"ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சார்ந்த கோட்சேவால் காந்திஜி கொலை செய்யப்பட் டார்' என்று உறுதிமொழியை வாசித்தபோது “நிறுத்துங்க, நிறுத்துங்க என்று கோவை காவல்துறை துணை கண் காணிப்பாளரும், இன்ஸ்பெக்ட ரும் பாய்ந்து வந்தார்கள்.

"நீங்கள் பேரை சொல்லக்கூடாது'' என்றார்கள்.

"காந்திஜியை கொன்றது கோட்சேதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்து கோட்சே தூக்கிலிடப்பட் டாரே! வேறு என்ன சொல்வது, உண்மையைத் தான் சொல்கிறேன்''’என நான் வாதிட்டேன்.

Advertisment

gr

போலீஸ் தடுத்ததால் பதட்டம் பரவியது. தந்தை பெரியார் திராவிட கழகத்தை சார்ந்த தோழர். கு.ராமகிருஷ்ணன், சி.பி.எம். தோழர். பத்மநாபன் மற்றும் வி.சி.க. தோழர்கள் எல்லாம் காவல்துறையின் அத்துமீறலைக் கண்டு ஆவேசம் அடைந்தார்கள். காவல்துறையினர் ஒரு மோதலை உருவாக்கும் பாணியில் தலையிட்டனர். அப்படி ஒன்று நடந்தால் எல்லாம் திசை திரும்பிவிடும் என்பதால், நிதானமாக வாதிட்டு விடாப்பிடியாக மதச்சார்பின்மையை பாதுகாப்போம், மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமைக்காக பாடுபடுவோம் என நான் படிக்கப் படிக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நிறைவுற்றது.

எதற்காக காவல்துறையினர் தலையிட்டனர்? காந்திஜியை சுட்டுக் கொன்றது கோட்சே. இதனால் அன்றைய ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப் பைத் தடை செய்தது. இப்போதும் காந்திஜி என்ற பெயரை உச்சரித்தாலே ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க.வினரும் அச்சமடைகிறார்கள். ஆர்.எஸ். எஸ்-க்கும் காந்திஜி படுகொலைக்கும் சம்பந்தமில்லை என்று சங் பரிவார அமைப்பைச் சார்ந்தவர்கள் பொய்யுரைக்கிறார்கள்.

மறுபுறத்தில், காந்திஜியை கொன்ற கோட்சே வுக்கு சங் பரிவார அமைப்புகள் அஞ்சலியும் செலுத்துகிறார்கள். கோவையில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக ஜனவரி 30 அன்று நாங்கள் உறுதிமொழி ஏற்ற அதே தினத்தில் மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் நகரத்தில் இந்து மகா சபா அமைப்பைச் சார்ந்தவர்கள் கோட்சேவின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

காந்திஜி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவராக சாவர்க்கர் கூண்டில் நிறுத்தப்பட்டார். காந்திஜியை சுட்டு வீழ்த்திட சதித் திட்டத்தை உருவாக்கியதில் சாவர்க்கரும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த சாவர்க்கர் படத்தை நாடாளுமன்றத்தில் காந்திஜி படத்திற்கு அருகே வைத்து மரியாதை செலுத்தினார் பா.ஜ.க.வின் பிரதமர் மோடி.

