எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறப்போவதாக தங்கதமிழ்ச்செல்வன் எடுத்த முடிவையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்துவது தினகரனுக்குச் சிக்கலை அதிகப்படுத்தியிருக்கிறது.
மாறுபட்ட தீர்ப்பு வந்த நாளில் தனது அடையாறு இல்லத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் நீண்ட நேரம் விவாதித்தார் தினகரன். நமக்கு எதிரான வழக்கில் காலதாமதம் செய்வதற்காகத்தான் மூன்றாவது நீதிபதிக்கு வழக்கை மாற்றியுள்ளனர். இதனை உடைக்க சட்டரீதியிலான வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும் என பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தினகரனிடம் வலியுறுத்தியபோது, ""டெல்லியின் நோக்கம் நமக்குப் புரிகிறது. இருப்பினும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரையில் நாம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்றிருக்கிறார் தினகரன்.
அப்போது குறுக்கிட்ட தங்கதமிழ்ச்செல்வன், ‘""இப்போதைய நிலையே நீடித்தால் 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை எடப்பாடி அரசு தப்பித்துக்கொள்ளும். மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பும் நமக்கு சாதகமாக வரப்போவதில்லை. 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவும் முன் வரமாட்டார்கள். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து நாம் போட்ட வழக்குதானே இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடையாக இருக்கிறது. அதனால், வழக்குகளை வாபஸ் பெற்றுவிடுவோம். அப்போ, சபாநாயகரின் உத்தரவு அமலுக்கு வந்துவிடும். 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தித்தான் ஆக வேண்டும். அதில் நாம் போட்டியிட்டு ஜெயிக்கலாம். நமக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க.-எடப்பாடி அரசுக்கு செக் வைக்கணும்னா இந்த யோசனையை பரிசீலிக்க வேண்டும்'' என அழுத்தமாக வாதிட்டிருக்கிறார்.
தங்கதமிழ்ச்செல்வனின் இந்த கருத்து மற்ற எம்.எல்.ஏ.க்களில் பலருக்கும் ஏற்புடையதாக இருந்தாலும், அதனை வெளிப்படுத்தத் தயங்கினர்.’""வழக்கை வாபஸ் பெறுவதில் சட்டச்சிக்கல் இருக்கலாம். அதனை ஆராய வேண்டும். மீண்டும் தேர்தலை சந்தித்தால் ஜெயிப்போங்கிறதுக்கு உத்தரவாதம் கிடையாது. வழக்கை வாபஸ் பெறுவதை யோசிக்க வேண்டும்'' என பழனியப்பன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுபற்றி வழக்கறிஞர்களிடம் பேசிவிட்டுத் திரும்பிய தினகரன், ""வழக்கறிஞர்களும் மாறுபட்ட கருத்துகளைச் சொல்கிறார்கள். வாபஸ் பெறுவதில் மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு உடன்பாடில்லைங்கிறபோது அவர்களை வற்புறுத்த முடியாது. அதனால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரையில் காத்திருக்கலாம்'' என்றார். இருப்பினும் தனது வாதத்தில் தங்கதமிழ்ச்செல்வன் அழுத்தமாக இருந்ததால், ‘""நீங்கள் ஒருவர் மட்டும் வழக்கை வாபஸ் வாங்குங்கள். என்ன நடக்குதுன்னு பார்த்துவிட்டு மற்றதை ஆலோசிப்போம்'' என்றதோடு அன்றைய ஆலோசனையை முடித்துக்கொண்டார் தினகரன்.
தங்கதமிழ்ச்செல்வன் அழுத்தத்தின் பின்னணி குறித்து நாம் விசாரித்தபோது, ""சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, தனது நம்பிக்கைக்குரிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலம் சில முக்கியத் தகவல்களை அனுப்பினார் எடப்பாடி. நாடாளுமன்ற தேர்தல் வரும்வரை தினகரனை அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். பா.ஜ.க.வையும் என்னையும் எதிர்ப்பதை தினகரனை கைவிடச் சொல்லுங்கள். எனக்கு கிடைக்கிற தகவல்படி, மீண்டும் மோடி பிரதமராக முடியாது. அதன்பிறகு அ.தி.மு.க.வை உங்களிடம் ஒப்படைக்கிறேன். வழக்கம்போல் அனுப்பி வைக்கப்படும் "கட்சி நிதி'யில் எந்த தடையும் இருக்காது'' என தூது விட்டுள்ளார்.
இதனையடுத்து, தினகரனை வரவழைத்த சசிகலா, எடப்பாடி வைத்த கோரிக்கையை அவரிடம் சொல்லி அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, எடப்பாடி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தினகரன் பயணித்த நேரம். தஞ்சை மற்றும் விழுப்புரம்(வ) மாவட்டங்களை முடித்திருந்த நிலையில், சசிகலாவின் உத்தரவினால் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். மோடிக்கான எதிர்ப்பையும் 90 சதவீதம் குறைத்துக்கொண்டார் தினகரன்.
