்களையோ அல்லது சமூகத் தலைவர்களையோ அல்லது இயற்கையில் அமைந்த சூரியன், சந்திரன், வாயு, நெருப்பு போன்ற சக்திகளையோ கடவுள்களாக்கி வழிபடும் மரபு, காலப்போக்கில் சடங்குகள், கோவில், நிர்வாகம் என்றாகி மத நிறுவனமானது.
இன்றைக்கும் மத நிறுவனங்கள் ஆட்சியிலும், நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் இருக்கின்றன. இப்படி, கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் மனிதர்களின் சிந்தனைகளால் உரு வாக்கப்பட்ட விஷயங்கள் என்றாலும் மனித சமூகத்தில் அவை செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது.
ஐரோப்பாவில் தொழிற்புரட்சி தொடங்கிய பிறகு உலகெங்கும் பல மாற்றங்கள் நடந்தன. பல்வேறு நாடுகளின் ஆட்சி முறைகளிலும், அரசிய லிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஜனநாயகக் குடியரசுகள் தோன்றின. இந்தச் சமூகத்தில் நிலவி வரும் உற்பத்தி முறைகள், உடைமை முறைகள், பல்வேறு வர்க்கங்கள் குறித்தெல்லாம் மார்க்சும், ஏங்கல்சும் ஆராய்ச்சிகள் செய்து மார்க்சியத் தத்துவத்தை உருவாக்கினார்கள். இதன் விளைவாக தனியுடைமையை ஒழித்து பொதுவுடைமைச் சமூகத்தை நிறுவும் சோஷலிச அமைப்பு முறை சோவியத் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டது. சோஷலிச அமைப்பு முறை, உலகில் ஜனநாயகக் குடியரசுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதலை மேம்படுத்தின. மார்க்சியத்தின் அடிப்படையில் தனியுடைமையை ஒழித்து ரஷ்யா வில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான ஆட்சியை ஏற்படுத்திய மாமேதை லெனின், காலனிய ஆதிக்கத்திலிருந்து உலக நாடுகள் விடுதலை பெறுவது குறித்து ஆழமாகப் பேசி இருக்கிறார்.
புதிதாகத் தோன்றும் நாடுகளில் ஜனநாய கத்தை நிறுவுவதற்கு என்னென்ன அடிப்படை களை நிறுவ வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. அரசைப் பொறுத்தமட்டில் மதம் தனிநபர் விவ காரமாக இருக்கவேண்டும். அரசு கவனம் செலுத்த வேண்டிய விஷயமாகவே மதம் இருக்கக்கூடாது. மத அமைப்புகள் அரசு நிர்வாகத்துடன் எந்த விதத் திலும் தொடர்பு வைத்திருக்கக்கூடாது. ஒவ்வொரு வரும் தனக்குப் பிடித்தமான மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருக்க வேண்டும். மதங்கள் அரசுகளின் நிர்வாகத்திலோ, ஆட்சியிலோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது. அரசின் நிதி, மானியம் எவ்வகையிலும் ஆலயங்களுக்கும், மத அமைப்பு களுக்கும் வழங்கப்படவே கூடாது. மத அமைப்புகள் ஒத்த நம்பிக்கை கொண்ட மனிதர் களின் அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும்’என்றார் லெனின்.
மதவெறியர்கள், மத அமைப்புகள் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி அதிகார ஆதாயம் தேடும் போக்கு உலகெங்கிலும் இருந்துள்ளது. மக்களைச் சுரண்டுவதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும் மதங் களைப் பயன்படுத்திய வரலாறும் உலகெங்கிலும் உள்ளது. இந்த கசப்பான அனுபவம் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கும் முற்போக்குப் பாதையில் பல படிப்பினைகளை வழங்கியுள்ளது. அதனால்தான் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற காலத்தில், புதிதாக அரசியல் அமைப்புச் சட் டத்தை உருவாக்கும் இந்தியா போன்ற நாட்டில் எப்படிப்பட்ட ஜனநாயகக் குடியரசை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோது மதச் சார்பின்மை ஒரு அடிப்படையாக வகுக்கப்பட்டது.
