(18) சூறையாடப்படும் மக்களின் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பே, நம் நாடு, கல்வி, சுகாதாரத்தில் பின்தங்கியிருந்தது, வேலையின்மை மற்றும் வறுமை அதிகரித்துவந்தது. மக்கள் நல்வாழ்வை எடுத்துக்காட்டும் குறியீடுகளில் பின்தங்கியுள்ள பல நாடுகளை விடவும் இந்தியா பின்தங்கியிருந்தது. கொரோனா பாதிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியது.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் பரிசோதனை செய்து, முறையான சிகிச்சையை உறுதிப்படுத்துவதில் அரசு தவறிய தால் - குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமான மரணங்கள் நிகழ்ந்தன. கேரளாவைத் தவிர மற்ற பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப் பாடு, சிகிச்சைக்கான படுக்கைகள் கிடைக்காத நெருக்கடிகள் ஏற்பட்டதைப் பார்த்தோம்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், கொரோனா வால் இறந்தவர்களின் உடல்கள் கங்கை நதியில் வீசப்பட்டதையும், கங்கை ஆற்றங்கரை மணலில் அரைகுறையாக உடல்கள் குவிந்துகிடந்த அவலத்தையும் கண்டோம்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட மரணங் களின் எண்ணிக்கையை அரசுகள் குறைத்தே வெளி யிட்டன. அரசுகள் சொன்ன எண்ணிக்கைக்கும் உண்மையில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக் கைக்கும் இடையிலான வேறுபாட்டை ஊடகங்கள் வெளிப்படுத்தின. பா.ஜ.க.வின் ‘முன்மாதிரி’ மாநிலமான குஜராத்தினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், 71 நாட்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 871 இறப்புச் சான்றிதழ்கள் (மார்ச் 1, 2021 - மே 10, 2021) வழங்கப்பட்டதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தன. 2020-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் நடந்த மரணங்களை விடவும் இது 65 ஆயிரத்து 781 அதிகமாகும். உ.பி., மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மரணங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியது.
மேலும், கொரோனா காலத்தில் ஒன்றரை லட்சம் குழந்தைகள் தாயையோ, தந்தையையோ இழந்துள்ளார்கள்; 10,600 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளார்கள்.
ஆனால், கொரோனாவில் இருந்து மீள் வதற்கு அவசியமாக இருந்த தடுப்பூசி உற்பத்தி யிலும் கூட பொதுத்துறைகள் ஒதுக்கப்பட்டன. அரசு நிறுவனங்களின் ஆராய்ச்சியால் கிடைத்த கண்டுபிடிப்புகள் தனியார் நிறுவனத்தின் லாபத் திற்கு தாரைவார்க்கப்பட்டன. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது சுகாதாரத்துறையால் தான் ஓரளவுக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதுகாக்க முடிந்தது. ஆனால், இத்தனைக்குப் பிறகும் மோடி அரசாங்கம், கொரோனா சிறப்புத் திட்டங்களிலோ, ஆண்டு பட்ஜெட்டிலோ பொதுச் சுகாதாரத்திற்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் பா.ஜ.க. அரசின் கண்களுக்கு கார்ப்பரேட் நலனைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள் ஆகும்.
வறுமைப் பட்டிய-ல் முன்னேறும் இந்தியா
பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் வறுமை அதிகரித்தது. வறுமையால் பாதிக்கப் பட்ட உலகின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் 2020-ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 94-ஆவது இடத்தில் இருந்தது. 2021-ஆம் ஆண்டில் 101-ஆவது இடத்திற்கு வந்துவிட்டது. இந்த நாடுகளில் ஊட்டச் சத்துக்குறைவான குழந்தைகள் அதிகம் உள்ள நாடு இந்தியா. 2014-க்கும் 2021-க்கும் இடைப்பட்ட காலத்தில் மதிய உணவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ஒன்றிய அரசு 31 சதவிகிதம் குறைத்துவிட்டது. 2018-21க்குள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி மூலம் ஒன்றிய அரசு ஈட்டிய தொகை 8 லட்சம் கோடியாக இருந்தும், நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை மோடி அரசாங்கம் தொடர்ந்து வெட்டிக் கொண்டே வருகிறது. ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஆயோக் அளித்த விவரங்களின்படி கொரோனாவுக்குப் பிறகு பல மாநிலங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பீகார் 51.91%, ஜார்கண்ட் 42.16%, உத்தரப்பிரதேசம் 37.79%, மத்தியப் பிரதேசம் 36.65%, மேகாலயா, அஸ்ஸாம் 36.67%.
தமிழகத்தில் கொரோனாவுக்கு முன்பு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழன்றவர்கள் எண்ணிக்கை 67.4 லட்சமாக இருந்தது. இது கொரோனாவுக்குப் பிறகு 1.13 கோடியாக அதிகரித்துவிட்டது.
அதிகரித்து வரும் வேலையின்மை
2021 நவம்பர் மாதத்தில் மட்டும் மாத வருமானம் ஈட்டியவர்களில் 68 லட்சம் பேர் வேலை இழந்தார்கள். இந்திய நகர்ப்புறங்களில் வேலை செய்யத் தகுதியுள்ள இளைஞர்களில் 23 சதவிகிதத்தினருக்கு வேலை கிடைக்கவில்லை. 2013-ஆம் ஆண்டில் வேலையில் உள்ள மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை 44 கோடி. இந்த எண்ணிக்கை 2021-ல் 38 கோடியாகக் குறைந்தது.