இதற்கிடையே, சசிகலாவின் யோசனையின்படி, தினகரனையும் மெயிண்டெயின் பண்ண வேண்டி, கணிசமான பங்கு அவருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்தினார் எடப்பாடி. இது எதுவுமே தினகரனை நம்பும் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரியாது. அதேசமயம், 18 எம்.எல்.ஏ.க்களையும் முன்னிறுத்தி தனது பேரத்தின் பவரை எடப்பாடியிடம் ரகசியமாக அதிகப்படுத்திக்கொண்டார் தினகரன்.
ஓ.பி.எஸ். பிரிந்திருந்தபோது முதல்வராக எடப்பாடி இருந்தாலும், துறை வாரியான டெண்டர் முடிவுகளில் தினகரனின் தலையீடு அதிகமிருந்தது. குறிப்பாக, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நெடுஞ்சாலைத் துறைக்கு 4000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை 10,000 கோடியாக அதிகரிக்கச் செய்தும் (2017- நிதியாண்டு), அதில் 10 சதவீதம் வந்துவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட தகராறுகளால் பிரிய நேரிட்ட நிலையில் அந்த 10 சதவீதம் தினகரனுக்கு கிடைக்காமல் போனது. அதைத்தான் தற்போது வசூலித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில், தகுதி நீக்க வழக்கில் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் 18 பேரில் 12 பேர் எடப்பாடியிடம் தஞ்சமடைந்து விடுவார்கள். அந்த நிலை உருவானால் தனது வலிமை குறைந்துவிடும் என நினைத்தார் தினகரன். அதேசமயம், 18 எம்.எல்.ஏ.க்களின் பதவிபறிப்புக்கு அடிப்படை கட்சித் தாவல் தடை சட்டம்தான். ஒரு கட்சியில் எம்.எல்.ஏ. ஆனவர்கள் வேறு எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராகவோ, பதவிகளிலோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் கட்சித் தாவல் தடை சட்டம் நேரடியாகவே பாயும். அந்த வகையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த 18 பேரும் தினகரனின் அ.ம.மு.கழகத்தில் உறுப்பினர்களாகவும் முக்கிய பொறுப்புகளிலும் இருக்கின்றனர். இதைச் சுட்டிக்காட்டியே தகுதி நீக்கம் செல்லும்ங்கிற தீர்ப்பை எடப்பாடி தரப்பு எளிதாகப் பெற்றிருக்க முடியும். ஆனா, அந்த அஸ்திரத்தை சசிகலா - தினகரனுக்காக எடப்பாடி எடுக்கவில்லை. எடுத்திருந்தால் 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வந்திருக்கும். அதனை தினகரன் விரும்பவில்லை.
இடைத்தேர்தல் வரும்பட்சத்தில், ஒரு தொகுதிக்கு 100 கோடி என 1800 கோடி ரூபாய் வெற்றிக்குத் தேவை. அதற்கு தினகரன் தயாராக இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரை இடைத்தேர்தல் வரக்கூடாதுங்கிறதில் உறுதியாக இருக்கிறார் தினகரன். அதற்கேற்ப, தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட தீர்ப்பு வாசிக்கப்பட்டு மூன்றாவது நீதிபதியின் ஒப்பீனியனுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவு தெரியும் வரையில் சபாநாயகரின் உத்தரவே தொடர வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் கேட்டுக்கொள்ள, நீதிமன்றமும், வழக்கின் தீர்ப்பு வரும்வரையில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது; நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்டது. ஆக, 18 எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலே அவர்களை வைத்து பல காரியங்களை ரகசியமாக எடப்பாடியிடம் சாதித்துக்கொண்டிருக்கிறார் தினகரன்.
இதெல்லாம் சமீபகாலமாக தெரியவந்து அதிர்ச்சியடைந்த தங்கதமிழ்ச்செல்வன், தீர்ப்பு வந்ததும் அடுத்தகட்ட ஆலோசனையின்போது, தங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தினகரன் எடுக்கத் தயங்குவதையும் புரிந்துகொண்டார். மேற்கண்ட எல்லாம் சேர்ந்துதான் ’வழக்கு வாபஸ்’ என்கிற முடிவை தங்கதமிழ்ச்செல்வனை எடுக்க வைத்திருக்கிறது‘என பின்னணி ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர் உளவுத்துறையினர். தங்கதமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்தபோதும் மேற்கண்ட தகவல்களே எதிரொலிக்கின்றன.
பதவி பறிக்கப்பட்ட தினகரனுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.க்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ""எடப்பாடிக்கும் தினகரனுக்கும் தொடர்பு இருக்கிறதா என எங்களுக்குத் தெரியாது. ஆனால், இடைத்தேர்தல் வருவதில் தினகரனுக்கு விருப்பமில்லை. எங்களுக்கு விருப்பம் இருக்கிறது. அதேசமயம், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், சில ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கமுடியாது என வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். அதனால் நாங்கள் அமைதியாக இருக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் தங்கதமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக நாங்களும் குரல் கொடுத்திருப்போம்'' என்கிறார்கள். தங்கதமிழ்ச்செல்வனுக்கு தெரிந்த உண்மைகள் மற்றவர்களுக்கும் தெரியவரும்போது தினகரனுக்கு எதிராக கலகம் வெடிப்பதை யாரும் தடுத்துவிடமுடியாது என்பதே தினகரன் கூடாரத்தின் நிலை!
-இரா.இளையசெல்வன்