Advertisment

gr

டெல்லியில் நடந்து முடிந்த 73-வது குடியரசு தின விழாவில் பாரதியார், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கும், தலைசிறந்த சமூக சீர்திருத்தப் போராளியான நாராயணகுரு சிலையை உள்ளடக்கிய கேரள அரசின் அலங்கார ஊர்திக்கும் ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மாறாக, அயோத்தியின் ராமர் கோவிலும், ஒரு பசுவும் உள்ள உத்திரபிரதேச மாநில அலங்கார ஊர்தி டெல்லியில் ஊர்வலமாக வந்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடுமையாகப் போராடி, அந்நிய அரசு விதித்த கொடூர தண்டனைகளை எல்லாம் அனுபவித்து உடல்நலிவுற்று மடிந்தவர் "கப்பலோட்டிய தமிழர்' என்றழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார். பிரிட்டிஷ் வர்த்தக ஏகபோகத்தை எதிர்ப்பதற்காக, சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கிப் போராடினார். 1908-ஆம் ஆண்டில் தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் பிரிட்டிஷ் முதலாளிகளால் கசக்கிப் பிழியப்பட்ட போது, தொழிலாளர்களைத் திரட்டிப் போராடி அவர்களுக்கு 50 சதவிகித கூலி உயர்வைப் பெற்றுத் தந்தார். தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றினார். வ.உ.சி.யின் இந்தப் போராட்டத்துக்கு உத்வேகமாக அமைந்தது ரஷ்யாவில் 1905-ல் நடைபெற்ற தொழிலாளர் வர்க்கப் புரட்சி. இந்தத் தகவல்கள் எல்லாம் அடங்கிய வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்று நூலை (ஆர்.என். சம்பத் மற்றும் பே.சு.மணி இயற்றியது) இந்திய அரசின் தகவல் தொடர்பு துறை வெளியிட்டிருக்கிறது. இருந்தும், வ.உ.சி.யின் உருவம் தரித்த அலங்கார ஊர்தியை மத்திய அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

grசிவகங்கைச் சீமையின் அரசியான வீரமங்கை வேலுநாச்சியார் பிரிட்டிஷ்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். ஹைதர் அலியோடு இணைந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போராடியவர். மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழ்ந்த அரசியார் இவர். அவர் உருவத்தையும் அனுமதிக்கவில்லை. வேலு நாச்சியா ருக்கு துணை நின்று போராடிய, வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததால், பிரிட்டிஷாரின் ஆத்திரத் துக்கு ஆளாகி தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களுக்கும் அலங்கார ஊர்தியில் அனுமதி இல்லையாம். நாடாளுமன்றத்தில் மகாகவி பாரதியார் பாடலை மேற்கோள் காட்டும் மோடி, பாரதியார் உருவத்தையும் அனுமதிக்கவில்லை. ஏனென்றால், இவர்கள் பாரதியாரால் இகழப்பட்ட நடிப்பு சுதேசிகள்.

கேரளத்தில் இருந்து ஆதிசங்கரர் உருவம் இடம் பெற்ற ஊர்திதான் இடம்பெற வேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் நிர்பந்தத்தை கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் நிராகரித்து, கேரளத்தின் மிக முக்கியமான சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் உருவம் தாங்கிய ஊர்தியை வடிவமைத்தது. அதையும் நிராகரித்தது மத்திய அரசாங்கம்.

"உலகம் மெய்',’"மனிதர்கள் அனைவரும் சமம்',’"மனிதர்களின் துன்பம் களையப்படக் கூடியது'’ என்ற சிந்தனையை பௌத்த மதம் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற போது, ’உலகமே மாயை; பிரம்மமே மெய்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து மனிதர்களை மனிதர் சுரண்டும் முறையை நியாயப்படுத்திவர் ஆதிசங்கரர். மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் சாதிய ரீதியில் பாகுபடுத்தும் வேத-பார்ப்பனியத்துக்கு அடித்தளமிட்டவர். துவாரகை, பத்ரிநாத், பூரி, சிருங்கேரிக்கெல்லாம் சென்று மடங்களை நிறுவியவர். சனாதனம் இந்திய மண்ணில் வேரூன்ற அடித்தளமிட்டவர்களில் ஒருவரான ஆதிசங்கரரின் உருவம் வேண்டும் என பா.ஜ.க. மோடி அரசாங்கம் நிர்பந்திப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நாராயண குருவோ இந்து மதத்தில் நிலவி வந்த பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்து கடவுள் அனைத்து சாதியினருக்கும் பொது, கடவுளை அனைவரும் பிரதிஷ்டை செய்யலாம் என்று போராடியவர். ஆத்திகவாதியே ஆனாலும் சாதி அமைப்பை உடைக்கப் போராடியவர் என்பதால், சனாதனத்துக்கு எதிரானவர் என்பதால் அவரின் உருவம் தாங்கிய ஊர்தியை பா.ஜ.க. மோடி அரசாங்கம் தடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை நிகழ்ச்சிநிரலான இந்துத்துவாவை முன்வைத்து மதச்சார்பற்ற இந்தியக் கூட்டாட்சி குடியரசை இந்து ராஷ்ட்டிராவாக மாற்றுவதற்காகத்தான் மேற்கண்ட சித்து வேலைகளை எல்லாம் சங் பரிவார அமைப்பினர் செய்து வருகின்றனர். அரசு நிர்வாக இயந்திரத்திலும், காவல்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவி தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள். கோவையில் உறுதி மொழி ஏற்பை, தடுத்து நிறுத்த காவல்துறையினர் முற்பட்டதும் இதனுடைய ஒரு பகுதிதான்.

