(13) ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ்!

ரசியல், சட்டம், மத உரிமை என்ற பெயரில் மதவெறி நடவடிக்கைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது எனவும், ‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்களது நாசகாரமான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு இயந்திரத்தில் நுழைய திட்டமிட்டிருக்கிறார்கள் எனவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒரு அறிக்கையில் கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவெடுக்கும் உயர்மட்ட அமைப்பான, அகில பாரதிய பிரதிநிதி சபாவின் (Akhil Bharatiya Pratinidhi sabha) சமீபத்திய மூன்றுநாள் கூட்டத்திற்கு பிறகு மேற்கண்ட அறிக்கையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெளியிட்டிருக் கிறார். ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவு வெளியான உடன் இத்தகைய அறிக்கையை வெளியிட்டு மேற்கண்ட ‘நாசகார திட்டத்தை’ முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

Advertisment

gr

இந்த அறிக்கை, யாரைச் சுட்டுகிறது? யார் அரசு இயந்திரத்தில் ஊடுருவ முயற்சித்து வருகிறார்கள்? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல சங்பரிவார் அமைப்புகளின் பலமுனைத் தாக்குதலினால், சிறுபான்மை மக்கள் வேதனையின் விளிம்பில் உள்ளனர். மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கக்கூடிய இந்த சிறுபான்மை மக்கள்தான் அரசு இயந்திரத்தில் ஊடுருவப்போவதாக ஆர்.எஸ்.எஸ். ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

உண்மையில் ஊடுருவது யார்?

உண்மையில் அரசு இயந்திரத்தில் ஊடுருவ முயற்சிப்பது அல்ல ஊடுருவி, பல சித்து வேலைகளை செய்து வருவது ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள்தான். சமீபகால நாட்டு நடப்புகளே இதற்கு சான்றாக உள்ளது. இரண்டாவது முறையாக (2019) மத்தியில் பா.ஜ.க. பதவி ஏற்ற உடனேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு கலைத்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்ததோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை உடைத்து இரண்டு யூனியன் பிரதேசங் களை உருவாக்கியது. குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபோது அந்த மாநிலத்தின் சட்டமன்றத்துக் கான தேர்தல் நடத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து அரசாங்கம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சி.ஐ.ஏ.) இயற்றியது. மேலும் அதன் தொடர்ச்சியாக தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி. ஆர்.) அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) இருக்கும் என்றும் அறிவித்தது. இது குடியுரிமையை மதத்துடன் எவ்வகையிலும் இணைக்காத அரசியல் அமைப்பு சட்டத்தினை அப்பட்டமாக மீறுவதே ஆகும்.

Advertisment

gg

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகம்

பா.ஜ.க. என்பது மற்ற அகில இந்திய மாநில கட்சி களைப்போல் அல்ல. பா.ஜ.க. ஒரு பிரிவினைவாத, வகுப்பு வாத உள்ளடக்கத்தைக் கொண்ட கட்சியாகும். பிற மதங் களுக்கு எதிராக வெறுப்புணர்வு, சகிப்பின்மையை வளர்த்து மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தி தங்களது நூறாண்டு கால (ஆர்.எஸ்.எஸ். துவக்கம் 1925) நிகழ்ச்சி நிரல்-சனாதன இந்துத்துவா நாடாக இந்தியாவை மாற்றிட வேகமான முயற்சியை மேற்கொண்டு வரும் கட்சி.

பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வழிநடத்துகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது, அரசு நிர்வாகத்தில் ஊடுருவி அதிகாரம் மற்றும் அரசு இயந்திரத்தின் கருவிகளை ஆர்.எஸ்.எஸ்.-ஸால் எளிதாக ஆட்டிப்படைக்க முடிகிறது. இந்தியாவில் இந்து ராஷ்ட்டிராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டைச் சிதைக்கிறது.

அரசு அமைப்புகள், நிர்வாகம், கல்வி, ஊடகங்கள், பண்பாட்டுத்துறை, வரலாறு போன்றவற்றை காவி மயமாக்கி வருகிறது. பெரும்பான்மை வகுப்புவாதத்தின் வளர்ச்சி என்பது சிறுபான்மை வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு மோதலை உருவாக்கி தேச ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமையும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அடிப்படைத் தூண்கள்- மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. சுருங்கச் சொல்வதெனில் இந்திய குடியரசின் கட்டமைப்பை மாற்றுவதற்கு திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அபாயம் குறித்து 1940-ஆம் ஆண்டிலேயே டாக்டர் அம்பேத்கர் எச்சரித்திருக்கிறார். ‘இந்து ராஜ்யம் என்பது உண்மையாக மாறினால், அது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற் றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். அந்த வகையில் அது ஜனநாயகத்துக்கு முற்றிலும் பொருந்தாதது. என்ன விலை கொடுத்தேனும் இந்து ராஜ்ஜியத்தை தடுக்க வேண்டும் என்பது அம்பேத்கரின் கூற்று.

gr

ஊடுருவுவது எப்படி?

