ந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ள கும்பலிடமிருந்து மாதம் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு கண்டுங்காணாமலிருக்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரியால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertisment

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன், கோவில் நிலங்களின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுப்பது, பழைய கோவில்களை சீரமைப்பது, குடமுழுக்கு நடத்துவது, காணாமல் போன கோவில் சிலைகளை மீட்பது, கோவில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முன்னெடுப்புகளை சிறப்பாக செய்து வருகிறார்.

Advertisment

sc

இதுவரை, ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல, கடத்தப்பட்ட 980 சுவாமி சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. கோவில் சொத்துகள் மூலம் வரவேண்டிய வாடகைப் பாக்கியும் சுமார் ரூ.2,390 கோடி அளவுக்கு வசூலித்துள்ளார்கள். இப்படியாக இந்து அறநிலையத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவரும் சூழலில், அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளன.

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின்கீழ் உள்ளது பெருந்துறையிலுள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான சர்வே எண் 787/1, 2, 3, 4, 5, 6 ஆகியவற்றில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 1982ஆம் ஆண்டிலிருந்து 4 ஏக்கர் நிலம் கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு லீசுக்கு விடப்பட்டது. இதில் மீதமுள்ள 2.5 ஏக்கர் நிலத்தையும் இவர்களே சேர்த்து எடுத்துக்கொண்டு, சுற்றி சுவரமைத்து அந்த பள்ளியின் விளையாட்டு மைதானமாக வைத்துக்கொண்டு 40 ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகிறார்களாம்.

Advertisment

ஆனால் அந்த நிலத்தின் பயன்பாட்டுக்காக வாடகையோ, வேறெந்த தொகையோ இதுநாள் வரையிலும் அரசுக்கு கொடுத்ததே கிடையாதாம். இந்த நிலம் நகரின் மத்தியிலுள்ளதால் இந்த நிலத்தின் மதிப்பு, அரசு மதிப்பீட்டின்படி 25 கோடி என்றும், மார்க்கெட் மதிப்பு 40 கோடி எனவும் சொல்லப்படுகிறது. அதன்படி பார்த்தால், மாதம் குறைந்தபட்ச வாடகையாக செலுத்தி னால்கூட மாதத்திற்கு லட்சக் கணக்கில் வாடகை செலுத்த வேண்டுமாம். ஆனால் அதனை அரசுக்கு செலுத்தாமலிருப்பதை கண்டுகொள்ளா திருப்பதற்காக, அங்குள்ள அறநிலையத்துறை இணை ஆணையர் மாதந்தோறும் 2 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு கண்டுங்காணாமல் இருந்துவருகிறாராம்.

இதற்கு எதாவது பிரச்சனை வந்தால், பள்ளியின் செயலாளரான சென்னியப்பனுக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்துவரும் வசந்த் என்பவர் உறவினராக இருப்பதால், அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சனை வரும்போதெல்லாம் அதிகாரிகளிடம் பேசி பிரச்சனையில்லாமல் காரியத்தை முடித்துவைப்பாராம். இதேபோல இவர்கள், சிப்காட்டுக்கு சொந்தமான இடத்தையும் கையகப்படுத்தி வைத்துள்ளனராம். இப்படி ஏராளமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதே இவர்களின் பணியாக இருந்து வந்துள்ளது. இதையும் ஏற்கனவே நக்கீரன் வெளியிட்டுள்ளது. தற்போது இந்து அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இது சம்பந்தமாக உயர்நீதிமன்றம் 09.09.2021ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் 40 வருடங்களாக 2.5 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தியதற்கு வாடகையும், மேலும் இந்த இடத்தை உடனடியாக அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் அங்குள்ள அற நிலையத்துறை இணை ஆணையரே மூடி மறைத்ததால் தான் இதுநாள் வரையிலும் பயன்படுத்திக்கொண்டி ருக்கிறார்களாம். இப்படி அரசுப் பணியில் இருந்துகொண்டு அரசை காக்கவேண்டிய இவர்களே குற்றங்களுக்கு துணை போனால் யார் தான் இவர்களைக் கேட்பது?

scc

இது குறித்து வழக்கறிஞர் சுபாஷ் ப.பா.மோகனிடம் கேட்டபோது, "இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அவர்களால் அந்த இடம் பயன்படுத்தப் பட்ட ஆண்டுகளுக்கான வாடகைத்தொகையை வசூல் செய்யவேண்டும். அதேபோல அந்த இடத்தையும் அரசு கையகப்படுத்த வேண்டு மென்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை செயல்படுத்தாமல் அங்குள்ள அதிகாரிகள் தாமதப்படுத்துவது ஏன்? இந்த மோசடிக் கும்பல், அறநிலையத்துறை இடத்தைக் காட்டி கூட்டுறவு சொசைட்டி மூலமாக பணத்தை வசூல் செய்து, மேலும் அரசுக்கு சொந்தமான சிப்காட் இடத்தையே கையகப்படுத்தியுள்ளார்கள். இதற்கு துணைபோகும் அதிகாரிகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் மேன்மேலும் இவர்களின் மோசடி தொடர்ந்துகொண்டே இருக்கும்'' என்றார்.

இதுகுறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதியிடம் கேட்டபோது, "இது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியவில்லை. இவ்விவகாரங்களை இ.ஓ. தனலட்சுமி தான் கவனித்துவருகிறார். அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதுபோன்ற சில அதிகாரிகளின் தவறுகளால் சிறப்பாக செயல்பட்டுவரும் அறநிலையத்துறை மீது அவப்பெயர் ஏற்படக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.