திருவண்ணாமலை அண்ணாமலையார், ரமணர் புகழ் வெளிநாடுகளில் பரவியுள்ள தால் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து என வெளிநாடுகளிலிருந்து பலர் ஆன்மீகம் நாடி இங்கு வந்து தங்குகிறார்கள். ரமணாஸ்ரமம் பகுதி, சேஷாத்திரி ஆஸ்ரம பகுதி, விசிறி சாமியார் ஆஸ்ரம பகுதி, பெரும்பாக்கம் சாலை பகுதிகளில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் தங்கியிருப்பர்.
கொரோனா வைரஸ் பரவலால் திருவண்ணாமலையில் இருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் தங்களது தேசத்துக்குப் பறந்துவிட்டனர். மிச்சமிருப்பவர்கள் நூற்றுக்கும் குறைவாக இருப்பதாக திருவண்ணாமலை காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துதர தனியாக ஒரு ஹெல்ப் சென்டரை ஆரம்பித்து அங்கு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இருவர், தன்னார்வலர்கள் இருவரை நியமித்துள்ளார் எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி.
இந்நிலையில் ஏப்ரல் 19-ஆம் தேதி மலைமீது இரண்டு வெளிநாட்டினர் ஏறிச்சென்றார்கள் என்கிற தகவல் எஸ்.பி. சிபிசக்கர வர்த்திக்கு சென்றது. அவர் ட்ரோன் கேமராவை மலைமீது பறக்கவிட்டுத் தேடியபோது பாதி மலையில் ஒரு பாறை அருகே வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஆணும், உட்கார்ந்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலிஸ் டீம் பரபரப்பாகி மேலே சென்று இருவரையும் கீழே அழைத்து வந்தனர்.
இதுபற்றி எஸ்.பி. சிபிசக்கர வர்த்தி கூறும்போது, ""அவர்கள் இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர், டாட்டியானா தம்பதி. கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்துள்ளார்கள். சாலைமார்க்கமாக பல ஆன்மீகத் தலங்களுக்கு பயணமாகி பின்னர் திருவண்ணாமலை வந்து தங்கியுள்ளார்கள். தினமும் 300 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். தற்போது அவர்களிடம் செலவுக் குக்கூட பணமில்லையாம், சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் இருக்கிறார்கள். தங்கள் நாட்டு தூதரகத்தைத் தொடர்புகொண்டுள் ளார்கள்.
விமானப் போக்குவரத்து இல்லாததால் பொறுமையாக இங்கேயே இருக்கச்சொல்லியுள்ளார்கள். இதனால் என்ன செய்வது எனத்தெரியாமல் மலைமீது ஏறி தியானம் செய்ய சென்றதாகக் கூறினார்கள். ஊரடங்கு முடியும்வரை தற்போது தங்கியுள்ள வீட்டிலேயே வாடகையில்லாமல் தங்கவைத் துள்ளோம், இவர்களுக்கான உணவை 3 வேளையும் வழங்க ஒரு தொண்டு நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளோம்'' என்றார்.
ஏப்ரல் 6-ஆம் தேதி சீனாவைச் சேர்ந்த யாங்யாத்ரூ, தங்க வீடு கிடைக்கவில்லையென தீபமலை மீதுள்ள ஒரு குகையில் சில நாட்கள் தங்கியிருந்தார். ஊரடங்கு அமலில் இருந்ததால் இவருக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட் களை உள்ளூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் வாங்கித் தந்துவிட்டு அதற்கான தொகையை இரட்டிப்பாக வாங்கிவந்தனர். இதில் சந்தேகமான அதே பகுதியை சேர்ந்த சிலர் காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையிலான டீம் மலையேறிச் சென்று அவரை கீழே இறக்கி, தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்து கொரோனா டெஸ்ட்டுக்கு உட்படுத்தினர். நெகட்டிவ் என வந்தபின்பே டென்ஷனிலிருந்து வெளியே வந்தது காவல்துறை. அந்த சீனப் பயணியை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தேவையான உதவிகளை செய்கிறது காவல்துறை.
மத்திய உளவுத்துறையின் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “இந்தியாவில் வெளிநாட்டுப் பயணிகள் நமது சட்டதிட்டத்தை மீறுகிறார்களென காவல்துறை நடவடிக்கை எடுத்தால் சம்பந்தப்பட்ட நாட்டினரின் தூதரக அதிகாரிகள் நேரடியாக வந்து தங்கள் மக்களுக்கு சாதகமாக சட்டம் பேசுகிறார்கள். இந்த தொந்தரவால் இவர்களின் செயல்பாடுகளை பெரும்பாலும் கேள்வி கேட்பதில்லை. இந்த தைரியத்தில் இப்படி ஊரடங்கு நேரத்திலும் அடங்காமல் தியானம் செய்கிறோம் என வெளியே சுற்றுகிறார்கள்'' என்றார்.
இப்படி வெளிநாட்டினர் அடிக்கடி மலையில் தங்குவது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நம்மிடம், ""வெளிநாட்டினர் ஆன்மீக தேடல், தியானம் போன்றவற்றை மையமாக வைத்தே இங்கு வருகின்றனர். அப்படி வருபவர்களுக்கு தனிமையான இடம் தேவைப்படுகிறது. இதனால் மலைப்பகுதி, காட்டுப்பகுதிக்கு சென்று மணிக்கணக்கில், நாட்கணக்கில் இருப்பார்கள். இதனை உணர்ந்த சில இளைஞர்கள் இதனை பிஸினசாக்கி, மலையில் ரகசியமாக பாறை, குகை வீடுகளை உருவாக்கி அதனை வெளிநாட்டினர்க்கு வாடகைக்கு விட்டு சம்பாதித்தனர்.
பெரும்பான்மையினர் தியானம் செய்யவும், சிலர் பாலியல் சாகசத்துக்காகவும் இப்படிப்பட்ட குகைகளில் அடிக்கடி வந்து தங்குவர். இதுபற்றி தெரியவந்து காவல்துறை, வனத்துறை இணைந்து ரெய்டு நடத்தி இரண்டு ஆண்டுக்கு முன்பு அதனை முடக்கினர். தற்போது அடிக்கடி மலை மீது வெளிநாட்டினர் ஏறுவதைக் கண்டால் இன்னும் ரகசிய குகைகள் செயல்படுகிறதோ என சந்தேகமாக உள்ளது. காவல்துறை இவர்கள்மீது ஒரு கண்வைத்துச் செயல்பட வேண்டும்'' என்கிறார்.
-து.ராஜா