துப்பாக்கிச் சூடு பற்றி கள்ள மவுனம் காக்கும் எடப்பாடி அரசு, ஸ்டெர்லைட்டுக்கு போட்ட பூட்டை திறக்க முடியாது என உறுதியான குரலில் சொல்கிறது. அப்படியென்றால், ""ஏன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு போட்டீர்கள்?'' என சட்டசபையில் கேட்டார் ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன். ஸ்டெர்லைட்டை மூடுவதற்காகப் போடப்பட்ட அரசாணைக்கு எந்த அளவு சட்ட வலிமை உள்ளது?

sterlite1

புதுதில்லியில் பேசிய ஸ்டெர்லைட் நிர்வாகி, "ஆலை மறுபடியும் இயங்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். தமிழ்நாடு அரசின் அரசாணையை மீறி ஸ்டெர்லைட் நிர்வாகி, "எப்படியும் சட்டப்படி திறப்போம் என்கிறார்' என வழக்கறிஞர்களை கேட்டோம்.

Advertisment

கம்பெனி விவகாரங்களுக்கான மூத்த வழக்கறிஞர் ஒருவரை அணுகினோம். உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனான இவர் ஸ்டெர்லைட்டை திறந்து மறுபடியும் இயங்க வைப்பதற்கான கடினமான முயற்சியில் ஈடுபட்டிருப்பதை ஒத்துக்கொண்டு பேசினார்.

""மேற்கு வங்கத்தில் நந்திகிராம், சிங்கூர் ஆகிய இடங்களில் அன்றிருந்த கம்யூனிஸ்ட் அரசின் ஆதரவோடு டாடா நிறுவனம் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். ஆனால் அந்த அரசோ நந்திகிராம் சிங்கூரில் கார் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தது சரி என்றே வாதிட்டது. ஆனால் நந்திகிராம் சிங்கூரில் டாடாவின் கார் தொழிற்சாலை முழுமையாக அமையவில்லை.

sterlite

Advertisment

அதேநேரத்தில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை 20,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை மூட வேண்டுமென்றால், இந்த தொழிற்சாலையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், தொழிற்சாலை சுற்றுப்புறச் சூழலுக்கு பாதகம் விளைவிக்கிறது என்பதையும் சுதந்திரமான விசாரணை மூலம் நிரூபிக்க வேண்டும். அப்படி சுதந்திரமாக ஒரு விசாரணை நடத்தப்பட்டு தொழிற்சாலையினால் உருவாகும் பாதிப்புகள் உறுதியானாலும் அரசு அதை ஒரேயொரு உத்தரவு மூலம் மூடிவிட முடியாது.

அந்த தொழிற்சாலையை மூடும் உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். நிர்வாகம் அளிக்கும் விளக்கம் திருப்தி இல்லை என அரசு முடிவு செய்தால் தொழிற்சாலையை மூடலாம். இதுதான் சட்டப்படியானது. தமிழ்நாடு அரசோ ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்துள்ளது. இது தொழிற்சாலைகள் மற்றும் வியாபார அமைப்புகள் செயல்பட அரசியல் சாசனம் அனுமதித்துள்ள விதிகளுக்கு எதிரானது. இதை உயர்நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்ய உள்ளோம். நிச்சயம் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளிக்கும். இந்த வழக்கில் ஸ்டெர்லைட் வெற்றிபெற வாய்ப்பு நூறு சதவிகிதம் இருக்கிறது'' என்கிறார்.

