(14) காவிமயமாகும் கல்வி!
இன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட அரசியல் சாசன உயர்பொறுப்பில் இருப்பவர்களும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பெரும் பான்மையான ஒன்றிய அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள். ஒன்றிய அமைச்சர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுடைய துறைகள் மூலமும், பொதுவாகவும் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முனைப்பாகப் பணியாற்றி வருகிறார்கள்.
சமீபத்தில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, ஹரித்துவாரில் சமஸ்கிருதக் கல்வி நிலையம் ஒன்றில் பேசியபோது, துளிகூடக் கூச்சமே இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கத்தை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி இருக்கிறார்.
"இந்தியர்கள் அனைவரும் காலனிய ஆதிக்க மனோநிலையைக் கைவிட்டு, இந்திய அடையாளத்தில் பெருமைகொள்ள வேண்டும். நமது பாரம்பரியம், கலாச்சாரம், நம்முடைய முன்னோர்களைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். அனைத்தையும் இந்தியமயமாக்கு வதுதான் புதிய தேசிய கல்விக்கொள்கையின் முக்கியமான நோக்கம். இப்படிக் கூறினால் கல்வியைக் காவிமயமாக்குவ தாக குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு இருக்கிறது?''’என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரைப் போலவே பகிரங்கமாக குடியரசுத்துணைத்தலைவர் பேசியிருக்கிறார். அவர் கூறிய கருத்துகளை ஏற்கனவே கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். பின்புலமுள்ளவர்கள் அமலாக்கி வருகிறார்கள்.
இதற்கு தக்க உதாரணமாக கோரக்பூர் ஐ.ஐ.டியின் இந்திய அறிவுசார் அமைப்புகளின் சால்பு மையம் (ஈங்ய்ற்ங்ழ் ச்ர்ழ் ஊஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ஸ்ரீங் ச்ர்ழ் ஒய்க்ண்ஹய் ஃய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் நஹ்ள்ற்ங்ம்ள்) வெளியிட்ட 2022-ஆம் ஆண்டு நாட்காட்டி திகழ்கிறது. இந்த நாட்காட்டி என்ன சொல்கிறது?
பரவலாகச் சொல்லப்படுகிற மாதிரி மத்திய ஆசியாவிலிருந்து ஆரியப் படையெடுப்பு நடந்தது என்பது கட்டுக்கதை; ஆரியர்கள் என்பவர்கள் வெளியில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் அல்லர்; சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே அவர்கள் காலங்காலமாக இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட மூத்த குடியினர்; சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே ஆரியர்கள் இந்தியாவில் இருந்து வந்ததால், வேத பாரம்பரியதைக் கொண்டி ருந்த ஆரியர்களின் நாகரீகம்தான் சிந்துசமவெளி நாகரீகம்’- இப்படி அறிவியலுக்கும், வரலாற்றுக்கும் புறம்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தை நிறுவுவது தான் இந்த நாட்காட்டியின் நோக்கமாக உள்ளது.
இத்தகைய கருத்துக்களின் அடிப்படையில், பாடத்திட்டத்தை கட்டமைக்க வேண்டும் என்றுதான் குடியரசுத் துணைத்தலைவர் தனது பேச்சில் வலியுறுத்தியிருக்கிறார்.
கோரக்பூர் ஐ.ஐ.டி வெளியிட்ட நாட்காட்டி பற்றி, மரபணு, தொல்லியல், மொழியியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், மெய்யியல் ஆதாரங்களுடன் பொருந்தாத கட்டுக்கதை இது என்று வரலாற்று அறிஞர் சார்லஸ் ஆலன் தெரி விக்கிறார். ஹரப்பா பகுதியில் மிக ஆரம்பக் காலத் தில் இருந்து வாழ்ந்துவந்த, சிந்து சமவெளிப் பகுதி நாகரீகத்திற்கு உரிய மக்களிடம் இருந்துதான் முந்தைய இந்திய அரசுகளின் தோற்றம் தொடங்குவ தாக வரலாற்று அறிவியல் சான்றுகள் தெரிவிக்கின் றன. இந்த மக்களின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு 7000 ஆண்டுகளில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீள்கிறது. இவர்களுடைய குடியிருப்பு களின் மிச்ச சொச்சங்கள் சிந்து நதி, கட்ச் பகுதி, சௌராஷ்டிரா, பலூச்சிஸ்தான், மாக்ரன் கடலோ ரப் பகுதியில் புதையுண்டு போயிருக்கின்றன. விவசாயத்திலும், வணிகத்திலும் ஈடுபட்டிருந்த இம்மக்கள், மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட நகர அமைப்புகள், தண்ணீர் வரத்துக்கான உட்கட்டமைப்புகளைக் கொண்டிருந்தார்கள். மாடு பூட்டிய வண்டிகளை இவர்கள் பயன்படுத்தியுள் ளார்கள். காலப்போக்கில் நீர்ப்பாசனம், மழைப்பொழிவு குறைவால் இந்தச் சமூகங்கள் அழிவைச் சந்தித்துள்ளன.
