ஆங்கிலேயர் காலத்தில் தங்களுக்கு வரிவசூல் செய்து கொடுக்கவும், ஆங்கிலேய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளை நிர்வகித்து வெள்ளையர்களின் பிரதிநிதியாக செயல்படவும் ஏற்படுத்திய ஜமீன்தார்களில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி கடந்த மே 24-ஆம் தேதி மறைந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zameen.jpg)
நாடு சுதந்திரமடைந்த பிறகும் ஜமீன்தாரி முறை நடைமுறையிலிருந்தது. இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பேற்றவுடன் 1952-ல் ஜமீன்தாரி முறையை ஒழித்து அவர்களின் ஆளுமையிலிருந்த நிலங்களை அரசுடமையாக்கினார். ஜமீன்தார்களின் வாழ்வாதாரத்துக்கு அவர்களுக்கு மானியம் வழங்க ஏற்பாடுகளைச் செய்தார். இந்திரா காந்தியின் ஜமீன்தாரி ஒழிப்புமுறைக்கு முன்பே ஜமீனாக முடிசூட்டப்பட்டதால் முருகதாஸ் ஜமீன்தாராக நீடித்துவந்தார்.
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சுமார் முப்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன. சிங்கம்பட்டி ஜமீனில் மாஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு முண்டந்துறைப் பகுதிகள் அடக்கம். ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, இலங்கையின் கண்டி நகரில் பயின்றவர். கல்வியில் தேர்ச்சிபெற்ற முருகதாஸ் தீர்த்தபதி, ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டவர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடத்தியிருக்கிறார்.
தனது நிர்வாகத்திற்குட்பட்ட மலைமீதுள்ள முண்டந்துறையின் வனப்பகுதியின் தாமிரபரணிக் கரையோரமிருக்கும் சொரிமுத்தையனார் ஆலயத்தை விரிவுபடுத்தி ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டார். அந்த ஆலயத்தின் பரம்பரை அறங்காவலராகவும் திகழ்ந்துவந்தார். ஜமீனுக்குட்பட்ட விவசாய நிலங்களை ஏழை விவசாய மக்களுக்கு சொற்ப அளவிலான தொகையின் அடிப்படையில் குத்தகைக்குக் கொடுத்து வேளாண் உற்பத்தியைத் தொடங்கி வைத்தவர் முருகதாஸ் தீர்த்தபதி.
ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி காலத்தில், அவர் தன் கல்வியறிவைக் கொண்டு விவசாய உற்பத்தியைப் பெருக்கி ஜமீனையும், ஜமீன் மக்களையும் வளம்பெறச் செய்தவர் என்கிறார் சிங்கம்பட்டி ஜமீனில் அடங்கிய மணிமுத்தாறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சிவன்பாபு.
88 வயதுடைய ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அண்மை நாட்களாக உடல் நலம்குன்றி அரண்மனையில் சிகிச்சையிலிருந்தார்.
ஜமீன்தார் மறைவையொட்டி அவரது உடலுக்கு உறவினர்கள், ஊர் மக்கள், அரசியல் பிரமுகர்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.
திவான் பகதூர் பயன்படுத்திவந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்திவந்த உடைவாள், கத்திகள், பல்லக்குகள், ஆங்கிலேயர் அளித்த பரிசுகள் மற்றும் பல பழங்காலப் பொருட்களை உள்ளடக்கிய அருங்காட்சியகத்தை சிங்கம்பட்டி அரண்மனையில் முருகதாஸ் அமைத்துள்ளார். இவற்றைப் பார்வையிட மக்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுநலனிலும், தமிழர் பண்பாட்டு வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட தமிழகத்தின் கடைசி ஜமீன்தார் என்னும் பெருமையோடு முருகதாஸ் தீர்த்தபதி தன் இன்னுயிரை நீத்துள்ளார்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-05-27/zameen-t.jpg)