gr

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் திட்டத்துக்கு குறுக்கே நின்றவர் காந்தி. அதனாலேயே அவரைக் கொன் றார்கள். காந்தியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய காரணத்துக்காக அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அந்த அமைப்பைத் தடை செய்தார். மத்திய அரசு மட்டு மல்ல நாடே கொந்தளித்தது. சில பிரச்சனைகளில் காந்திஜியுடன் முரண்பட்டவர்கள் கூட அதிர்ந்து போனார்கள். உதாரணமாக தந்தை பெரியார்.

1927-ம் ஆண்டு அண்ணல் காந்திஜியின் ஒரு அறிக்கையைப் படித்து அதிர்ச்சியடைந்த தந்தை பெரியார், காந்திஜியை நேரில் சந்தித்து விவாதிப் பதற்காக தனது நண்பர் எஸ்.ராமநாதனை அழைத் துக் கொண்டு பெங்களூருக்குச் சென்றார். இந்து மதம், கடவுள் நம்பிக்கை, சாதி ஒழிப்பு, சனாதனம் போன்ற அம்சங்கள் குறித்து காந்தியோடு தந்தை பெரியார் நீண்ட நேரம் உரையாடினார். காந்திஜியின் கருத்தை பெரியார் ஏற்கவில்லை. பெரியாரின் கருத்தை காந்திஜியும் ஏற்கவில்லை.

சென்னை திரும்பிய தந்தை பெரியார் ஆகஸ்ட் 28ந் தேதி குடியரசு இதழில் ஒரு தலையங்கம் தீட்டினார். சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக்கொண்டிருந்த நேரத்திலும் காந்திஜி மீது பெரியார் நம்பிக்கை வைத்திருந்தார். காந்திஜி குறித்துப் பதிவு செய்தார்.

காந்திஜியை மகாத்மா என்று எழுதியும், பேசி யும் வந்த தந்தை பெரியார் தனது இதழில் “ஸ்ரீமான் காந்தி” என்று எழுத ஆரம்பித்தார். குடியரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று பொறிக்கப்பட்டிருந்தது, ஈ.வெ. ராமசாமி என்று அச்சிடப்பட்டது. காந்திஜியுடன் இத்தகைய கடுமையான வேறுபாட்டைக் கொண்டிருந்தாலும் காந்திஜி, கோட்சேவால் சுடப்பட்டார் என்ற செய்தி வந்தபோது வேதனையுற்று இந்தியாவிற்கு "காந்தி தேசம்' என்று பெயர் வைக்கச் சொன்னார்.

இவைகளையெல்லாம் கணக்கில் கொண்டு தான் "மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது சிந்தனைக்கும் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம்'’என்று தமிழக முதல்வர் காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தி சூளுரைத்தார்.

(தொடரும்...)