வெயில் அளவு மட்டுமல்ல -முகிலன் காணாமல் போனதற்குப் பின்பான நாட்களும் சதம் தாண்டியாகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் காணாமல்போன முகிலன் பற்றி துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்ற அப்பாவி மக்கள் 13 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவணப்படமாக வெளியிட்டுவிட்டு பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு மதுரை செல்வதாக சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு சென்ற முகிலன், அதன்பிறகு எங்கு சென்றார்- என்ன ஆனார்? என்ற எந்த தகவலும் இல்லை.
நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்யப்பட்டு கடந்த 3 மாதமாக பலமுறை வாய்தா வாங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், சென்ற 6-ஆம் தேதி அம்மனு மீதான விசாரணை வந்தபோது, "காணாமல் போன முகிலன் பற்றி எங்களுக்குத் துப்பு கிடைத்துள்ளது. அது சம்பந்தமான ரகசிய அறிக்கை இந்த கவரில் உள்ளது' என்றும் "அவர்பற்றி இப்போது வெளியே சொல்லமுடியாது' எனவும் கூறி சீலிட்ட கவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு மீண்டும் காலஅவகாசம் கோரியதால் நீதிமன்றம் அடுத்த மூன்று வாரங்களுக்குள் முகிலன் சம்பந்தமான விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
முகிலனைக் கண்டுபிடியுங்கள் என்று தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திவரும் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவரான தியாகுவிடம் பேசினோம்.
""ஒருவகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இப்போது துப்பு கிடைத்துள்ளது எனக் கூறுவதும் சீலிட்ட கவரை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளதும் முகிலன் உயிருடன்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அனேகமாக முகிலன் பற்றிய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்'' என்றார். ஆனால் முகிலனின் மனைவியான பூங்கொடியோ ""நீதிமன்றத்தில் போலீசார் ரகசியமாக ஏன் அறிக்கை கொடுக்கவேண்டும்? அவர் உயிருடன்தான் இருக்கிறார் என துப்பு கிடைத்துள்ளது என்று கூறும் போலீசார் ஏன் அவரைக் கொண்டுவந்து ஒப்படைக்கவில்லை? இதில் ஏதோ சதி நடக்கிறது. எனக்கு போலீசாரின் நடவடிக்கையில் எந்த நம்பிக்கையும் வரவில்லை'' என்றார்.
இந்நிலையில் ""முகிலன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் உள்ள ஆறு இடங்களில் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன. முகிலன் வடஇந்திய கோவில் நகரமொன்றில் தங்கியிருப்பதை அவர் பயன்படுத்தும் போலி பேஸ்புக் ஐ.டி. மூலம் மோப்பம் பிடித்திருப்பதாகவும் முகிலனைக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதோடு, பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி எனச்சொல்லி அவரை விரைவில் கைதுசெய்து சிறையில் அடைப்போம்'' என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. தரப்பில்
-ஜீவா தங்கவேல்