(17) மதவெறியின் கொட்டமும், கார்ப்பரேட் திட்டமும்!

த்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசிற்கும், அதானி, அம்பானி உள்ளிட்ட பெருமுதலாளி குழுமங்களுக்கும் இடையில் அதீத நெருக்கமான உறவு இருப்பது வெளிப்படை. மகாத்மா மண்ணில் மதவெறி என்ற தலைப்பிலான இந்த கட்டுரைத் தொடரில், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்ன சம்பந்தம் என சிலர் கேட்கலாம். விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பா.ஜ.க.வின் எதேச்சதிகார, ஒற்றையாட்சி முறையை சாதகமாக்கிக் கொண்டு 130 கோடி மக்கள் வாழும் (உலகில் சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட) பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை கைக்கொள்ளும் முயற்சியை கார்ப்பரேட் முதலாளிகள் மேற்கொள்கிறார்கள். இந்தியாவின் அரசமைப்பு, கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. எனவே இதில் ஒன்றிய அரசின் அதிகாரங்கள், மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் இருவருக்கும் பொதுவான அதிகாரப் பட்டியல் உள்ளது. இவ்வாறு நமது கூட்டாட்சி அமைப்பு முறையில் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

Advertisment

gr

இந்த அமைப்பினை மாற்றியமைக்க மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் முயல்கிறது. அவர்களின் விருப்பம் ஒற்றையாட்சி முறையே (மய்ண்ற்ஹழ்ஹ் நற்ஹற்ங்). ஒற்றை ஆட்சியை நோக்கி மறைமுகமாகப் பயணிக்கும் பா.ஜ.க. அரசு, வரி விதிப்பு முறை, நிலம், இயற்கை வளங்கள் மீதான கட்டுப்பாடு, கல்வி, விவசாயம், வர்த்தகம் எனப் பல்வேறு துறைகளில் மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வர முயல்கிறது. இந்த ஏற்பாடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமான ஒன்றாகும்.

அதே போல, மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள், நவீன தாராளமயத்தை வேகப்படுத்துவதாக அமைந்துள்ளன. இதுவும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுடைய லாப வேட்டைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. அதற்காக மோடி அரசாங்கத்திற்கு ஏகோபித்த ஆதரவையும், நிதியுதவிகளையும் அள்ளி வழங்குகிறார்கள். வெறுப்பு அரசியல் அடிப்படையிலான பா.ஜ.க.வின் பிரச்சாரங்களுக்கு உதவி செய்கிறார்கள். இதன் காரணமாகவே நாம் இப்போதுள்ள நிலையை வகுப்புவாத-கார்ப்பரேட் கூட்டு எனக் கூறுகிறோம்.

நவ தாராளமய பொருளாதாரக் கொள்கை

தொழில், விவ சாயம், சேவைத் துறை (வங்கி, காப்பீடு, தகவல் தொடர்பு) இவை மூன்றையும் உள்ளடக்கியதுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி). கொரோனா பெருந் தொற்றுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2019-20 மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 71,28,238 கோடி. இதுவே 2021-22ல் 68,11,471 கோடியாகக் குறைந்தது. 4.4% சரிவு. இது வெறும் புள்ளி விவரம் அல்ல. இதனால் வேலை இழப்பு, வருமான இழப்பு, மக்களின் வாங்கும் சக்தி சரிவு போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த நெருக்கடியை சரிசெய்ய வேண்டும் என்றால், ஒன்றிய அரசு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திட, வருமானத் தை, பணப்புழக்கத்தை அதிகரித்திட வேண்டும். ஆனால், ஒன்றிய மோடி அரசு நேர்மாறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

வேலையின்மை, வறுமை அதிகரித்த போதிலும், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல, அரசின் செலவுகளை அதிகரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை. தனியார் முதலீட்டாளர்கள், கார்ப்பரேட் குழு மங்களை ஊக்கப்படுத்துவதையும், திருப்திப் படுத்துவதையுமே தனது கொள்கையாகக் கொண்டு அமலாக்கி வருகிறது. வேலை யின்மை, வறுமை அதிகரிக்கும் வேளையில், மோடி அரசின் கடந்த 7 ஆண்டு கால ஆட்சியில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிடம் இருந்து பெற்ற 10.72 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன்களாக அறிவித்துவிட்டது. திவாலான மற்றும் நொடித்துப் போன நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததை சட்டப் பூர்வமாக அங்கீகரித்துவிட்டது.

அரசுக்கு மிகவும் நெருக்கமாக, கூட்டுக்களவாணி கார்ப்பரேட் குழுமங்கள் வங்கிகளில் இருந்து கடன்கள் பெற்று திருப்பிச் செலுத்தாத பெருமளவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அந்தத் தொகைகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து வங்கிகளுக்கு மூலதனமாக செலுத்தப்படுகிறது.

