(11) சாதி ஆணவத்தை ஒழித்திட சட்டம்!
கேரளா பைத்தியக்காரர்களின் புகலிடமாக உள்ளது’ என 125 ஆண்டுகளுக்கு முன்னதாக வீரத்துறவி விவே கானந்தர் குறிப்பிட்டார். பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற நிலையில் சாதிக்கொடுமைகள் அங்கு நிலவியதால்தான் விவேகானந்தர் அவ்வாறு சொன்னார். இன்று, அந்த நிலைமை அங்கில்லை. நாராயண குரு, அய்யன் காளி உள்ளிட்டோர் நடத்திய சமூக சீர்திருத்த இயக்கங்க ளாலும், கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய கருத்தியல் மற்றும் களப் போராட்டத்தினாலும் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பிற மாநிலங்களில் நிலவும் சாதிக்கொடுமைகளைத் தற்போது கேரளாவில் பார்க்க முடியாது.
தமிழகத்தில் தொடர்ந்து நீடித்துவரும் சாதி ஆணவக்கொலைகளை விவேகானந்தர் இன்று இருந்திருந்தால் எந்த அளவு கோபம் கொண்டிருப்பார் என்பதை நம்மால் உணர முடியும். சாதி கடந்து ஒரு பெண்ணைக் காதலித்த பொறியியல் மாணவர் கோகுல் ராஜை சாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்த வழக்கில், சில தினங் களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. கோரமான முறையில் கோகுல்ராஜை படுகொலை செய்த யுவராஜ் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் சாகும்வரை சிறை என்ற ஆயுள்கால தண்டனை வழங்கியது. இந்த யுவராஜ் என்பவர் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதி அமைப்பை நடத்திவந்தார். தனது சமூகப் பெண்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்வதை தடுப்பதாகக் கூறி படுகொலைகளை செய்து வந்துள்ளார்.
அறிவை மறைக்கும் சாதிய ஆணவம்
கோகுல்ராஜ் சுவாதியுடன் பேசிக்கொண்டிருந்ததை அறிந்த யுவராஜ் அவரைக் கடத்திச்சென்று, அவரின் தலையைத் துண்டித்து பள்ளிப்பாளையம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசி எறிந்துவிட்டார். சி.சி.டிவி கண்காணிப்பு கேமராவில் யுவராஜின் கார் எண் பதிவாகி இருந்ததால், அவர் மீது காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். யுவராஜும் அவரது சாதிப்பின்புலமும் கொடுத்த அழுத்தத்தினால்தான் விஷ்ணு பிரியா, தற்கொலை செய்துகொண்டார் என்று அப்போது பேசப்பட்டது. அந்த வழக்கும் விசாரணையில் உள்ளது. சம்பந்தப்பட்ட சுவாதி பிறழ்சாட்சியாக மாறினாலும் 40 சாட்சியங்களின் அடிப்படையிலும் சி.சி.டி.வி வீடியோ ஆதாரம் அடிப்படையிலும் சிறப்பு, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பபையும், தீர்ப்பளித்த நீதிபதியையும் மனமார பாராட்ட வேண்டும். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக வாதாடிய ப.பா. மோகனும் பாராட்டுக்குரியவர். தமிழகத்தில் இந்த சாதி ஆணவப்படுகொலை முதல்முறை யல்ல. பல ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னால், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ள புதுக்கூரப்பேட்டை கண்ணகி, முருகேசன் கொலை வழக்கிலும் கடுமையான தீர்ப்பு வழங்கப்பட்டது. பரவலாக வரவேற்கப்பட் டது. அதில் காதலன், காதலி இருவரையும் விஷம் கொடுத்து உயிரோடு எரித்துக்கொன் றார்கள். அந்த தீர்ப்புக்காக 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விமலா தேவி வழக்கு தற்போது சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மதுரை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். விரைவில் உறுதியான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். காதலுக்கும், நட்புக்கும் சாதி மத வேறுபாடு கிடையாது; சாதி ஆதிக்க மனோபாவமே குற்றத்தை தூண்டி இருக்கிறது. கோகுல்ராஜ் கொலை உள்ளிட்ட ஆணவக் கொலை, சாதி ஆதிக்க வெறியின் மற்றொரு ரத்த சரித்திரம் என நீதிபதி சம்பத்குமார் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். சாதிகளை உடைக்க, சாதி மறுப்புத் திருமணமே தீர்வு என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதையும் தீர்ப்பில் நீதிபதி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிச்சட்டம் தேவை!
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 60 சாதி ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால், நான்கு ஆணவக்கொலைகள்தான் என அதிகாரப் பூர்வமாக அரசுத்துறை பதிவுசெய் துள்ளது. இவ்வாறு சாதி ஆணவப்படுகொலை கள் தொடர்கதையாக நீடித்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும் சாதி ஆணவப்படுகொலைகள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தனி சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசையும் ஒன்றிய அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்தி வருகின்றன.