இந்திய நாடு சுதந்திர நாடாக மாறிய காலத் தில் நடந்த மதக்கலவரங்கள் - குறிப்பாக ஆர்.எஸ். எஸ் -கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப் பட்ட பின்னணியில் மதம் பற்றி அரசியல் சட்ட நிர்ணய சபையிலும், வெளியிலும் விவாதங்கள் நடைபெற்றன. இந்திய நாடு எதிர்கொண்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் அரசு மதத்தில் இருந்து விலகி நிற்க வேண்டும் எனத் தெளிவாக முடிவெடுத்தார்கள். மனுநீதி அடிப்படையில்தான் அர சியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியதை அரசியல் நிர்ணய சபை நிராகரித்தது. இந்திய அரசியலமைப்புச் சட் டம் மதச்சார்பின்மையை முக்கிய அடிப்படையா கக் கொண்டு உருவாக்கப்பட்டது. அரசியல் சாசனம் மதச்சார்பற்ற தன்மை கொண்டிருந்தாலும் வெளிப்படையாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மதச்சார்பற்ற குடியரசு என்ற திருத்தம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால் அடுத்தடுத்து, அத்வானி தலைமை யில் நடந்த ரத யாத்திரை, பாபர் மசூதியை சங்பரிவார அமைப்புகள் இடித்துத் தகர்த்தது, இப்பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதிகள், இந்திய அரசியல் சட்டம் உள்ளடக்கத்தில் மதச்சார்பின்மையைக் கொண்டது என விளக்கினார்கள். விதிவிலக்காக உத்தரப்பிர தேசம் உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளை பாபர் மசூதி இடிப்பு சம்பவப் பின்னணியில் கலைத்தது சரியென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதத்தில் இருந்து விலகி இருப்பதற்குப் பதிலாக மதவெறியர்களின் கருவியாக மாறியதால் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இது மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்கான ஒரு தீர்ப்பாக அமைந்தது. ஆனால் தற்போது நீதித்துறையிலும் கூட மத ரீதியான அரசியலின் தாக்கம் தென்படத் துவங்கி யுள்ளது. பல தீர்ப்புகளில் அது வெளிப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் கூட இது எதிரொலித்தது. அரசு நிர்வாகத்தில் மத அரசியலைக் கலப்பது விபரீதமான விளைவு களையே உருவாக்கும் என்பது உலக அனுபவம்.
ரத யாத்திரையிலும், பாபர் மசூதி இடிப் பிலும் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள். அந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாகராக இருந்தவர்கள் தான் இன்றைய பிரதமரும், உள்துறை அமைச்சரும். ஆட்சியதிகாரத்தில் இல்லாதபோதே பாபர் மசூதியை இடித்தார்கள். தற்போது ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் ஒன்றிய அரசையே இயக்கு கிறார்கள்.
பா.ஜ.க. தனது அமைப்புச் சட்டத்தில், ’சோசலிசம், மதர்ச் சார் பின்மை மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீது கட்சி முழு நம்பிக்கையும், பற்றும் கொண்டிருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது. அதைப் போலவே பா.ஜ.க.வில் உறுப்பினராகச் சேர்பவர்கள், ’மத அடிப்படையில் அல்லாமல், மதச்சார்பற்ற நாடு, தேசம் என்ற கருத்தில் உடன்படுகிறேன்’ என்ற உறுதியைத் தரவேண்டும் என்பதும் விதியாகும். ஆனால் அதே பா.ஜ.க. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை முற் றாக சீர்குலைக்கும் திட்டங்களை முன்னெடுக்கிறது. அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்பதற்கு அதன் அமைப்புச்சட்டமே சாட்சி.
அரசியல் சட்டத்தை சமர்ப்பித்து அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய நிறைவுரையில், ’நல்ல அரசியல் சட்டமாக இருந்தாலும், அதைச் செயல்படுத்துபவர்கள் கெட்டவர்களாக இருந்தால், அரசியல் சட்டமும் கெட்டுப்போகும்’ என்றார். அதைத்தான் இன்றைக்கு நாம் கண்டு வருகிறோம். மதச் சார்பின்மை எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும், அதைப் பாதுகாப்பது குறித்தும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)