sterlite

தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்றினால் நீதிமன்றத்தில் அந்த உத்தரவு செல்லுமா? என கம்பெனி விவகாரங்கள் தொடர்பான வழக்கில் நிபுணத்துவம் பெற்றவரும், ஸ்டெர்லைட்டுக்காக க்ரீன் ட்ரிபியூனலில் ஆஜராகி வாதிடுபவருமான சீனியர் வழக்கறிஞர் பி.எஸ்.ராமனிடம் கேட்டோம். ""தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க விட மாட்டோம் என்றோ தமிழ்நாட்டில் தாமிரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அனுமதிக்க மாட்டோம் என்றோ தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் இயங்க அனுமதித்து பல வருடங்களாகிவிட்டன. 20,000 கோடி ரூபாய் முதலீடு என்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் கட்டினார்கள் என்பதற்காக புதிய தலைமைச் செயலகத்தை பொது மருத்துவமனையாக மாற்றுங்கள் என ஜெ. உத்தரவிட்டதுபோல, தொழிற்சாலை விஷயத்தில் அரசு நடந்துகொள்ள முடியாது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது ஒன்றும் புதிதல்ல. 2011, 2013, 2017 என மூன்று முறை ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அதுவும் 2013-ல் சல்பர் டை ஆக்சைடு என்கிற நச்சுவாயு வெளியானது என புகார் வந்ததால் மூடினோம் என்றார்கள். அந்த சல்பர் டை ஆக்ஸைடு ஸ்டெர்லைட்டிலிருந்து வெளிவரவில்லை. அதற்கு பக்கத்தில் இருந்து வந்த புகை என நிரூபிக்கப்பட்டது. அதனால் மீண்டும் ஸ்டெர்லைட் திறக்கப்பட்டது. 2017-ல் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து நான் க்ரீன் டிரிபியூனலில் வாதாடினேன். எனது வாதங்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானவர்களை பதற்றப்படுத்தியது.

அவர்களுக்காக தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் அளிக்கப்பட்ட விதிமீறல் அறிக்கையை அரசாணையாக மாற்றி ஆலையை மூடி உள்ளது. இது நிச்சயம் நிற்காது.

ஏற்கெனவே க்ரீன் டிரிபியூனலில் ஸ்டெர்லைட் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்து வழக்கு நடத்துகிறது ஆணையம். ஆலைமூடல் உத்தரவை எதிர்த்து மறுபடியும் க்ரீன் டிரிபியூனலில் வழக்கு நடத்த ஸ்டெர்லைட் விரும்பவில்லை. உயர்நீதிமன்றத்தில் அரசின் ஆலைமூடல் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர ஸ்டெர்லைட் தீர்மானித்துள்ளது'' என்றார்.

பிரபல கம்பெனிகள் விவகார வழக்கறிஞரும் தி.மு.க. பிரமுகருமான வில்சன், ""ஆலைமூடல் அரசாணையை அரசு பிறப்பிக்கும் போது தொழிற்சாலை தொடர்பாக வந்த புகார்களை விசாரித்து ஆராய்ந்து முடிவெடுக்கவில்லை. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவுற மாதிரி அழு என உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு பிறப்பித்த இந்த உத்தரவு ஸ்டெர்லைட் ஆலைக்குத்தான் சாதகமாக அமையும். பொதுமக்கள் நலனுக்கு வெறும் வாயசைப்பு ஆதரவு மாதிரி இந்த உத்தரவு அமைந்துள்ளது'' என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் இயங்கினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் இருந்து ஸ்டெர்லைட்டை விரட்டியது மாதிரி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தால் என்னாகும் என கேட்டதற்கு ""அப்படி ஏதாவது செய்தாலொழிய தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள சட்டத்தினால் ஸ்டெர்லைட் மறுபடி வருவதை தடுக்க முடியாது'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய வழக்கறிஞர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

மறுப்பு!

hகடந்த நக்கீரன் (ஜூன் 6-8) இதழில், "டெல்லி ஸ்டார் ஓட்டலில் ஸ்டெர்லைட் நடத்திய சதி ஆலோசனை' என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த செய்தி குறித்து நக்கீரனிடம் விளக்கமளித்த தமிழக முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர், ""கட்டுரையில் என்னைப் பற்றி தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எனது சொந்த ஊர் தூத்துக்குடி அல்ல. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. நான் ஸ்டெர்லைட்டுக்கு ஆலோசகராகவும் இல்லை. டெல்லிக்கும் செல்லவில்லை. யாருடனும் எந்த ஆலோசனையும் செய்யவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்பு யாரிடமும் பேசவில்லை. அடுத்தநாள் 23-ம் தேதி காலையில் பனிமயமாதா கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு அடுத்தநாள் திரும்பிவிட்டேன்'' என்று அழுத்தமாக மறுத்தார்.