ஒருபக்கம் தர்மபுரி மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இன்னொரு புறம் அரூர் அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் விசாரணை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தர்மபுரி மாவட் டம் அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடியது தாய்-சேய் அவசர சிகிச்சை மையம். அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, சித்தேரி உள்ளிட்ட பகுதிவாழ்மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகை தருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அரூர் அரசு மருத்துவமனையில் 19 மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பத்துக்கும் குறைவான மருத்துவர்களே நாள்தோறும் சுழற்சிமுறையில் பணியில் உள்ளதாகவும், மருத்துவர்கள் பற்றாக்குறையால் நாள்தோறும் காலை நேரங்களில் 9 மணிக்குப் பிறகு அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருகை தருவதாகவும் நோயாளிகள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் பணி வழங்குவதில் இரு மருத்துவர்களிடையே சமீபத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அரூர் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் குறிப்பிட்ட ஐந்து மருத்துவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பணி வழங்குவதாகவும் அவர்கள் ஐந்து பேரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம் எனவும், அதுகுறித்து மருத்துவர் ஒருவர், மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் கேட்டதாகவும், அதற்கு, "நான் அப்படித்தான் பணி வழங்குவேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள்'’என்று வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.
முன்னாள் அமைச்சர் அன்பழகனுடனான நெருக்கத்தை வைத்துக்கொண்டு 8 வருடங்களாக ராஜேஷ்கண்ணன் என்பவர் பொறுப்பு மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். வருகைப் பதிவேடு முதற்கொண்டு அனைத்தையும் தன்வசம் வைத்துக்கொண்டு தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வாராம் அவர். அதற்காக அவர் சார்ந்துள்ள சமூகத்தைச் சார்ந்த 5 மருத்துவர்களைக் கையில் வைத்துக்கொண்டு அவர்களை மட்டுமே பணியிலமர்த்திவிட்டு மற்றவர்களுக்கு பணியே வழங்குவதில்லையாம்.
இவருக்கு தர்மபுரியில் நிசாந்த் மருத்துவமனை மற்றும் ஜி.கே. எழில் மருத்துவமனை உள்ளதாம். இந்த மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகளைக் கொண்டுசென்று சிகிச்சையளித்து வருகிறார்களாம். அதற்காக அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செல்கிறாராம். இந்த விவரங்களை மற்ற மருத்துவர்கள் இருந்தால் தட்டிக்கேட்பார்கள் என்பதற்காக அவர் களைத் தொடர்ந்து பணியில் அமர்த்தாமல், இடையூறில் லாத வகையில் அவ்வப்போது பணியில் அமர்த்தி வருகிறாராம்.
அமைச்சர் தயவால், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஆட்டம் போட்டாரென்றால் தற்போது தி.மு.க. ஆட்சி வந்தபிறகும் மாறவில்லையாம். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆர்த்தோ டாக்டர் ராஜகணேஷ் என்பவர், "பணியைச் செய்யவிடாமல் எதற்காக என்னைத் தடுத்துவருகிறீர்கள். தயவுசெய்து என்னுடைய பணியைச் செய்யவிடுங்கள்''’என அவரிடம் கேட்டுள்ளார். இதில்தான் சச்சரவு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மருத்துவர் ராஜகணேஷ், இதுகுறித்து தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதனடிப் படையில் இணை இயக்குனர் சாந்தி, தகராறில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் 03-06-2023 அன்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மருத்துவமனையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டபோது, “"இங்குள்ள நோயாளிகளை 24 மணி நேரமும் அவர்களின் மருத்துவமனைக்கு வரச்சொல்வது என ஏகப்பட்ட அட்டூழியம் நடக்கிறது. உயரதிகாரிகளே உடந்தையாக இருக்கிறார்கள்''’ என்றனர்.
இணை இயக்குனர் சாந்தியோ, "இது சம்பந்தமாக விசாரணை செய்ததாகவும் விசாரணை அறிக்கையை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தர்மபுரி ஆட்சியர் முடிவு செய்வார்''’என்றும் தகவலளித்தார்.
சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “"நடந்தது குறித்து விசாரித்து, நிச்சயம் நீங்கள் சொல்வதுபோல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.