மேய்ச்சல் தொழி லில் ஈடுபட்டுவந்த ரிக் வேத மக்கள் ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாக பிற்காலத்தில் சிந்து சமவெளியில் குடியேறி இருக்கிறார்கள். ஐரோப்பிய ஆசிய ஸ்டெப்பி காடுகளின் குதிரை உள்ளிட்ட மேய்ச்சல் விலங்குகளோடு இவர்கள் இடம்பெயர்ந்துள்ளார் கள். பகுதி பகுதியாக பல்வேறு காலகட்டங்களில் நடந்த குடியேற்றம் அது. சிந்து சமவெளி நாகரீகத்தின் கருப்பு தோல் மக்களுடன் அவர்கள் கலக்க நேரிட்டது. அமெரிக்க தொல்லியல் நிபுணர் ஜார்ஜ் டேல்ஸ், “ஹரப்பா மக்கள் ஆரியர்களின் திடீர் தாக்குதலால் முடிவைச் சந்திக்கவில்லை; புலம்பெயர்ந்தவர்களின் குடியேற்றத்தால் முடிவைச் சந்தித்து இருக்கலாம்” என்கிறார். இவ்வாறு ’நுழைபவர்கள்- வெளியேறுபவர்கள்’ என்ற இரு பிரிவினருக்கு இடையே முரண்பாடுகள் தோன்றி இருக்கலாம். வெளியிலிருந்து உள்ளே நுழைகிற பலம்பொருந்திய மக்கள் சமூகம், உயரிய நிலைகளைப் பிடித்துக்கொண்டிருக்கலாம். ஏற்கனவே இருந்த உள்ளூர்வாசிகள் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு சாதி அமைப்பு போன்ற ஏற்றத்தாழ்வு முறை தோன்றி இருக்கலாம்; கணிசமானோர் தெற்கு நோக்கி வெளியேறி இருக்கலாம். இதை உறுதிப்படுத்துவதாக, கீழடி அகழ்வாய்வில் இருந்து கிடைத்த சான்றுகள், 2200 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட வேத கலாச்சாரம் இல்லாத ஒரு நாகரீத்தின் பரவல் தென்னகத்தில் இருந்ததைக் காட்டுகின்றன.
அறிவியல் அடிப்படையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு, நிறுவப்பட்டு வந்த வரலாற்று ஆய்வுகளை எல்லாம் முன்முடிவு களின் அடிப்படையில் புற ந்தள்ளி இருக்கிறது கோரக்பூர் ஐ.ஐ.டி நிறுவனம்.