மேலும், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங் களையே அடிமாட்டு விலைக்கு விற்பது, போன்ற நாசகரமான வேலைகளை ஒன்றிய அரசு செய்கிறது.

எண்ணெய், எரிவாயு உற்பத்தி, ஆயுள் காப்பீட்டுத்துறை (எல்.ஐ.சி), மின் உற்பத்தி, நிலக்கரிச் சுரங்கம், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ரயில்வே போன்ற இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய இந்த நிறுவனங்களை பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு ஒன்றிய அரசாங்கம் விற்று வருகிறது.

2021-22 மட்டும் பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம், ரூபாய் 1,75,000 கோடி திரட்டுவது என மத்திய அரசு அறிவித்தது.

பணமாக்கல் நடவடிக்கை

"இந்தியா விற்பனைக்கு'’ என்று சொல்வதன் மறுபெயர்தான் பணமாக்கல் என்ற அரசின் கொள்கை. இந்த பணமாக்கல் திட்டத்தின் மூலம், ரயில்வே இருப்புப் பாதைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் வழிகள் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்று ரூபாய் 6 லட்சம் கோடி திரட்டுவது என மோடி அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை நாள்தோறும் அதிகரித்து வரும் ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவிகிதமாக ஏற்கனவே குறைத்துவிட்டது.

மலைக்கும் மடுவுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வு வாராக்கடன்களை ரத்து செய்வது, கார்ப்பரேட் கம்பனிகளுக்கு வரிச்சலுகை அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியார் கார்ப்பரேட்களுக்கு விற்பது, பணமாக்கல் நடவடிக்கை என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களின் நிலம் போன்ற சொத்துகளை விற்பது போன்ற நடவடிக்கை களினால் கார்ப்பரேட் கம்பனிகளின் சொத்து கொரோனா காலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே வருவாய் குவிகிறது. த எக்கானமிஸ்ட் என்ற வார இதழின் கூற்றுப்படி, 2016க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 750 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா காலமான 2020-21ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 7.18 லட்சம் கோடி, கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.5.06 லட்சம் கோடி. இந்த கட்டுரை எழுதப்படும் நேரத்தில் வந்த ஒரு செய்தியின்படி அதானி உலக பணக்காரர் வரிசையில் 10வது இடத்திற்கும், அம்பானி 11வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். (இந்த ஆண்டில் மட்டும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2350 கோடி டாலர் உயர்ந்துள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 930 கோடி டாலர் உயர்ந்துள்ளது.)

மேலும் சில பெரும் பணக்காரர்களின் குடும்பச் சொத்துகளும் வேகமாக அதிகரித் துள்ளன. ஆக்ஸ்ஃபாம் இந்தியா அறிக்கையின்படி, இந்தியாவில் மேல்தட்டில் உள்ள ஒரு பகுதியினரிடம் நாட்டின் மொத்த சொத்தில் 57 சதவிகிதம் குவிந் துள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவிகிதத்தினரிடம் வெறும் 13 சதவிகிதம் மட்டுமே உள்ளது.

ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் கடும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் விவசாயிகள். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை ஈடு கட்டும் அளவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட ஆதார விலை கூட சரியான கொள்முதல் இல்லாததால் அவர் களுக்கு கிடைப்பதில்லை. ஆனால், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படக்கூடிய உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே வரு கிறது. இதனால், விவசாயிகளுடைய கடன் சுமை அதி கரித்தது. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன.

இந்நிலையில் விவசாயிகளையும், விவசாயத்தை யும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைப்பதற்காக ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. மின்சார உற்பத்தி விநியோகத்தையும் தனியார் மயமாக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. இத்த கைய வேளாண் விரோத, கார்ப்பரேட்டுகளுக்கு விவ சாயச் சந்தையை திறந்துவிடும் சட்டங்களை எதிர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஓராண்டு காலப் போராட்டத் தை விவசாயிகள் டெல்லியில் நடத்தினார்கள். ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பு, ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. தங்களது போராட்டங்களை விலக்கிக்கொண்டபோது, தங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதிப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டு மென விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் கோரிக்கையை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக, ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆக்கப்படுவதுதான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது. எழும் கேள்வி, மோடி அரசு அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் ஆனதா? சாமானியர்களுக்கானதா?

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது என்பதை மேற்கண்ட விவரங்களில் இருந்து எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும்.

அதானி, அம்பானிகளுடைய சொத்து பல மடங்கு அதிகரித்துள்ள அதே காலத்தில் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் வாழ்க்கை படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பது பற்றி அடுத்த இதழில் பரிசீலிப்போம்.

-(தொடரும்)