"ஹலோ தலைவரே... டெல்லியோட பார்வை தி.மு.க.வைத் தீவிரமா குறி வைக்கிது.''”
"முதல்வர் ஸ்டாலின்தான் க்ளீன் சிலேட்டா இருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. அரசுக்கு எதிராக, ஏதாவது ஒரு அஸ்திரம் கிடைக்காதான்னு டெல்லி தவிக்குது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, அவர் அமைச்சரவை சகாக்களின் நடவடிக்கைகள் பற்றி கவர்னர் ஆர்.என். ரவி, அதி காரிகளிடம் அறிக்கை கேட்டுக்கிட்டே இருந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் நடந்த ஆளுநர்கள் மாநாட்டுக்காக, டெல்லி சென்ற தமிழக கவர்னர் ரவி, மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைத் தனித்தனியாக சந்திச்சிப் பேசியிருக்கார். தி.மு.க.வில் இருக்கும் வி.ஐ.பி.க்கள் என்ன பண்றாங்க? அவங்க நடத்தும் தொழில் நிறுவனங்கள் எப்படி நடக்குதுன்னு ரிப்போர்ட் கொடுங்கன்னு கவர்னரிடம், மோடியும் அமித்ஷாவும் சொல்ல, தான் சேகரிச்சிக்கிட்டு போயிருந்த ஃபைலை அவர்கள்ட்ட காட்டியிருக்கார் கவர்னர்.''”
"ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை யும் கவர்னர் ரவி சந்திச்சி ஒரு ஃபைலைக் கொடுத்திருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, மோடியிடமும் அமித்ஷாவிடமும் கவர்னர் காட்டிய, தி.மு.க. பிரமுகர்கள் நடத்திவரும் நிறு வனங்கள் பற்றிய ஃபைலைதான் நிர்மலாவிடம் கவர்னர் ரவி கொடுத்திருக்கார். மோடியும் அமித்ஷாவும்தான் அதை நிர்மலா சீதாராமனிடம் கொடுக்கச் சொன்னாங்களாம். அந்த ஃபைலை வாங்கிய நிர்மலா, அதில் இருந்த விவரங்களைத் தனது பர்சனல் ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்துக்கிட்டாராம். ஏற்கனவே, தி.மு.க. பிரமுகர்களின் நிறுவனங்கள் பற்றி, அமலாக்கப் பிரிவும், வருமான வரித்துறையும் தனித் தனியாக விசாரிச்சி சேகரிச்ச தகவல்களோடு, கவர்னர் ரவி கொடுத்த தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் இப்ப நடக்குதாம்.''”
"அது ஒரு பக்கம் நடக்கிற நேரத்தில், கொரோனா காலத்திலும் லாபம் பார்த்த ஒரே நிறுவனத்தின் ஓனரான அமித்ஷா மகன் ஜெய்ஷா, இங்கே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துக்கிட்டு மு.க.ஸ்டாலினைப் பாராட்டிட்டுப் போயிருக்காரு.''”
"தலைவரே, தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கு. இவங்க அத்தனை பேருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை தி.மு.க. அரசு கொடுக்கப்போகுது. இந்த 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில், ரொக்க பணம் இல்லை. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டதுனு அவங்க தரப்பிலிருந்து அறிக்கைகள் வருது. பொங்கல் தொகுப்பை முதன் முதலில் கொடுத்தது, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுன்னு அறிவித்த கலைஞர் அரசுதான். ஜெயலலிதா ஆட்சியிலும் பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணம் கிடையாது. 2018 எம்.பி. தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி அரசு ஊரக உள்ளாட்சித் தேர்தலைக் கணக்குப் போட்டு, 2020-ல் ரொக்கப் பணம் கொடுத்தது. 2021-ல் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை பொங்கல் தொகுப்போடு சேர்த்துக் கொடுத்து, ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்னு கணக்கு போட்டுக் கொடுத்தது.'' ”
"பொங்கல் தொகுப்பில் ரொக்கம் இல்லாவிட்டாலும் மகளிர் உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் எப்ப கிடைக்குமாம்?''”
"இந்தத் திட்டத்தை செயல்படுத்தணும்னா மாதந்தோறும் சுமார் 2,150 கோடி ரூபாய் தேவைப்படும். இப்போதைக்கு இது சாத்திய மில்லை. அதனால், ரேசன் அட்டைதாரர்களில், மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்களின் எண்ணிக்கை எவ்வளவுன்னு ஆராயப்பட்டு வருது. அவர்களுக்காக செல விடப்படும் தொகை மாதம் ரூ.500 கோடிக்கு உட்பட்டு இருந்தால் இந்த திட்டம் நடைமுறைக்கு இப்போதே வரலாம்னு ஒரு பேச்சு இருக்குது. ஒரு தரப்புக்கு கொடுத்து, இன்னொரு தரப்புக்கு தரலைன்னா அது நெகட்டிவ்வா ஆயிடும்ங்கிறதால இன்னும் ஒரு முடிவுக்கு வரலையாம்.''“
"ம்...''”
"நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பின்படி வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பு வரை, நகைக் கடன் பெற்றவர்களின் கடனை முறையா தள்ளுபடி செய்திருக்கணும். ஆனால், வங்கி ஆண்டுக் கணக்கு அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ச் 31-வரை நகைக் கடன் பெற்றவர்களின் கடனை மட்டும்தான் தள்ளுபடி செய்வோம்னு அறிவிச்சதால், அதுக்குப் பிறகு நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடியாகலை. அதுபோல உரிமைத் தொகை விஷயத்திலும் குழப்பம் ஏற்பட்டுடக்கூடாதுன்னு ஆலோசனை நடக்குது.''
"கொரோனா காரணமாக 2 வருடத்துக்கும் மேலாக எவரிடமும் அதிகம் முகம் காட்டாத பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அண்மையில் முக்கிய கட்சிப் பிரமுகர்களுக்கு தரிசனம் கொடுத்திருக்காரே?''”
"நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை 20-ஆம் தேதி, திண்டிவனம் விழுப்புரம், மைலம், செஞ்சி உள்ளிட்ட தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திண்டிவனத்தில் நடத்தினார் ராமதாஸ். கொரோனாவுக்குப் பிறகு டாக்டரை நேரில் பார்த்த சந்தோசம் நிர்வாகிகளுக்கு இருந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. பெற்ற தோல்விகளுக்கு கட்சி நிர்வாகிகள்தான் காரணம்னு அவர்களுக்கு அர்ச்சனை பண்ண ஆரம்பித்துவிட்டார் ராமதாஸ். எதிர்க்கட்சிகளிடம் விலைபோகும் அளவுக்கு நமது கட்சியினர் பலகீனமாகிவிட்டீர்கள். லோக்கலில் அண்டர்ஸ்டேண்டிங் வைத்துக்கொண்டு விலை போய்விடுகிறீர்கள். இதனால் நடக்கப்போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. போட்டியிட ஆள் கிடைக்குமான்னு கூட சந்தேகம் வருது. பா.ம.க.வினரின் வீரம், ரோசம் எல்லாம் எங்கே போயிடுச்சின்னு சகட்டுமேனிக்குத் தாளிச்சிக் கொட்டிட்டு, எதிர்காலத்தில் அன்புமணி முதலமைச்சராக வேண்டும். ஞாபத்தில் வச்சிக்கங்கன்னு முக்கிய பாயிண்ட்டை வலியுறுத்தியிருக்கார் ராமதாஸ்.''”
"சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கச் சொல்லி டெல்லி நிர்பந்தம் கொடுக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பலமா ஆகனும்ன்னா, அந்தக் கட்சியில் சசிகலா சேரனும்ன்னு டெல்லி நினைக்கிது. ஆனால், டெல்லிக்குத் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுக்க நினைத்த எடப்பாடி, தங்கள் சார்பா, தம்பிதுரை எம்.பி.யை 20 ஆம் தேதி டெல்லிக்கு அனுப்பி யிருக்கார். அவர் அங்கு போய், சசிகலாவை எங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டால், அவர் கட்சியையே கபளீகரம் செய்வார். கட்சிப் பதவிகள் எல்லாம் ஒரே சமூகத்துக் குப் போய்விடும். அதோட, ஜெயலலிதா மர்ம மரணத் துக்கு அவர்தான் காரணம்னு மக்கள் மத்தியில் அப்போது எழுந்த இமேஜ் இன்னும் குறையலை. அதனால், நீங்களே உங்கள் கட்சியில் அவரை சேர்த்துக்கங்கன்னு தம்பித்துரை டெல்லியிடம் சொல்லப்போறாராம்.''”
"ஒரு தி.மு.க. எம்.பி., பா.ஜ.க. பக்கம் சைடு அடிக்கப் போறாராமே?''”
"கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்திருக்கும் கடலூர் எம்.பி. ரமேஷ், 25 சி கொடுத்து சீட் வாங்கியும், எங்க ஆட்சியிலேயே என்னை உள்ளே வச்சிட்டாங்க. அதனால இனி பா.ஜ.க.வுக்கு ஆதரவா செயல்படப்போறேன்னு தாமரை கட்சிக்கு சிக்னல் கொடுத்திருக்காராம்.”
"திருப்பூர்ல கோட்சேவின் நினைவு நாளை தடபுடலா கொண்டாடி இருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் நினைவு நாளை வீரவணக்க நாளாக சிவசேனா, இந்து சேனா, இந்துமகாசபை உள்ளிட்ட அமைப்புகள், கடைப்பிடித்து வருது. அந்த வகையில் திருப்பூரில் சிவசேனா கட்சியினர் கோட்சேவின் நினைவு நாளில் அவர் படத்துக்கு அஞ்சலி செய்து மகாத்மா கோட்சே வாழ்கன்னு கோஷம் போட்டிருக்காங்க.''”
"நானும் எனக்கு கிடைச்ச தகவலை சொல்றேன்.. திருப்பூரில் சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள், அங்கே வடமாநில நபர்களை தாராளமா இறக்குமதி செய்து, அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகின்றன. திருப்பூரை இன்னொரு சூரத் நகரமா மாத்தணும்ன்னு பிரதமர் மோடியே ஆசைப்படறாராம். அதனால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வடமாநில குடும்பங் களுக்கு அங்கே 25 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தரும் முயற்சிகளும் நடந்துவருதாம். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் சிவப்புக் கொடி பறந்த திருப்பூர் இப்போது காவிக் கொடிகளுக்கான நகரமாகியிருக்குது.''’