ஒன்றிய கல்வி அமைச்சர் துவக்கிவைத்த இந்திய அறிவுசார் அமைப்புகளின் சால்பு மையமும், ஐ.ஐ.டியில் இருக்கக்கூடிய நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து இந்த நாட்காட்டி யைத் தயாரித்து இருக்கிறார்கள். இந்த நாட்காட்டி வெளியிடப்பட்ட பிறகு உலகம் முழுவதும் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள், வரலாற்றியல் அறிஞர்கள் அதிர்ச்சியடைந்து கண்டனம் தெரி வித்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியும், ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியதைப் பற்றியும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து நூலை வெளியிட்ட டோனி ஜோசப் அறிவியல் ஆதாரங்களுடன் இந்த நாட்காட்டி சொல்லும் தகவலை மறுத்திருக்கிறார். டோனி ஜோசப் 2019-ஆம் ஆண்டு அறிவியல் என்ற உலகப்புகழ் பெற்ற இதழில் வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
உலக அளவில் இந்திய விஞ்ஞானிகள் உள்ளிட்ட 117 விஞ்ஞானிகள், மத்திய ஆசியா, ஈரான், ஆப்கானிஸ்தான், தெற்காசியா ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கண்டறிந்த 837 பண் டைய மனிதர்களின் மரபணுக்களை ஆய்வு செய்து, ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியவர் கள்தான் என ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டுள் ளார்கள்” என அக்கட்டுரை தெரிவிக்கிறது. இந்த நாட்காட்டியை உருவாக்கிய ஜாய்சன், வரலாற்றிய லில் முறைப்படி ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர் அல்ல. மேலும் ஆரியர்கள் பற்றிய ஆராய்ச்சிக்கும் கோரக்பூர் ஐ.ஐ.டி.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தியாவில் முதன்முதலாக கோரக்பூரில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி. நிறுவனம். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் முக்கியத் துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த ஐ.ஐ.டி நிறுவனம் இப்படி ஒரு நாட்காட்டியை வெளியிட்டால் அதற்கு நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் என்று இந்த சித்து வேலையை சிந்து சமவெளி ஆய்வில் காட்டி யிருக்கிறார்கள்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர் ரொமிலா தாப்பர், கோரக்பூர் ஐ.ஐ.டி. வெளியிட்ட நாட் காட்டி என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சிநிரலை நியாயப்படுத்துவதற்கான முயற்சி என்றும், அறிவியலற்ற அணுகுமுறை என்றும் கூறியிருக் கிறார்.
ஏன் வரலாற்றைத் திரிக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவராக இருந்த கோல்வால்கர் ரிக்வேதத்தை தனது நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
”பிராமணன் தலையாக இருக்கிறான்; அரசன் கைகளாக இருக்கிறான்; வைசியன் தொடைகளாக இருக்கிறான்; சூத்திரன் கால்களாக இருக்கிறான்.”
இதுதான் வேதகாலத்தின் லட்சிய சமூகக் கட்டமைப்பாக இருந்தது. இதனடிப்படையில்தான் மனுநீதி உருவாக்கப்பட்டது. அந்த மனுநீதியைத் தான் அரசியல் அமைப்புச் சட்டமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இத்தகைய கருத்தியலின் மூலமே இந்து ராஷ்டிரத் தைக் கட்டமைக்க முடியும் எனக் கருதுகிறார்கள்.
வெளியில் இருந்து இந்தியாவுக்குக் குடியேறி யவர்கள் உருவாக்கியதுதான் ரிக்வேதமும், ஸ்மிருதி களும் என்ற உண்மை ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி நிரல் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத் தும்; இவை வெளிநாட்டுச் சரக்கு என்று மக்கள் புறக்கணிப்பார்கள்; ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனக் கருதி இந்திய வரலாற்றையே திரித்து புதிய கட்டுக்கதையை பாடத்திட்டத்தில் நுழைக்கிறார்கள்.
இதைத்தான் ஒளிவுமறைவின்றி "கல்வியை காவி மயமாக்குவோம்' என குடியரசுத் துணைத்தலைவரே பிரகடனப்படுத்தியுள்ளார். காடுகளிலும் மலைகளிலும் வசிக்கக்கூடிய இந்தியப் பூர்வகுடிகளை இப்போதும் நாம் ஆதிவாசிகள் என அழைக்கிறோம். ஆதிவாசிகள் என்று சொன்னால் அவர்கள்தான் பூர்வகுடிகள் என மக்கள் கருதுவார்கள் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு வைத்த பெயர் வனவாசிகள்.
1925-ஆம் ஆண்டு துவங்கி தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, பல துறைகளில் பல வடிவங்களில் கருத்தியலை உருவாக்குகிறார்கள். அதைப் பயன்படுத்தி மக்களை தங்கள் பக்கம் இழுப்பது மட்டுமல்ல, தங்களுடைய வெறுப்புப் பிரச் சாரத்தின் மூலம் மதமோதலை உருவாக்கியும் மக்களைத் திரட்டுகிறார்கள் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்)