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.வை பயன்படுத்தி அரசு இயந்திரத் தில் ஊடுருவி அதை வகுப்புவாதமயமாக்கும் செயலை ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்ட முறையில் செய்து வருகிறது. ஆர்.ஆஸ்.எஸ். நபர்களை ஆளுநர்களாக மத்திய அரசு நியமிக்கிறது. உதாரணமாக தமிழக ஆளுநர் சி.டி.ரவி அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையிலான ஆளுநர் பதவியில் இருக்கிறார். அண்மையில் தென்னிந்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்திய ஆளுநர் ரவி, அகண்ட பாரதம் என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு ஆதரவாக பேசினார். நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க. ஆதரிக்கவில்லை. அதே நிலைப்பாட்டை மேற்கொண்ட ஆளுநர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மறுத்து தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

நீதித்துறையை எவ்வாறு பயன்படுத்து கிறார்கள், அதில் எவ்வாறு ஊடுருவு கிறார்கள் என்பதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பயன்படுத்தப் பட்ட விதம் எடுத்துக்காட்டு. அவர் மத்திய பா.ஜ.க. அரசு விரும்பிய பல தீர்ப்புகளை வழங்கினார். கைமாறாக ஓய்வு பெற்றவுடன் மாநிலங்களவை உறுப்பினராக அவரை பா.ஜ.க. தேர்வு செய்தது. இது பதவியில் இருக்கும் நீதிபதிகளிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயலாகும். ஆர்.எஸ்.எஸ். விருப்பத்தை நிறைவேற்றாத நீதிபதி கள் நிலை என்னவாகும் என்பதற்கு உதாரணமாக நீதிபதி லோயாவின் மர்ம மரணம் உள்ளது.

பண்பாட்டுத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி உள்ளது. வழக்கமாக ஒரு திரைப்படத் திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கி அப்படம் வெளியாகிறது. தற்போது சினிமாட்டோ கிராஃபி சட்டத்தை மத்திய அரசு திருத்தி சென்சார் போர்டு ஒரு படத்தை திரையிட சான்றிதழ் அளித்திருந்தாலும் அதை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்கு வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் சென்சார் போர்டு ஒப்புதல் அளித்தாலும், ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்றால் அந்த திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் "காஷ்மீர் பைல்ஸ்'” திரைப்படத்தில் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படுவது குறித்த காட்சிகள் இடம்பெற்றுள் ளன. ஆர்.எஸ்.எஸ். விரும்பும் கருத்துகளை வெளிப்படுத்தும் இந்த திரைப்படத்துக்கு பிரதமரே நற்சான்று அளித்துள்ளார். இஸ்லாமியர்கள் அல்லது பண்டிட் சமூ கத்தை சார்ந்தவர்கள் ஆகிய இருதரப்பு படுகொலைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்றைய பிரதமர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது 2000 முஸ்லீம்கள் படு கொலை செய்யப் பட்டார்கள். அதைப் படமெடுக்க மத்திய அரசு அனுமதிக்குமா?

ராணுவத் தளபதியாக இருந்த வி.கே.சிங் தனது பதவிக் காலம் முடிந்த கையோடு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சரானார். அவரைத் தொடர்ந்து மேலும் பல ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் 2019 மக்களவைத் தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் இணைந்தனர். இது ராணுவத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலின் பிரதிபலிப்பாகும். நாடு முழுவதும் தனது கருத்தியலின் ஆதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கான மையத்தை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். அதில் பயிற்சி பெற்றவர்தான் தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை.

அரசமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப் பட்ட நிறுவனங்களான சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக் கத்துறை, சி.ஏ.ஜி. போன்றவை அரசியல் நோக்கங் களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை அகற்றும் நோக்கத் துடன், அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு இந்த அமைப்புகள் களமிறக்கப்பட்டன. பா.ஜ.க. அல்லாக அரசுகளை அகற்றி, ஆர்.எஸ்.எஸ். விரும்பும் நபர்களை முன்னிறுத்த இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ். கருத்துகளுக்கு இடமளிக்காத ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. ஒரு காலத்தில் அச்சமின்மை மற்றும் துணிச்சலின் அடையாளமாக இருந்த பல இந்திய ஊடகங்கள் இப்போது அதிகாரத்தின் ஊதுகுழல்களாக மாறி விட்டன. காஷ்மீரில் இணையம் மறுக்கப்பட்டு, ஊடகச் செயல்பாட்டுக்கு விலங்கிடப்பட்டபோது, இந்தியாவின் பெரும்பான்மையான ஊடகங்கள் நாவசைக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், பண மதிப்பு நீக்கம், விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தம் போன்றவற்றில் அரசின் விளக்கங்களுக்கு அப்பால் செல்ல வேண்டாம் என்கிற நிலைப்பாட்டை பல ஊடகங்கள் எடுத்துள்ளன. ஜனநாயக நாட்டில் மக்கள் உரிமைகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏவலுக்கு அடிபணிந்து செல்லும் நிலை உருவாக்கப்படுகிறது.

இந்திய அரசு இயந்திரத்தில் ஊடுருவுவது ஆர்.எஸ்.எஸ்.தான் என்பதை உரக்கச் சொல்வோம்.

(தொடரும்)