மீண்டும் கேரளாவுக்குச் செல்வோம். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகிறபோது, சாதிக்கொடுமை கேரளாவில் ஒழிக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. நாராயணகுரு, அய்யன்காளி போன்றவர்கள் நடத்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் கேரளாவில் சாதிக்கொடுமைகளை ஒழிப்பதற்கு பங்காற்றின. மேலும் கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த இயக்கத்தின் தலைவர்களும் நடத்திய கருத்தியல் மற்றும் களப்போராட்டமும் சாதிக் கொடுமையை அகற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
மறைந்த பத்திரிகையாளர் தோழர் இரா. ஜவஹர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளராக இருந்த தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் அவர்களை எடுத்த பேட்டி ஜூனியர் போஸ்ட்டில் 26.11.1993 அன்று வெளியானது. ஒரு மார்க்சியப் பார்வை என்ற பெயரில் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள, ஜவஹரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலில், அந்தப் பேட்டியின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுத்துவ சாதியக் கட்டமைப்பைத் தகர்க்க கேரள கம்யூனிஸ்ட்கள் கொண்டிருந்த உறுதிக்கும், ஆற்றிய பங்களிப்புக்கும் சான்றாக இ.எம்.எஸ்.ஸின் பேட்டி இருக்கிறது.
கேள்வி: பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் உங்களது சொத்துகள் அனைத்தையும் உங்கள் இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டீர்கள். இப்படிச் செய்ய உங்களால் எப்படி முடிந்தது?
இ.எம்.எஸ்: இப்படிச் செய்தது நான் மட்டும்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் மட்டும் அல்ல; சுந்தரையா, பசவ புன்னையா உட்பட ஆந்திராவைச் சேர்ந்த தோழர்கள் பலர் இப்படித் தங்களது சொத்துகள் அனைத்தையும் கட்சிக்குக் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் பெரிய நிலப்பிரபு வர்க்கத்தில், ‘மேல் ஜாதியில் பிறந்தோம். இந்த இரண்டிலிருந்தும் தொடர்புகளை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதனால் அப்படிச் செய்தோம். அவ்வளவுதான்.
கேள்வி: பிராமண குலத்தில் பிறந்த நீங்கள் உங்கள் இளம் வயதிலேயே பூணூலைக் கழற்றி விட்டீர்களே?
இ.எம்.எஸ்: அது ஒரு சின்ன விஷயம். சாதி அமைப்புக்கு எதிரான எதிர்ப்பின் ஓர் அடையாளமாகத்தான் இதைச் செய்தேன்.
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
1932-ம் ஆண்டில் நான் வேலூர் சிறையில் இருந்தபோது கட்சியின் (காங்கிரஸ்) தலைவர் சத்தியமூர்த்தியும் எங்களுடன் இருந்தார். நான் பூணூல் போடாமல் இருப்பதைப் பார்த்த அவர், "நீ ஏன் பூணூல் போடவில்லை?” என்று கேட்டார். ‘அவரை வருத்தப்படுத்த வேண்டாம்’ என்று கருதிய நான், “பூணூல் தொலைந்து விட்டது” என்று அவரிடம் கூறினேன்.
அவரோ, ஒரு பூணூலை என்னிடம் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொன்னார். நான் அதை வாங்கிச் சென்று எனது மேஜையில் வைத்துவிட்டேன்.
என்னுடன் சிறையில் இருந்த ரெட்டி சாதியைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பூணூலை எடுத்து அணிந்துகொண்டு, சத்தியமூர்த்தியின் முன்பாக நடந்தார்.
பிறகு, என்னைப் பார்த்த சத்தியமூர்த்தி, "நீ பிராமணன் என்று தவறாக நினைத்துவிட்டேன். அதனால்தான் பூணூல் கொடுத்தேன்' என்றார்.
கேள்வி: எழுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுப்பணி செய்து வருகிறீர்கள். உங்களது பணியில் மிகச்சிறந்தது என்று நீங்கள் கருதுவது எதை?
இ.எம்.எஸ்: பெரும் நிலப்பிரபு வர்க்கத் தையும், மேல் சாதியையும் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நான் பிறந்தேன். அந்த இரண்டிலிருந்தும் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு விலகிவிட்டேன். அது மட்டுமல்ல…நிலப்பிரபு வர்க்கம், ‘மேல்சாதி’ ஆகிய இரண்டுக்கும் எதிரான போராட்டத்தில் நான் தீவிரமாகப் பங்கேற்றேன். இத்தகைய போராட்டங்களின் வழியாக இந்தியத் தொழிலாளி வர்க்கம் என்னைத் தனது புதல்வ னாகத் தத்தெடுத்துக் கொண்டுவிட்டது. இதுதான் எனது மிகச்சிறந்த பணி.
அறுத்தது பூணூலை மட்டுமல்ல
நிலப்பிரபுத்துவ சனாதன குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவருடைய கல்லூரி நாட்களில், வேறு சில நம்பூதிரி மாணவர்களின் குடுமிகளை வெட்டியதோடு, அவர்களின் பூணூலையும் கழற்றிவிட்டதைப் பற்றித் தோழர் கேட்டதை, அதை ஒரு சின்ன விஷயமென இ.எம். எஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவருடைய அந்த நடவடிக்கை கேரளத்தில் அன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அத்தகைய நடவடிக்கையோடு இ.எம்.எஸ் நிற்கவில்லை. ஏ.கே.கோபாலன், கிருஷ்ணபிள்ளை போன்றவர்களோடு இணைந்து, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக ஆலயப் பிரவேசம் உள்ளிட்ட பல களப்போராட்டங்களையும் நடத்தி யுள்ளார்.
தமிழகத்தில் 1940களில் தொடங்கி, 1980கள் வரையில் கீழத்தஞ்சையில் நடைபெற்ற சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் (இன்றைய நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) ஒரு வீர காவியம். அதைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்)