கொரோனா காலத்தில் பல லட்சம் சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பல கோடி முறைசாரா தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.
இதுபோன்ற சூழலை சமாளிக்கவும் எதிர் கொள்ளவும் முன்வைக்கப்பட்ட மாற்றுத்திட்டங் களை அரசு கண்டுகொள்ளவில்லை. சாமானியர் களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.7500 வழங்கவேண் டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தி, சிறு/குறுந்தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர மானியம் வழங்கவேண்டும் என்பன போன்ற நியாயமான கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன.
2020-21ல் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்குத் தேவை யான நிதி ஒரு லட்சத்து 10,000 கோடி ஆகும். கொரோனா பாதிப்புக்குப் பிறகு வேலை வாய்ப்புகளை மக்கள் இழந்த நிலையில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தினை நம்பி இருப்பவர்கள் எண்ணிக்கை கூடியது. இருப்பினும் இந்தத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசாங்கம் உயர்த்தாதது மட்டுமின்றி குறைத்துவிட்டது.
தொழிலாளர் விரோத சட்டங்கள்
கொரோனா ஊரடங்கு சூழலை பயன்படுத்தி தொழிலாளர் சட்டங்களை திருத்தும் நாசகாரப் பணியை மோடி அரசு மேற்கொண்டது. 8 மணி நேரத்திற்கும் மேலாக பணியாளர்களை வேலை வாங்கிக்கொள்ளலாம் என பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் அவசரச் சட்டங்களை பிறப்பித்தன. கார்ப்பரேட்கள் மேன்மேலும் லாபம் பார்ப்பதற்காக 44 தொழிலாளர் நலச்சட்டங்களில் அடங்கியுள்ள தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு அம்சங்களை நீக்கி வெறும் நாலே சட்டத் தொகுப்புகளாக மாற்றிவிட்டது. தொழிலாளர்கள் சங்கம் அமைத்துப் போராடும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தனை விசுவாசமாக கார்ப்பரேட் சேவகம் செய்வ தாலேயே பா.ஜ.க.விற்கு பெருமுதலாளிகளின் ஆதரவு தடை யில்லாமல் கிடைக்கிறது. கள்ளக்கூட்டு முதலாளிகளுக்கு சொத் துக்கள் குவிகின்றன. அரசு சொத்துக்களும் தாரைவார்க்கப்படுகின் றன. ஊழல் முறைகேடுகளை சட்டப்படியானதாக ஆக்கியிருப்ப தால் பா.ஜ.க.விற்கு நிதி குவிகிறது. ஜனநாயக உரிமைகள் பறிக் கப்பட்டு, அரசியல் சட்ட நிறுவனங்களின் சுயேட்சைத்தன்மை யைப் பறித்து, எதேச்சதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது. இந்தப் பாதையில்தான் தாங்கள் விரும்பும் "மனுநீதி' அரசாங்கத்தை ஏற்படுத்திட பா.ஜ.க.வினர் விரும்புகிறார்கள். இந்த அபாயங்களை எப்படி எதிர்கொள்வது, எப்படி முறியடிப்பது என்பது தேசப்பற்றுமிக்க, மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவர் முன்னாலும் எழக்கூடிய கேள்வியாக உள்ளது.
மக்களுடைய வாழ்வுரிமையின் மீதும், வாழ்க்கையின் மீதும் மோடி அரசு தொடுக்கக்கூடிய தாக்குதலினால், பாதிக்கப்பட்ட மக்கள், அதிருப்தியுற்று போராடுகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தியப் போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்த்தது. அந்தப் போராட்டத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் விவசாயிகளும் கலந்துகொண்டார்கள். போராட் டத்தின்முன் மோடி அரசாங்கம் மண்டியிட்டது.
இருப்பினும், தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் வெற்றி எப்படி சாத்தியமாகிறது? அவர்கள் மக்களிடையே வெறுப்புப் பிரச் சாரத்தை தொடர்ந்து நடத்துகிறார் கள். மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் இந்துத்துவா அடையாளத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.
கல்வி, சுகாதாரம், வேலை யின்மை, வறுமை போன்ற எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாத யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தை மாநிலங்களின் வளர்ச்சிப் பட்டியலில் கடைசியில் வைத்திருக்கும் யோகி ஆதித்யநாத், இப்போது மீண்டும் முதல்வராகி விட்டார்.
காலுக்கு செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா
என் தோழனே
பசையற்றுப் போனோமடா
என 1935-ல் கோவை ஸ்டேன்ஸ் மில்லில் வேலை நிறுத் தம் நடைபெற்றபோது, காலை ஆறு மணிக்கு தொழிலாளர் கூட்டம் நடப்பதற்கு முன், 5 மணிக்கு இப்பாடலை இயற்றி கூட்டத்தில் தோழர் ப.ஜீவானந்தம் பாடினார். இதுபோலத்தான் இன்றைக்கு மக்களுடைய வாழ்நிலை இருக்கிறது.
மக்களுடைய வாழ்க்கையை யும், வாழ்வாதாரத்தையும் பாது காப்பதற்காகவும், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றக்கூடிய பாசிசத் தன்மைகொண்ட ஆர்.எஸ். எஸ். -பா.ஜ.க. ஆகியவற்றின் நடவடிக்கைகளை முறியடிக்கவும் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாக விவாதிப் போம்.
(தொடரும்)